tamilnadu epaper

எங்கள் குலதெய்வம் அனுமந்தீர்த்தம் ஶ்ரீஅனுமன் ஆலயம்:

எங்கள் குலதெய்வம் அனுமந்தீர்த்தம் ஶ்ரீஅனுமன் ஆலயம்:

தருமபுரி மாவட்டத்திற்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் இடையில் அமைந்துள்ளது அனுமந்தீர்த்தம். அரூரில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 10 கி.மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது அனுமந்தீர்த்தம் எனும் ஊர்.

 

ஊர் பெயருக்கு ஏற்றவாறு இங்கு ஶ்ரீஅனுமன் கோவில் அமைந்துள்ளது. அருகிலேயே ஶ்ரீஅனுமந்தீஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளது.

 

இலங்கையில் இருந்து ராவணனை வதம் செய்து சீதையை மீட்டு வந்தார் ராமன். இதனால் ராமனுக்கு தோஷம் பிடித்தது. இந்த தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் ராமன் மணலால் சிவலிங்கத்தை உருவாக்கி அதற்கு பூஜை செய்து தனக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்க எண்ணினார்.

 

பூஜை செய்ய எண்ணியபோது அங்கு தண்ணீர் இல்லை. சுற்றிலும் எங்கு தேடியும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் அங்கிருந்த அனுமனை ராமன் அழைத்து , நான் அம்பு எய்கிறேன், அந்த அம்பு எங்கு விழுகிறதோ அங்கு நீர் சுரக்கும். அந்த நீரை எடுத்து கொண்டு வா என்று அனுமனை ராமன் அனுப்பினார்.

 

ராமன் எய்த அம்பு இரண்டாக பிரிந்து ஒன்று தீர்த்தமலையிலும், மற்றொன்று தீர்த்தமலையின் மேற்கே பத்து கி.மீ தொலைவில் இருந்த பாறையின் மீது விழுந்தது. அங்கு நீர் சுனை போல் தோன்றி வற்றாமல் வந்து கொண்டிருந்தது. 

 

அங்கு அனுமன் சென்று நீர் எடுத்து வந்து ராமனிடம் கொடுத்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அனுமன் வந்து சென்ற இடம் என்பதால் அதற்கு அனுமந்தீர்த்தம் என்ற பெயர் உருவானது.

 

இப்போதும் அனுமந்தீர்த்தத்தில் உள்ள ஆற்றின் நடுவே வற்றாத நீர் வந்து கொண்டே இருக்கிறது. தீர்த்தத்தில் குளித்து விட்டு மேலே ஏறினால் அனுமன் கோவில் உள்ளது. இங்கு அனுமன் சுயம்புவாக தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அனுமனை தரிசனம் செய்து விட்டு ஐம்பது மீட்டர் நடந்து சென்றால் ஶ்ரீஅனுமந்தீஸ்வரரை தரிசனம் செய்யலாம்.

 

தீர்த்தமலைக்கு செல்வதற்கு முன்பாக அனுமந்தீர்த்தத்தில் பக்தர்கள் குளித்து விட்டுதான் தீர்த்தமலைக்கு செல்வார்கள். தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

 

ஆடி மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். ஆடிப்பெருக்கு தினத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

 

இங்கு வந்து அனுமனை வழிபட்டால் வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற்று இன்பமாக வாழலாம். அனுமன் கோவிலில் கொடுக்கப்படும் கயிற்றை கையில் கட்டினால் தீய சக்திகள் நம்மை நெருங்காது.

 

தினமும் ஆலயம் திறக்கப்படுகிறது. தினமும் 25 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அனுமனே பூலோகம் வந்து சென்ற கோவில் என்பதால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

   - வெ.சென்னப்பன்,

அரூர், தருமபுரி - 636903.