"கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும்
வணங்குதல் போலே..."
முருகன் என்றதும் நம் காதுக்குள் இந்த பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்துவிடும்.
எப்போதும் அவன் புகழைப்" />
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்..."
"கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும்
வணங்குதல் போலே..."
முருகன் என்றதும் நம் காதுக்குள் இந்த பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்துவிடும்.
எப்போதும் அவன் புகழைப் போற்றிப்பாடிய திருமுருக கிருபானந்த வாரியார்,
சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர் ஆகியோர் மனசுக்குள் வந்து போவார்கள்.
கந்தன் பெயருக்கு இவ்வளவு சிறப்பு என்றால் அவன் கோயில் கொண்டு இருக்கும்
ஊர் எத்தகைய சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். சிறப்பு வாய்ந்த முருகன் தலமான
எண்கண் பற்றி இங்கு பார்க்கலாம்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது எண்கண். திருவாரூர் தஞ்சாவூர் சாலையில்
முகந்தனூர் ஆர்ச் என்ற இடத்தில் இறங்கி உள்ளே இரண்டு கி மீ செல்ல வேண்டும்.
கும்பகோணம் திருவாரூர் சாலையில் எண்கண் நிறுத்தம் என்ற இடத்தில் இறங்கி
உள்ளே இரண்டு கி மீ செல்ல வேண்டும். இரண்டு இடங்களிலும் ஆட்டோ வசதி உண்டு.
சுமார் 1300 ஆண்டுகள் பழமையான கோயில் இது. முத்தரச சோழன் என்ற மன்னன்
எட்டுக்குடி க்கு மேற்கே ஒரு நகரம் அமைத்து ஆட்சி செய்து வந்தான். அந்த ஊரில்
தெய்வாம்சம் பொருந்திய சிற்பி ஒருவர் இருந்தார். முருகன் மேல் அளவில்லா பக்தி
கொண்டவர். சிக்கல் முருகன் சிலையை அவர் செய்து முடித்திருந்தார். அந்த
சிலையை பார்த்த மன்னன் அது போன்ற வேறு ஒரு சிலையை அவர் வடிக்கக் கூடாது
என்பதற்காக அவரது வலக் கை கட்டைவிரலை தானமாக கேட்டு வாங்கிக் கொண்டான்.
மனம் கலங்காத சிற்பிக்கு எட்டுக்குடியில் சிலை செய்ய கனவில் தோன்றி முருகன்
உத்தரவு கொடுக்க, அதையும் செய்து முடித்தார். அதையும் பார்த்த மன்னன் இம்முறை
அவரது கண்களை தானமாக கேட்டான். இது போன்ற சிலைகள் வேறு எங்கும் வடிக்கக்கூடாது
என்பதற்காக. அந்த சிற்பி தனக்கு உணவு அளித்த பெண்ணோடு இந்த ஊருக்கு வந்தார்.
தொடர்ந்து முருகனையே தியானித்து வந்த அவர் கனவில் மீண்டும் முருகன் தோன்றி
சிலை வடிக்க உத்தரவு தந்தார். மயில் மேல் முருகன் அமர்ந்த கோலத்தில் சிலை
வடித்து கண் திறக்கும் நேரத்தில் அவருக்கு உதவியாக இருந்த பெண்ணின் கையில்
உளி பட்டு ரத்தம் பீறிட்டு வந்து அவர் கண்களில் தெறிக்க சிற்பியின் கண்கள் பார்வை
பெற்றது. எண்ணமே கண்ணாக கொண்டு முருகனுக்கு சிலை வடித்ததால் இந்த ஊருக்கு
'எண்கண்' என்ற பெயர் வந்தது.திருப்புகழில் இத்தலத்தை போற்றி பாடியுள்ளார்
அருணகிரிநாதர்.
பிரணவ மந்திரம் தெரியாததால் பிரம்மாவிடம் இருந்த சிருஷ்டி தொழிலை
முருகன் வாங்கிக்கொண்டு அவரை சிறையில் அடைத்தான். இழந்த தொழிலை
மீண்டும் பெற பிரம்மா சிவனை நோக்கி எட்டுக் கண்களால் பூஜித்த ஊர் இது.
இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது. மூலவர்
பிரம்மபுரீஸ்வரரான சிவன் என்றாலும் முருகன் இங்கு பிரதானம். அவர்
தென்திசை நோக்கி இருந்து அருள்பாலித்து வருகிறார்.
கண் பார்வை குறைந்தவர்கள் பிரதி மாதம் விசாக நட்சத்திர நாளில் தொடர்ந்து 12
மாதங்கள் இங்கு வந்து குமார தீர்த்தத்தில் நீராடி முருகனுக்கு சண்முகார்ச்சனை
செய்து வந்தால் குணமாகும். செவ்வாய் கிழமை விரதமிருந்து வழிபடுபவர்கள்
சரீர நோய்கள் நீங்கி குணமாகின்றனர். கார்த்திகை நட்சத்திரத்தில் விரதமிருந்து
வழிபடுவோர் 16 பேறுகளையும் பெறுகின்றனர். மேலும் திருமண பாக்கியம்,
குழந்தை பாக்கியம் வேண்டுவோர், உத்தியோக உயர்வு, தொழில் அபிவிருத்தி
ஆகியவற்றிற்காகவும் வழிபடுவோர் பயனடைகின்றனர்.
தைப்பூச திருவிழா 14 நாட்கள் நடக்கும். ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை
அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து முருகனை வழிபட்டு
செல்வார்கள். தை கிருத்திகை, ஆடி கிருத்திகை, பங்குனி உத்திரம் ஆகியவை
சிறப்பாக கொண்டாடப்படும்.
தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அறிவு, ஞானம், ஆயுள், ஆரோக்கியம் ஆகியவற்றை
முருகன் வாரி வழங்குகிறான். மிகச் சிறப்பு வாய்ந்த இந்த எண்கண் முருகன் கோயிலுக்கு
குடும்பத்தோடு வந்து தரிசனம் செய்து எல்லா வளங்களையும் பெறுங்கள்.
திருமாளம் எஸ். பழனிவேல்