சில ஊர்களின் பெயர்கள் உலக அளவில் பிரபலமாக இருப்பதற்கு காரணம்
அங்கு வீற்றிருக்கும் அம்மன்கள் தான். காஞ்சி 'காமாட்சி', மதுரை 'மீனாட்சி',
திருக்கடையூர் 'அபிராமி' , திருநெல்வேலி காந்திமதி, இந்த வரிசையில்
உள்ள அம்மன் தான் காரைக்குடி 'கொப்புடைய நாயகி அம்மன்'. காரைக்குடி
ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 3 கி மீ தொலைவில் நகரில் நடுநாயகமாக
உள்ளது இந்த கோயில். காரைக்குடியின் காவல் தெய்வம் என்றும் அழைக்கப்படுகிறது.
சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோயில் இது.
முன்னொரு காலத்தில் இப்பகுதி முழுவதும் காரை மரங்கள்
சூழ்ந்த வனப்பகுதியாக இருந்தது. காட்டை அழித்து ஊரை உருவாக்கினார்கள்.
காரை வனப்பகுதி ஊராக மாறிய பின்பு 'காரைக்குடி' என்று அழைக்கப்படலாயிற்று.
கொப்புடைய நாயகியை கொப்புடையாள், கொப்பாத்தாள் என்றும் அழைக்கிறார்கள்.
அம்மன் காதில் கொப்பு என்னும் காதணியை அணிந்து இருப்பதால் இந்த பெயர்
வந்ததாக சொல்கிறார்கள்.
காரைக்குடியில் இருந்து சுமார் 4 கி மீ தொலைவில் உள்ளது செஞ்சை காட்டம்மன் கோயில்.
காட்டம்மனும் கொப்புடைய நாயகியும் சகோதரிகள். காட்டம்மனின் தங்கை
கொப்புடையம்மன். காட்டம்மனுக்கு ஏழு பிள்ளைகள் என்றும் கொப்புடையம்மனுக்கு
பிள்ளைகள் இல்லையென்றும் கூறப்படுகிறது. காட்டம்மனின் பிள்ளைகளை பார்க்க
கொப்புடைய அம்மன் அடிக்கடி வருவாள். பிள்ளைகளுக்கு கொழுக்கட்டை மற்றும்
இதர உணவுப் பண்டங்களை கொண்டு வந்து தருவாள். பிள்ளையில்லாத தன் தங்கை
அடிக்கடி பிள்ளைகளை பார்க்க வருவது அக்கா காட்டம்மனுக்கு பிடிக்கவில்லை.
ஆதலால் தனது பிள்ளைகளை ஒளித்து வைத்துவிட்டு தங்கையிடம் பேச
ஆரம்பித்தாள். இதை உணர்ந்து கொண்ட கொப்புடைய அம்மன் ஒளித்து வைக்கப்பட்ட
பிள்ளைகளை கல்லாக்கி விட்டு கோபத்தோடு காரைக்குடி வந்து சேர்ந்து தெய்வமானாள்
என்பது இத்தல வரலாறு. தவறை உணர்ந்த தன் சகோதரியை கொப்புடைய அம்மன் மன்னித்த இடமே தற்போது
கோயில் அமைந்துள்ள தலமாகும். ஆதிசங்கரர் இங்கு வந்து அம்மனை வழிபட்டுள்ளார்.
அம்மனை சாந்தப்படுத்த தனது ஸ்ரீ சக்கரத்தை வைத்து வழிபட்டுள்ளார். கோயிலின்
கர்ப்பகிரகத்தில் ஸ்ரீ சக்கரத்தின் மீது அம்பாள் அமர்ந்திருப்பதால் ஆன்மீக அதிர்வுகள் கோயில்
முழுவதும் வெளிப்படும்.
குழந்தை பாக்கியம் கிடைக்க இந்த அம்மனை வணங்கி வேண்டினால் உடனே அருளுவாள்.
திருமண தடையை நீக்குவாள். நாடி வந்து வரம் கேட்கும் பக்தர்களுக்கு வாரி வழங்குவாள்.
சகல நோய்களையும் தீர்த்து வைப்பாள். காரைக்குடியில் கடை வைத்திருக்கும் பெரும்பாலானவர்கள்
தினசரி காலையில் கடை திறக்கும் முன்பு கடை சாவியை கொப்புடைய அம்மன் காலடியில்
வைத்து ஆசி பெறுகின்றனர்.
சித்திரை மாதம் கடைசி செவ்வாய் கிழமை பெருந்திருவிழா தொடங்கி வைகாசி மாதம்
முதல் வாரம் முடிய பத்து நாட்கள் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ் புத்தாண்டு, நவராத்திரி,ஆடி செவ்வாய் மார்கழி திருப்பள்ளி எழுச்சி, பங்குனி
தாராபிஷேகம் ஆகியவைகள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஞாயிறு,
செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மன் உற்சவ மூர்த்தியாக இருப்பது இந்த கோயிலின்
சிறப்பம்சம்.
"வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற் கெண்ணிய எம்பெருமாட்டியை பேதை நெஞ்சில்
காணுதற் கண்ணிய ளல்லாத கன்னியை காணுமன்பு
பூணுதற் கெண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே..."
-அபிராமி அந்தாதியில் இடம்பெற்ற இந்த பாடலின் சுருக்கமான பொருள்
'தேவர்களாலும் முனிவர்களாலும் போற்றப்படுகிற அன்னையை அகக்கண்ணால்
தரிசிப்பதற்கும், திருவருளைப் பெறுவதற்கும் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க
வேண்டும் என்பதாகும். ஒவ்வொரு ஊரிலும் வீற்றிருக்கும் புகழ்பெற்ற அம்மனை
தரிசனம் செய்ய நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். கடந்த 09.08.24 அன்று
கொப்புடைய அம்மனை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. உங்களுக்கும்
அந்த பாக்கியம் கிடைக்கட்டும்.
கோயில் நடை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும்
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருமாளம் எஸ். பழனிவேல்