tamilnadu epaper

எங்கள் குலதெய்வம் கீழமாங்குடி விநாயகர்

எங்கள் குலதெய்வம் கீழமாங்குடி விநாயகர்

கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு , கண்வ மகரிஷி பரம்பரையில் வந்த மகா கணபதி அய்யர் சுமந்து வந்த விநாயகரை , இறக்கி வைத்து விட்டு இரவில் உறங்கிக் கொண்டிருந்தார்.

   அவரது கனவில் விநாயகர் தோன்றி , நாளைக்காலையில் எங்கு எறும்புகள் சாரை சாரையாகச் சென்று எங்கே மறைகின்றனவோ அங்கே தன்னை ஸ்தாபிதம் செய்யும்படிக் கூறி மறைந்தார்.

  அவரது கனவில் கூறியபடி , விநாயகர் குடிகொண்ட இடம் தான் கீழமாங்குடி என்ற சிறு கிராமம்.

     முதலில் கிழக்கு முகமாக அமர்ந்திருந்த விநாயகர் , ஊர் மக்கள் பல வகையிலும் துன்பப்படுவதற்கு துஷ்ட தேவதைகளின் நடமாட்டம் தான் காரணம் என்றும் அதனால் தன்னை மேற்கு முகமாகப் பிரதிஷ்டை செய்யும்படியும் அர்ச்சகர் கனவில் தோன்றி கட்டளையிட்டு மறைந்தார்.மறுநாள் காலையில் வழக்கம் போல் பூஜை செய்வதற்காக அர்ச்சகர் ஆலயத்திற்கு சென்று பார்த்தால் , விநாயகர் தானே மேற்கு நோக்கி அமர்ந்திருந்தார்.சிவாச்சாரியார் தான் கண்ட கனவையும் , விநாயகரின் விருப்பத்தையும் ஊர் மக்களிடம் கூற , ஆலயம் மேற்கு நோக்கி மாற்றியமைக்கப்பட்டது.

      இவ்வாறு ஆலயம் மேற்கு நோக்கி அமைந்தது முதல் ஊராரின் மனக்குறைகள் அனைத்தும் நீங்கி , சுப நிகழ்ச்சிகள் பலவும் எல்லாக் குடும்பங்களிலும் நடைபெறத் தொடங்கின.

   அன்று முதல் இந்த விநாயகப் பெருமான் மங்கள காரியங்கள் அனைத்தையும் உடனடியாக சித்திக்க வைத்ததால் இவர் மங்கள சித்தி விநாயகர் என்று அழைக்கப்பட்டார்.

   பொதுவாக எந்த ஊரிலும் , எந்த ஸ்வாமி ஆனாலும் மேற்கு திசை நோக்கி இருந்தால் அந்த மூர்த்தம் அதிக சக்தி வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்.

     கண்வ கோத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த மங்கள சித்தி விநாயகர் தான் குலதெய்வமாகும்.இன்றும் இந்த கோத்திரத்தைச் சேர்ந்த சுற்று வட்டார கிராமவாசிகளுக்கு இவர் தான் குலதெய்வமாக விளங்குகிறார் .

      வயதான மனிதர்களுக்கு இருப்பதைப் போல, இவ்விநாயகரின் வயிற்றுப் பகுதியில் மடிப்புசதை உள்ளது. உற்று நோக்கினால் வயிற்றின் இருபுறமும் மடிப்புசதை காணலாம்.

    இந்த விநாயகருக்கு அபிஷேகம் செய்யும் பொழுது வயோதிகத் தோற்றமும் , அலங்காரங்கள் முடிந்த பிறகு இளமையான தோற்றத்துடனும் காணப்படுகிறார். இது இந்த ஆலயத்தில் தினமும் நடக்கும் அற்புதம்.

 விசேஷ தினங்களில் , அபிஷேகம் , அலங்காரங்கள் ஆனபிறகு வியர்வைத் துளிகள் காணப்படுவது மற்றுமோர் அதிசயம்.இன்றும் பக்தர்கள் இவ்வரியக் காட்சியைக் கண்டு பரவசம் அடைகிறார்கள்.

இந்த விநாயகர் புரிந்த திருவிளையாடல்கள் பல உண்டு.ஆயினும் மூன்று முக்கியமான சம்பவங்களை மட்டும் இங்கே குறிப்பிடப்படுகின்றன.

   காளியாகுடி பக்தர் ஒருவர் கொடுத்த மணியை , அர்ச்சகர் ஆலயத்தில் கட்டி வைக்காமல் மடைப்பள்ளியில் வைத்து விட்டார். பக்தர் கனவில் விநாயகர் தோன்றி , தன்னால் மணியோசையைக் கேட்க முடியவில்லை என்றும் அது மடைப்பள்ளியில் இருப்பதாகவும் தெரிவித்தார். மறுநாள் அவர் வந்து மணி மடைப்பள்ளியில் இருப்பதைக் கண்டு , பின்னர் ஆலயத்தில் கட்டி வைத்தார்கள்.

    இக்கோயிலின் டிரஸ்டி கீழமாங்குடி ராஜன் அய்யரின் புதல்வி கடுமையான நோய் தாக்கப்பட்டு , காரைக்கால் சிறப்பு மருத்துவர்கள் கை விரித்து விட்டார்கள்.

    சுயநினைவற்ற நிலையில் அந்தப் பெண்ணை தஞ்சைக்கு அழைத்துச் செல்லும் பொழுது, வழியில் கீழமாங்குடி வந்து மங்கள சித்தி விநாயகரை , காரிலிருந்தபடியே வலம் வந்து பிறகு தஞ்சாவூர் சென்றார்கள்.

   தஞ்சை எல்லையை அடைந்ததும் , ஒரு பெரிய யானை இவர்களை வரவேற்றது.அந்த யானை இவர்களைப் பின் தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்று ,அந்தப் பெண்ணை அட்மிட் செய்யும் வரை அவர்களுக்கு உறுதுணையாக நின்று , இறுதியில் மருத்துவமனை வாயிலில் பிளிறி விட்டுச் சென்றது.

சில நாட்களில் அந்தப் பெண் பூரண குணமடைந்து விட்டார் .

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இந்த சம்பவம் நெஞ்சை நெகிழ வைக்கும் அற்புதமாகும்.

2021 ம் ஆண்டு என் மனைவி இறந்து விட்டார்.என் மருமகளின் பெரியம்மா , ஃபோனில் அவரிடம் துக்கம் விசாரித்த பொழுது , அவர் கனவில் கண்ட இரண்டு விஷயங்களைச் சொன்னார். உன் மாமியாரின் உடலில் பச்சை நிறப் புடவை போர்த்தியிருந்தீர்களா என்று கேட்டார்.இவர் ஆமாம் என்றார்.இரண்டாவதாக அவர் சொன்ன தகவல்.அவரை வைத்திருந்த சவப் பெட்டியை சுற்றி வந்து ஒரு யானை நமஸ்காரம் செய்து விட்டு வெளியேறியதாகச் சொன்னார்.

இந்த ஊர் பேரளம் --காரைக்கால் பஸ் ரூட்டில் பேரளத்திலிருந்து 5 கி.மீ.தூரத்தில் உள்ளது.