tamilnadu epaper

எங்க குலதெய்வம் திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள்*

எங்க குலதெய்வம்  திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள்*

திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். இது செங்கல்பட்டு மாவட்டம் சென்னையிலிருந்து புதுச்சேரிவரை செல்லும் கிழக்குகடற்கரை சாலையில் கோவளம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் திருவிடந்தை எனும் கடற்கரை கிராமத்தில் உள்ளது. மூலவர் நித்ய கல்யாணப்பெருமாள், அகிலவல்லித் தாயார் ஆவர். மூலவரின் சன்னதிக்கு வலதுபுறத்தில் கோமளவல்லித்தாயாருக்கு ஒரு சன்னதியும், இடதுபுறத்தில் ஆண்டாளுக்கு ஓரு தனிச்சன்னதியும் உள்ளது. திருவரங்கப்பெருமாளுக்கும் ஓரு தனிச்சன்னதி உள்ளது. தலவரலாற்றின்படி மூலவர் நித்ய கல்யாணப்பெருமாளான மகாவிஷ்ணு தினம் ஒரு பெண்ணாக வருடம் முழுவதும் திருமணம் செய்ததாகவும் அதனாலே மூலவர் நித்ய கல்யாணப்பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். சிறப்புகள்

திருமணம் விரைவில் நடைபெறவேண்டி பலரும் இக்கோயிலுக்கு வருவது இக்கோயிலின் முக்கிய சிறப்புகளில் ஒன்றாகும்.  

 

 இறைவன் : நித்திய கல்யாண பெருமாள் ,லட்சுமி வராக பெருமாள்

தாயார் : கோமளவல்லி தாயார்

தல விருச்சம் :

தீர்த்தம் : வராஹ தீர்த்தம் , கல்யாண தீர்த்தம்

கோலம் : வீற்றிருந்த கோலம்

விமானம் : கல்யாண விமானம்

புராண பெயர் : வராகபுரி ,திருவிடந்தை

ஊர் : திருவிடந்தை

மாவட்டம் : செங்கல்பட்டு , தமிழ்நாடு

மங்களாசனம்: திருமங்கையாழ்வார்

 

108 திவ்ய தேசங்களில் இக்கோயில் 63 திவ்ய தேசமாகும் ,தொண்டை மண்டல திவ்ய தேசம் .

இக்கோயில் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய மிக அழகான பெரியதும் இல்லாமல் சிறியதும் இல்லாமல் நடுத்தரமான கோயிலாகும் .

பல்லவ மன்னவர்களால் கட்டப்பட்ட கோயில் , 6 ஆம் நூற்றாண்டில் இருந்து 9 நூற்றாண்டு காலத்தை சேர்ந்த கோயில் , 7 நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டு 11 நூற்றாண்டில் சோழர்களால் பராமரிப்புகள் செய்யப்பட்டுள்ளது . *நடை திறக்கும் நேரம்*

06:00 AM IST - 12:00 PM IST

03:00 PM IST - 08:00 PM IST *நடை சாற்றும் நேரம்*

12:00 PM IST - 03:00 PM IST  

 *தல வரலாறு*

 

திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அரசனின் மகன், பலி ஆட்சி புரிந்து வந்தார். மாலி, மால்யவான், சுமாலி ஆகிய அரக்கர்கள், பலியிடம் வந்து, தேவர்களை வீழ்த்துவதற்கு உதவி கேட்டனர். இச்செயலுக்கு உடன்பட பலி மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து, தேவர்களுடன் தனியாகப் போரிட்ட அரக்கர்கள் தோற்றனர். மீண்டும் பலியின் உதவியை அரக்கர்கள் நாடியதும், அவர்களுக்கு உதவி புரிய பலி சம்மதித்தார். அதன்படி தேவர்களுடன் போரிட்டு, அரக்கர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தார் பலி.

 

தேவர்களை வீழ்த்தியதால், பலிக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. தோஷத்தில் இருந்து விடுபட, பலி, திருமாலை நோக்கி இத்தலத்தில் தவம் புரிந்தார். பலியின் தவத்தில் மகிழ்ந்த திருமால், வராஹ அவதாரத்தில் அவருக்கு காட்சி கொடுத்து, தோஷம் போக்கினார்.

 

 

*நித்ய கல்யாணம்*

 

ஒரு சமயம் சரஸ்வதி ஆற்றங்கரையில் சம்புத் தீவில், குனி முனிவரும் அவரது மகளும், சொர்க்கம் செல்வதற்காக தவம் மேற்கொண்டனர். இதில் முனிவர் மட்டும் சொர்க்கம் புகுந்தார். திருமணம் ஆகாததால் அப்பெண்ணால் சொர்க்கம் புக முடியாது என்று கூறிய நாரத முனிவர், அங்கிருந்த முனிவர்களிடம் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார்.

 

காலவரிஷி என்ற முனிவர் அப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தன. பெண்களின் தாய் சிறிது காலத்தில் இறைவனடி சேர்ந்ததால், அவர்களை வளர்க்க காலவரிஷி மிகவும் சிரமப்பட்டார். கால ஓட்டத்தில், பெண்கள் வளர்ந்து, திருமண வயதை எட்டிவிட்ட நிலையில், தனது பெண்களை ஏற்றுக் கொள்ளும்படி திருமாலை வேண்டினார் காலவரிஷி. ஆனால் திருமால் வரவில்லை.

 

ஒருநாள் திவ்ய தேச யாத்திரை செல்ல உள்ளதாகக் கூறி ஒரு பிரம்மச்சாரி காலவரிஷியின் குடிலுக்கு வந்தார். வந்த இளைஞர், திருமாலைப் போன்று தெய்வீக அழகு நிறைந்தவராக இருந்ததால், அவருக்கே தனது 360 பெண்களையும் மணமுடித்துக் கொடுக்க முடிவு செய்தார் காலவரிஷி. தனது எண்ணத்தை இளைஞரிடம் காலவரிஷி தெரிவித்ததும், இளைஞரும் தினம் ஒரு பெண்ணை மணந்து கொண்டார். கடைசி நாளில் தனது சுயரூபம் காட்டினார் இளைஞர்.

 

அவர்தான் வராஹமூர்த்தி வடிவில் வந்து அருள்பாலித்த நாராயணன். 360 பெண்களையும் ஒருவராக்கி, தன் இடப்பாகத்தில் வைத்துக் கொண்டு சேவை சாதித்தார். திருமகளை தன் இடப்பாகத்தில் ஏற்றுக் கொண்ட பெருமாள் என்பதால் இவ்வூர் திருவிடவெந்தை என்றும் பின்னர் திருவிடந்தை என்றும் அழைக்கப்படுகிறது.

 

அகிலவல்லி நாச்சியார்

 

360 பெண்களையும் ஒரே பெண்ணாகச் செய்தமையால், இத்தல தாயாருக்கு அகிலவல்லி நாச்சியார் என்ற பெயர் ஏற்பட்டது. 360 கன்னியரில் முதல் பெண் கோமளவல்லி என்ற பெயரைத் தாங்கியிருந்ததால், தனிசந்நிதியில் அருள்பாலிக்கும் தாயார் கோமளவல்லி என்று அழைக்கப்படுகிறார். பெருமாள் மட்டுமே நாயகர், நாம் அனைவரும் நாயகி என்பதே இக்கோயிலின் தத்துவம்.

 

இத்தலத்தில் உள்ள பெருமாள் தனது ஒரு திருவடியை பூமியிலும், மற்றொன்றை ஆதிசேஷன் மற்றும் அவரது மனைவி மீது வைத்துக் கொண்டும், அகிலவல்லித் தாயாரை இடது தொடையில் தாங்கிக் கொண்டும் வராக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 

 *திருவிழாக்கள்*

 

தினந்தோறும் இத்தல பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

 

ராகு - கேது தோஷம், சுக்ர தோஷம், திருமணத் தடை உள்ளவர்களுக்குரிய பரிகாரத் தலமாக இத்தலம் விளங்குகிறது. பெருமாளின் தாடையில் உள்ள பொட்டை தரிசித்தால் திருஷ்டி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

 

R.Radhika,

B 201,Geethanjali colony,

Annanagar,

Chennai-40