தமிழகத்தில் எமனுக்கு என்று எங்கும் இல்லாத அதிசய தீர்த்தம் ஒன்று தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தினமும் ஒரு கால பூஜை நடைபெறுகிறது.
தருமபுரி மாவட்டம் அரூரில் இருந்து ஆறு கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வேப்பம்பட்டி கிராமம். இங்கிருந்து காடு வழியாக ஐந்து கி.மீ சென்றால் எமதீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் குளித்தால் எம பயம் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது.
இங்கு பழமையான சிவன் ஆலயம் உள்ளது. சிவனுக்கு வாகனமாக இரண்டு நந்திபெருமான் வீற்றிருக்கிறார். கோவிலுக்கு கீழே இறங்கினால் எப்போதும் வற்றாத எமதீர்த்தம் வந்து கொண்டிருக்கிறது. இந்த தீர்த்தத்தை பற்றி அறிந்த சப்தகன்னிகள் பூலோகத்திற்கு வந்து இந்த தீர்த்தத்தில் நீராடி இங்கேயே தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து கொண்டிருக்கிறார்கள்.
மார்க்கண்டேயன் ஆயுள் காலம் முடிவதை உணர்ந்து சிவலிங்கத்தை கட்டி பிடித்துக் கொண்டார். ஆனால் எமதர்மன் தன்னுடைய கடமையை செய்ய எண்ணி மார்க்கண்டேயன் மீது பாசக்கயிற்றை வீசினார். ஆனால் சிவபெருமான் தன்னுடைய பேச்சை மீறிய காரணத்திற்காக எமதர்மனை காலால் எட்டி உதைத்தார்.
இதனால் பாதிப்படைந்த எமதர்மன் இங்கு வந்து தீர்த்தத்தை உருவாக்கி அதில் நீராடி அங்கேயே லிங்கத்தை உருவாக்கி தன்னுடைய தவற்றை உணர்ந்தவாறு சிவனிடம் வேண்டினார். எமன் வந்து இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் இதற்கு எமலிங்கம் என்று பெயர் உருவாகியுள்ளது.
எமன் உருவாக்கிய தீர்த்தம் என்பதால் இதற்கு எமதீர்த்தம் என்று பெயரும் உண்டாயிற்று.
முதலில் ஆலயம் சென்றால் எமலிங்கத்தையும் இரண்டு நந்திபகவானையும் வழிபாடு செய்யலாம். பிறகு கோவிலுக்கு எதிராக கீழே இறங்கினால் சப்தகன்னிகள் உள்ளனர். அவர்களை தரிசனம் செய்துவிட்டு பக்கத்தில் உள்ள எமதீர்த்தத்தில் புனித நீராடலாம். இந்த தீர்த்தத்தில் நீராடினால் எம பயம் நீங்கி வாழலாம்.
வேப்பம்பட்டி கிராமத்தில் இருந்து ஐந்து கி.மீட்டர் தார் ரோடு வசதி உள்ளது. அங்கிருந்து காட்டு வழியாக ஐந்து கி.மீட்டர் நடந்து சென்றால் எமதீர்த்தத்தை அடையலாம். வழி முழுவதும் குண்டும் குழியுமாக கற்கள் நிறைந்த பகுதியாக உள்ளது.
எமதீர்த்தம் செல்லும் வழியில் வலது புறம் உள்ளே சென்றால் யோகவனம் சொக்கநாதரையும், சக்தியையும் தரிசனம் செய்யலாம்.
வாழ்க்கையில் ஒருமுறையேனும் இங்கு வந்து எமலிங்கத்தை தரிசனம் செய்து எமதீர்த்தத்தில் நீராடி எம பயத்தை நீக்கி கொள்ளலாம்.
- வெ.ராஜம்மாள்
கீரைப்
பட்டி (அ),
அரூர் (வ)