துர்க்கை புகழ்பெற்ற தமிழ் தெய்வம். துர்க்கை என்ற சொல்லுக்கு
வடமொழியில் 'வெல்ல முடியாதவள்' என்றும் தமிழில்
'வெற்றிக்கு உரியவள்' என்றும் பொருள். தீயவைகளை தனது
கைகளால் அழிப்பவள் என்பதால் துர்க்கை என்ற பெயர் வந்தது. மகிடாசுரமர்த்தினி,
தோத்திரம், துர்க்கா சப்தசதி முதலியன துர்க்கா தேவியின் புகழ்பாடும்
துதிப்பாடல்கள்.
மகிஷாசுரன் என்ற அரக்கன் மூவுலக மக்களையும் துன்புறுத்தி வந்தான்.
அவனது அட்டகாசத்தை பொறுக்க முடியாமல் அனைவரும் சிவனிடம்
முறையிட்டார்கள். சிவன், பெருமாள், பிரம்மா ஆகிய மூன்று கடவுள்களும்
தங்கள் சக்தியை ஒன்று சேர்த்து உருவாக்கிய தேவிதான் துர்க்கை. அவள்தான்
அந்த அரக்கனை சம்ஹாரம் செய்தாள்.
மகிஷாசுரனை வதம் செய்த அன்னை தனது சூலத்தை இங்குள்ள புஷ்கரணியில்
சுத்தம் செய்தாள். அதனால் இங்கு இருக்கும் தீர்த்தம் பாப விமோசன தீர்த்தம் என்று
அழைக்கப்படுகிறது. சூரனை சம்ஹாரம் செய்ததால் வந்த தோஷம் நீங்க அம்மன்குடியில்
வந்து லிங்கத்தை பிரதிஷ்டை செய்து 12 வருடம் கடும் தவம் இருந்தாள் அன்னை.
தனது தவத்திற்கு இடைஞ்சல் வராமல் இருக்கு விநாயகரையும் பிரதிஷ்டை
செய்தாள்.
12 ஆண்டுகள் தவம் முடிந்ததும் கைலாசநாதர் காட்சி தந்து தோஷம் நீங்கி
விட்டதாகவும் அன்னையை இங்கேயே இருந்து பக்தர்களுக்கு அருள்
புரியுமாறு பணித்தார். தனக்கான இடத்தை தேர்வு செய்து தவம் புரிந்து
குடிகொண்டதால் இந்த ஊருக்கு அம்மன்குடி என்ற பெயர் வந்தது.
கும்பகோணத்துக்கு கிழக்கே சுமார் 15 தொலைவில் உள்ளது அருள்மிகு
பார்வதி தேவி உடனுறை ஸ்ரீ கைலாசநாதர் கோயில். இங்கு தான் அன்னை
துர்கா பரமேஸ்வரிக்கு தனி சந்நிதி உள்ளது. கும்பகோணத்தில் இருந்து இவ்வூருக்கு
செல்ல நகரப்பேருந்து வசதி உள்ளது.
முதலாம் ராஜராஜ சோழனின் படைத்தளபதி கிருஷ்ணன் ராமன் பிரம்மாதிராயர்
இந்த ஊரைச் சேர்ந்தவர். இவர்தான் இந்த ஊரில் தங்கிய அம்பாளுக்கு கி.பி. 944 ஆண்டில்
கோயில் கட்டினார். இந்த அன்னையை வணங்கி அவர் பெற்ற
வெற்றிகள் ஏராளம். இதை அறிந்த மன்னர் ராஜ ராஜ சோழனும்
அவர் மகன் ராஜேந்திர சோழனும் அன்னையை வழிபட
தொடங்கினார்களாம். இத்தலம் ராஜராஜேஸ்வரம் என்றும்
தேவி தபோவனம் என்றும் அழைக்கப்படுகிறது. துர்கை இத்தலத்தில்
கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பாள். இது ஒரு தனி சிறப்பாகும்.
நவக்கிரகங்களுக்கு அதிபதியாக துர்க்கை இருப்பதால் நவக்கிரகங்களுக்கு
இங்கு தனி சந்நிதி கிடையாது. செவ்வாய் கிழமை சிறப்பு பூஜை
உண்டு. துர்காஷ்டமி அன்றுதுர்கை வீதி உலா வந்து மகிஷாசுரனை
வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.
செவ்வாய், அமாவாசை, அஷ்டமி, பெளர்ணமி நவராத்திரி தினங்களில்
கோயிலை வலம் வந்து வழிபடுபவர்களுக்கு திருமணத் தடை
ராகு, கேது தோஷங்கள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்க
திங்கள் கிழமையும், நோய் தீர, பகை விலக, வேலை கிடைக்க
செவ்வாய் கிழமை ராகு காலத்திலும் துர்கையை வழிபடவேண்டும்.
===
திருமாளம் எஸ். பழனிவேல்