tamilnadu epaper

எங்கள் குல தெய்வம் புத்தூர் வராஹ பெருமாள்

எங்கள் குல தெய்வம் புத்தூர் வராஹ பெருமாள்

 திருமாலின் அவதாரங்களில் தலைசிறந்த அவதாரமாக கருதப்படுவது வராஹ அவதாரமாகும் .முன் காலத்தில் இரண்யாசன் என்ற கொடிய அசுரன் ஒருவன் தனது வலிமையால் பூமியை பெருங்கடலில் மூழ்கச் செய்து, திருமால் பன்றி உருவத்தோடு அவதரித்து கடலுக்குள் சென்று அந்த சூரனை கொன்று பாதாள உலகத்தில் இருந்து பூமியை தனது கோரைப்பல்லான கோட்டினால் குத்தி எடுத்துக்கொண்டு வந்து பழைய நிலையில் இருத்தினான் என்பது வராஹ புராண வரலாறு.

                 ஆதி காலத்தில் பிரளய வெள்ளத்தில் அழுந்திய பூமியை மேலே எடுத்து வந்தபடியால் வராகப் பெருமாளை ஆதி வராகன் என்றார் திருமங்கை ஆழ்வார் .திருச்சி புத்தூர் அக்ரஹாரத்தில் இந்த ஆதி வராஹ உருவத்தோடு பெருமாள் கோவில் கொண்டு எழுந்தருளில் உள்ளார். பொதுவாக வராகப் பெருமாள் கோயில்களில் மிகவும் குறைவு. ஏதோ ஒரு சில கோயில்களில் வராக பெருமாள் இருந்தாலும் வராக பெருமாளை பிரதான தெய்வமாக கொண்ட கோவில்களை காண்பது அரிது. திருவிடந்தை ,ஸ்ரீமுஷ்ணம் முதலான தலங்களில் வராக பெருமாள் கோயில்கள் இருப்பினும் கிராம கோயில்களில் அதுவும் அக்ரஹாரகங்களில் உள்ள இந்த புத்தூர் அக்ரஹாகாரத்தை தவிர உலகில் வேறு எங்கும் ஆதிவராக பெருமாளுக்கு கோயில்கள் இருப்பதாக தெரியவில்லை. இந்த ஊருக்கு வல்மீகபுரி சேத்திரம் என்று பெயர் .வல்மீகம் என்றால் புற்று. புற்று நிறைந்த ஊராகவும் புற்றிலிருந்து வராத பெருமான் தோன்றியதாகவும் ,புற்றூர் புத்தூர் என்று பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆதி காலத்தில் திருவெள்ளறை பகுதியிலிருந்து அந்தணர்கள் இந்த ஊருக்கு குடி பெயர்ந்து வந்த போது ஸ்வேத வராகத்து உருவாக தோன்றியது தங்களது குலதெய்வமான திருவெள்ளறை புண்டரிகாக்ஷப் பெருமானை மனதிலே கொண்டு இங்கு வராஹ பெருமாளுக்கு கோயில் எழுப்பியதாக கூறுவார்கள். எப்படி இருந்தாலும் இந்த கோயில் சோழ அரசும் ஒருவனது புடைப்பு சிற்பம் உள்ளதால் அரசர்களால் வணங்கப்பட்ட பிரதானமான கோயில் இது என்பது புலனாகிறது.

             இந்த கோயிலில் ஆதிவராகப் பெருமாள் வீற்றிருந்த திருக்கோலத்தில் மேற்கு திசையில் கிழக்கே நோக்கிய வண்ணம் நான்கு தோள்களோடு காட்சி தருகிறார் .சங்கு சக்கரங்களை இரண்டு கைகளாலும் பூமாதேவியை இரண்டு கைகளாலும் தாங்கிக் கொண்டுள்ளார் .பெருமாள் பூமி தேவியை தனது மடியில் உட்கார வைத்துக் கொண்டு அவளது பாதங்கள் இரண்டையும் தனது வலது கையால் ஏந்தி கொண்டு இடது கையால் அவளை இருக்க பிடித்துக் கொண்டு இடது திருவடி மடக்கி வலது திருவடி கீழே நீட்டி காண்போர் மனதை கவரும் படி மிக அழகாக காட்சி தருகிறார். தனது வலக்கரத்தால் தாமரை மலரை ஏந்தியும் இடதுகரத்தால் வராகனின் இடது திருக்கரத்தை பற்றியும் வீற்றிருக்கிறாள். இந்தக் கோயிலில் சக்கரத்தாழ்வார் ஆஞ்சநேயர் ஆகியோருக்கு தனி சன்னிதிகள் உள்ளன. முன் மண்டபத்தில் காளிங்க நர்த்தன கிருஷ்ணரும் ஆண்டாளும் ஆழ்வார்களும் உள்ளனர் .தினமும் பெருமாளுக்கு ஒவ்வொரு வேலையும் பூஜை நடைபெறும் போது ஆழ்வார்களின் தமிழ் வேதமான 4,000 திவ்ய பிரபந்தம் தவறாமல் ஓதப்படுவது இந்த கோயிலின் தனி சிறப்பாகும். தமிழ் வருட பிறப்பு ,வராக ஜெயந்தி, ஸ்ரீ ராமநவமி ,கஜேந்திர மோட்சம், பஞ்சராத்திர ஸ்ரீ ஜெயந்தி, உரியடி புரட்டாசி சனிக்கிழமைகளில் ,விஜயதசமி, கோயில் திருக்கார்த்திகை ,வைகுண்ட ஏகாதேசி ஆகிய நாட்களில் பெருமாளுக்கு திருவீதி புறப்பாடுகள் நடைபெறுகின்றன.

                இந்த ஆதி வராகனுக்கு ஞானபிரான் என்றே பெயர் அனைவருக்கும் நல்ல அறிவை கொடுக்கும் தெய்வமாக விளங்குகிறார் இவர். வராக பெருமானை வணங்குவோர் நல்ல கல்வி, உயர்ந்த பதவி ,நிறைந்து செல்வம் நல்ல மக்கள் பேறு,நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் ,ஆகியவற்றை பெற்று வையகத்தில் வாழ்வாங்கு வாழலாம் என்று புராணங்கள் இயம்புகின்றன. கருட புராணத்தில் எவன் ஒருவன் வராக பெருமானை ஒரு முறை வணங்குகிறானோ அவனை நான் எப்பொழுதும் வணங்கிக்கொண்டே இருப்பேன் என்றான் எமன். எமனது பிடியிலிருந்து தப்புவதற்காகவாவது அனைவரும் தமது வாழ்நாளில் ஒரு தடவையாவது இந்த ஆதி வராகனை அவசியம் வணங்க வேண்டும்.

                 திருவின் மணாளனான எம் பெருமானுடைய அவதாரங்களில் தலைசிறந்த அவதாரம் ஸ்ரீ வராக அவதாரமாகும். ஆழ்வார்கள் அனைவரும் ஆதிவராக அவதாரத்திலேயே மிகவும் ஈடுபட்டனர் .வராகப் பெருமாள் தம்முடைய அவதார காலத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி பிற்காலத்தவர்களும் தன்னை வணங்கி உயர்வு பெற வேண்டும் எனும் கருணையினாலேயே ஸ்ரீவில்லிபுத்தூரில் மற்றொரு வடிவமோ என்று எண்ணும் படி விளங்கும் திருச்சி புத்தூர் அக்ரஹாரத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளார்.

திருச்சி புத்தூர் வராஹப்பெருமாளை வாழ்நாளில்‌ஒருமுறையாவது கண்டு வணங்குவோம் .வாழ்வில் எல்லா வளத்தையும் பெற்று வாழ்வோம்.

கட்டுரை எழுதியவர்: கவி -வெண்ணிலவன் ,மணமேல்குடி.