tamilnadu epaper

எங்கள் குலதெய்வம் 'ஆகாச மாரியம்மன்' சிறப்பு

எங்கள் குலதெய்வம் 'ஆகாச மாரியம்மன்' சிறப்பு

கும்பகோணத்தில் இருந்து பத்து கி மீ தொலைவில் உள்ளது திருநறையூர் 

எனப்படும் நாச்சியார் கோவில். திருநறையூர் மகாலட்சுமி அவதரித்த தலம்.

நறை என்றால் தமிழில் தேன், மணம் என்னும் இரு பொருள்கள் உள்ளது. 

திருநறையூர் என்றால் தேன் நிறைந்த பூக்களும், மணம் கமழும் பொய்கைகள்

கலந்து மணம் வீசும் ஊர் என்பதாகும். இங்குள்ளது ஆகாச மாரியம்மன் கோவில். 

இத்தலத்தில் கருவறையில் அம்மனுக்கு விக்ரகம் எதுவும் கிடையாது. தீப ஒளியாக 

அம்பாள் குடிகொண்டு இருப்பதாக ஐதீகம். கருவறையில் தீபம் மட்டும் எரிந்து 

கொண்டு இருக்கும். வைகாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த வெள்ளிக்கிழமை 

தொடங்கி மிகச் சிறப்பாக ஆண்டுதோறும் திருவிழா நடைபெற்று வருகிறது.

 

 

600 வருடங்களுக்கு முன்பு கவுரவ குல கவரைச் செட்டியார்கள் குதிரை மீது வளையல்களை 

வைத்து நாள் கணக்கில் பல ஊர்களுக்கு சென்று வளையல் வணிகத்தில் ஈடுபட்டு 

வந்தனர். ஒருமுறை அவர்கள் சமயபுரத்தில் பங்குனி பெருவிழாவில் வணிகம் 

செய்தனர். தினசரி மல்லிகை, முல்லை மலர்களையும் மற்றும் வளையல்களையும் 

அம்பாளுக்கு சமர்ப்பித்து வணங்கிவிட்டு பிறகுதான் வியாபரத்துக்கு செல்வார்கள். 

அப்போது ஒரு நாள் அவர்களுடன் வந்த ஒரு பெரியவரின் கனவில் சமயபுரம் 

மாரியம்மன் இளம் பெண் வடிவில் தோன்றி தனது கைகளுக்கு வளையல் அணிவிக்க 

கோரினார். அவரும் அப்பெண்ணின் கைகளில் வளையல் அணிவிக்க முயன்ற போது 

அவையெல்லாம் உடைந்து கிழே விழுந்தன. திகைத்துப்போன அவர் 'அம்மா உன் 

அழகிய கைகளுக்கு போட வளையல்கள் என்னிடம் இப்போது இல்லை. என் ஊருக்கு 

வந்தால் அணிவித்து விடுகிறேன் என்றார். பெண் உருவில் வந்த அம்மன் அந்த 

பதிலைக் கேட்டதும் சிரித்தபடி மறைந்து போனாள். கண் விழித்து எழுந்த அந்த 

பெரியவர் தன்னுடன் வந்தவர்களை அம்மை நோய் தாக்கியிருப்பதை கண்டு 

திடுக்கிட்டார். அந்த சமயம் அங்கு வந்த கோவில் குருக்கள் அவரது உடைந்த வளையல்களுக்கு 

பதிலாக பொற்காசுகளை அளிக்க அம்மன் கனவில் வந்து உத்திரவிட்டதாக கூறினார். மேலும் 

அம்பாள் வந்து சென்றதுக்கு அடையாளமாக உடன் வந்தவர்கள் உடம்பில் முத்திரை 

பதித்ததாகவும் சொன்னார். அதுதான் அம்மையாக தெரிந்தது. அவர்களுக்கு  

அன்னையின் பிரசாதமான திருநீறு வழங்கினார். அதை வாங்கி

அவர்கள் தங்கள் உடலில் பூசியவுடன் அம்மை நோய் குணமடைந்தது. அச்சமயம் 

தன் கனவில் வந்தது சமயபுரம் மாரியம்மன்தான் என்பதை அந்த பெரியவர் உணர்ந்தார்.

உடன் வந்தவர்களிடம் தான் கண்ட கனவு பற்றி அவர் சொன்னதும் அனைவரும் 

பக்தி பரவசத்துடன் தாங்களும் அன்னையை தரிசிக்க வேண்டும் என்ற முடிவுக்கு 

வந்தார்கள். அனைவரும் மனமுருகி அன்னையிடம் வேண்டுகோள் வைத்தார்கள்.

அப்போது ஆகாயத்தில் தோன்றி பக்தர்களுக்கு அன்னை 

காட்சி தந்தாள். அவர்கள் பக்தி பரவசத்தில் ஆகாசமாரி, ஆகாசமாரி என்று போற்றி 

புகழ்ந்து வணங்கினார்கள். தங்கள் ஊருக்கு வந்து அருள வேண்டும் என்றும் 

கோரிக்கை வைத்தார்கள். உங்கள் ஊர் எதுவென்று அம்மன் கேட்க, தங்கள் ஊர் 

திருநறையூர் நாச்சியார்கோயில் என்றார்கள். உடனே அம்மன் தான் முல்லைக்கும் 

மல்லிகைக்கும் முன்கை வளையலுக்கும் ஆண்டுதோறும் வந்தருள்வேன் என்றார்.

 

 

அதன்படி ஆண்டுதோறும் வைகாசி மாதம் அமாவாசைக்கு பின்னர் வரும் வெள்ளிக்கிழமை 

இரவில் சமயபுரத்தில் இருந்து ஆகாச மார்க்கமாக நறையூர் என்ற நாச்சியார்கோயிலுக்கு 

வருகை தந்து வசந்தகால வைபவம் கண்டு அங்கு தேரோடும் திருவீதியின் ஈசானிய 

பாகத்தில் கோவில் கொண்டு அலங்காரவல்லியாக காட்சி தருகிறார். திருவிழா ஆரம்பமாகும் 

நாள் அன்று அரசலாற்றில் இருந்து செப்புக் குடத்தில் வைத்து கரகம் எடுத்து வந்து அதன் மேல் 

நாணல் கொண்டு திருநறையூர் செங்கழு நீர் விநாயகர் கோயிலில் வைத்து ஆகாச மாரியம்மனாக 

அலங்கரிக்கப்பட்டு புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து முக்கிய வீதிகளில் வலம் வந்து

 கோவிலை வந்தடையும். 13 நாட்கள் இங்கு தங்கிச் செல்லும் அம்மனுக்கு பக்தர்கள் 

மல்லிகை மலர்களையும் வளையல்களையும்காணிக்கையாக சமர்ப்பிக்கிறார்கள். 

13 ஆம் நாள் அம்மன் நின்ற கோலத்தில் தேரில் சமயபுரம் எழுந்தருள, விழா நிறைவு பெறும்.

 

 

இந்த திருவிழாவின் போது திருமணமாகாத பெண்கள், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் 

மற்றும் தங்கள் குடும்ப பிரச்சனைகள் தீர்க்க வேண்டிக்கொள்வோர் என்று 

ஏராளமான பக்தர்கள் ஆகாச மாரியம்மனை வழிபட்டு காணிக்கையாக வளையல்களை 

செலுத்துவார்கள்.  

 

 

நீண்ட நாட்களாக மூளைக்காய்ச்சலால் அவதிப்பட்ட ஒரு பெண் அம்மனை 

வேண்டிக்கொண்டதும் அது சரியாகிவிட்டது. கடந்த வாரம் நான் அந்த கோயிலுக்கு 

சென்ற போது அந்த பெண் குடும்பத்துடன் வந்து தனது நெற்றியில் மாவிளக்கு ஏற்றி 

நேர்த்திக்கடனை செலுத்தினார். அவருடன் வந்த இளம் பெண் இந்த தகவலை 

எனக்கு சொன்னார். 

 

 

கும்பகோணத்தில் இருந்து இத்தலத்திற்கு செல்ல நகர மற்றும் புறநகர் 

பேருந்துகள் உள்ளன.

 

                         

                                        =====