tamilnadu epaper

இப்படியும்

இப்படியும்

மூன்றாவது முறையாக மண்டபத்தின் வாசலுக்கு வந்து நின்றான் கோபாலன். யாரும் வரவில்லை. ஸ்கூட்டி வண்டிப் பெட்டியைத் திறந்து ஒருமுறை அழைப்பிதழைப் பார்த்தான். மாலை 6 மணியிலிருந்து 9 மணிவரை வரவேற்பு என்றுதான் போடப்பட்டிருந்தது.

மணி எட்டாகியிருந்தது. கோபாலனுக்குச் சற்றே எரிச்சல் வந்தது. 

தெருப்பழக்கம். பத்தாண்டுகள் பழக்கம். பழக்கத்திற்காகப் பார்க்கவேண்டும். முருகனின் மகன் கல்யாணம். காதல் கல்யாணம். யாரையே கட்சியில் இருந்து இளைய அரசியல்வாதியைக் கூப்பிட்டிருந்தார்கள்.

          ஆறரை மணிக்கு ஒருதரம், ஏழு மணிக்கு ஒரு தரம் இப்போது எட்டு மணிக்கு. எரிச்சல் வராதா. சொன்னபடி வரவேண்டும். கொஞ்சம் தாமதமாகலாம். ஆனால்.. கோபாலன் நிற்பதைப் பார்த்துவிட்டு முருகனின் மனைவி ஓடிவந்தாள். அண்ணே.. கோவிச்சுக்காதீங்க.. ஊர்வலமா வர்றாங்களாம்.. இன்னும்அரைமணிநேரம் ஆகும்ணே..

        எதுவும் பேசவில்லை.

         எதிரே பெட்டிக்கடையில் மொய்க்கவர் வாங்கிக்கொண்டு வாயில் பற்ற வைத்த சிகரெட்டோடு நின்றிருந்த தனபாலனைப் பார்த்தான் கோபாலன். அவன் அருகே போய்.. கோவிச்சுக்காதீங்க தனபால் மூணு தடவை வந்துட்டேன்.. அவசர வேலை இருக்கு.. எனக்காக நீங்க இந்த மொய்க்கவரக் கொடுத்துடுங்க என்றபடி அவனிடம் 500 ரூபாய் என்று எழுதப்பட்ட மொய்க்கவரைத் தந்துவிட்டு, வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டான்.

 மறுநாள் காலையில் எப்பொது பொழுது விடியும் என்று காத்திருந்தவன் போல முருகன் வாசலில் நின்றிருந்தான். வா.. முருகா.. என்றான் கோபாலன்.

 

 

 

       அண்ணே.. மன்னிச்சுடுங்க.. நாங்க செஞ்சது தப்புத்தான். ரொம்ப செல்லம் கொடுத்ததால இந்தளவுக்குக் காதல் கல்யாணம் வரை வந்துடுடிச்சி. அதுவும் போயிட்டு போவுதுன்னு எல்லாம் பண்ணி வச்சா.. நேத்து ஊர்வலமா வரேன்னுட்டு.. நிறைய பேர் கோவிச்சுக்கிட்டுப் போயிட்டாங்கண்ணே.. நிறைய சாப்பாடு வீணாயிடிச்சி.. நீங்க வேற மூணுதடவ வந்துட்டுப்போயிட்டிங்க.. நாங்க செஞ்சது தப்புண்ணே.. இந்தாங்கண்ணே.. உபசரிக்கமுடியாத நான் மொய்க்கவர் மட்டும் வாங்கறது தப்புண்ணே.. நேத்து உங்களமாதிரி வந்துட்டு திரும்புனவங்க.. கோவிச்சுக்கிட்டுப் போனவங்க. எல்லாருடைய மொய்க்கவரையும் திருப்பிக் கொடுத்துட்டு வரேண்ணே.. இத வாங்கிக்கங்க.. இல்லாட்டி என்னோட மனசாட்சி என்னைக் கொன்னுடுண்ணே.. நாலு பேர் வாழ்த்திதான் எம்புள்ளங்க நல்லா வாழணும்.. வாழ்த்துதான் முக்கியம்ணே.. பணம் இல்லை.. கொடுத்துவிட்டுப் படியிறங்கிப் போனான் முருகன். இப்படியும் இருப்பார்களா? முதன்முதலாக வித்தியாசமான

அனுபவம்.