மனித உயிரினங்களில் நோய்கள் அண்டாமல் இருக்கும் வழிமுறைகளைப் பற்றியும், உலக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அனுசரிக்கப்படும் தினங்களில் ஒன்று தான் ‘உலக சுகாதார தினம்!
1948 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 7ஆம் தேதியன்று உலக சுகாதார அமைப்பு (World Health Organaisation) தோற்றுவிக்கப்பட்டது. 1950 ஆம் ஆண்டில் இருந்து அந்த தினத்தை ‘உலக சுகாதார தினம்’ என அனுசரிக்கிறார்கள். மக்கள் அனைவரும் சுகாதாரமான வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை வலியுறுத்துவதும்தான் இதன் முக்கிய நோக்கம் ஆகும். ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு கருத்து முன்வைக்கப்பட்டு அது வலியுறுத்தப்படுகிறது. இதன் பொது கருத்து Health For All என்பதாகும்.
பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளை ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரப்பும் உயிரிகளை வெக்டார் என்கிறார்கள். சரியான உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் கொசு ஒரு ‘வெக்டார்.’ மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சலை உருவாக்கும் கிருமிகளை ஒரு நபரிடம் இருந்து இன்னொரு (Vector Prone Disease) நபருக்குப் பரப்புவதால் மேற்படி நோய்களை ‘வெக்டார் ப்ரோன் நோய்கள்’ எனலாம். இப்படிப்பட்ட வெக்டார் மூலம் உருவாகும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வுக்குக் கூடுதல் முக்கியத்துவத்தை இந்த நாளில் வலியுறுத்துகிறார்கள்.
இவை தவிரப் பெருவாரியான நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை ஊட்டுவது, நோய் பரவாமல் தடுக்கும் முறைகளை விவரிப்பது, நோய் வந்துவிட்டால் எடுத்துக்கொள்ள வேண்டிய சரியான சிகிச்சை முறைகளைப் பற்றி எடுத்துரைப்பது போன்றவற்றை இந்தத் தினத்தில் செய்கிறார்கள்.