tamilnadu epaper

எங்கள் குலதெய்வம் கோயில் கந்தன்குடி

எங்கள் குலதெய்வம் கோயில் கந்தன்குடி

 

முருகன்

<<<<<<<<

தமிழகத்தில் கந்தனுக்குரிய திருத்தலங்கள் ஏராளம்,எண்ணில் அடங்காதது.அறுபடை வீடுகள் தவிர , வேறு பல தலங்களும் சிறப்பு வாய்ந்தவை.

அப்படி கந்தன் குடி கொண்ட ஊர் தான் கந்தன்குடி.இவ்வூருக்கு கோயில் கந்தன்குடி ,மதுவனம் என்ற பெயர்களும் உண்டு.

    திருவாரூர் மாவட்டம் ,நன்னிலம் தாலுகாவில் , பேரளம் -- காரைக்கால் சாலையில் , கொல்லாபுரம் தாண்டி அமைந்துள்ளது கோயில் கந்தன்குடி.பேரளத்திலிருந்து சுமார் 6 கி. மீ.தூரம்.இவ்வூரின் அருகில் தான் பிரசித்தி பெற்ற அம்பகரத்தூர் பத்ரகாளி அம்மன் கோயில் உள்ளது.

    மெயின் ரோடில் கோயில் கந்தன்குடி ஆர்ச் நம்மை வரவேற்று வழி காட்டுகிறது.அதன் வழியாக கோயிலுக்குச் செல்லும் வழியில் பாதையின் இருபுறமும் பசுமையான வயல்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன.

  இனி ஸ்தல புராணம் சுருக்கமாக :-

அம்பரன் , அம்பன் என்ற இரு அரக்கர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தார்கள்.அரக்கர்களின் துன்புறுத்தலைத் தாங்க முடியாத தேவர்கள், அன்னை பார்வதியிடம் முறையிட்டனர்.

   பார்வதி ,தன் பிரதிநிதியாக, தன்னிலிருந்து உருவாக்கிய பராசக்தியை அழைத்து அரக்கர்களை அழிக்கச் சொன்னார்.

   முருகன் குறுக்கிட்டு தானே அந்த அரக்கர்களுடன் போரிட்டு, வெல்வேன் என்று கூறினார்.அன்னை பார்வதி அப்படியே ஆகட்டும் என்று கூறி ஆசீர்வதித்தார்.

    கந்தன் பாசறை அமைத்துத் தங்கி, அரக்கர்களுடன் போரிட்டு வென்றார்.

   கந்தன் குடியிருந்ததால், ஊர்ப் பெயர் கந்தன்குடி ஆயிற்று. ஆதிகாலத்தில் பன்னீர் மரத்தடியில் இருந்த புற்றில் பசு பால் சொரிந்து, பிறகு ஊர் மக்களால் கண்டெடுக்கப்பட்டவர் தெய்வயானை.இவர் முருகனைத் திருமணம் செய்ய வேண்டி, பன்னீர் மரத்தடியில் தவமிருந்தார்.

  அருணகிரிநாதரின் பாடல் பெற்ற ஸ்தலம்.

    இப்பொழுது கோயிலில் நுழைகிறோம்.துவஜஸ்தம்பத்தையும், அதன் அருகிலுள்ள இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானை,பிறகு வரசித்தி விநாயகரை வணங்கிய பின்,கோயிலின் பிரதான தெய்வம் --வள்ளி, தெய்வயானையுடன் கூடிய சுப்ரமணியர்.

    அழகு கொஞ்சும் கந்தனைக் கண்ணாரத் தரிசித்த பிறகு, தெற்கு நோக்கி தனி சந்நிதி கொண்டிருக்கும் தெய்வயானை, விஸ்வநாதர், விசாலாட்சியை வணங்குகிறோம்.சண்டிகேஸ்வரர் மற்றும் இத்தலத்தின் சிறப்பான காவல் தெய்வம் பைரவரை தரிசிக்கிறோம்.

  உயரமான மூர்த்தமாக,வள்ளி,தெய்வயானையுடன் கூடிய கந்தனை மனமுருக வேண்டினால் மனம் போல மாங்கல்யம் கிட்டும்.

அதைப் போல பிள்ளைப் பேறு வேண்டுவோர்க்கு ,கந்தன் அருளால் குழந்தை பாக்யம் கிட்டும் என்பதும்,மருத்துவர்களால் தீர்க்க முடியாத நோய்களையும் கந்தன் குணமாக்கிய அண்மைக்கால சம்பவங்களும் தல புராணத்தில் காணப்படும் பதிவுகள் மூலம் அறியலாம்.

    இக்கோயிலில் சித்ரா பௌர்ணமி பத்து நாட்கள் நடைபெறும்.தேரோட்டம் அன்று, ஸ்வாமியை தேரில் ஏற்றுவதற்காகக் கொண்டு வரும் பொழுது, விக்ரகத்தைத் தேனீக்கள் மொய்ப்பது அதிசயமான காட்சியாகும்.கந்த சஷ்டி, கார்த்திகை தீபம் ,பங்குனி உத்தரம், ஆடி ,தை மாத கிருத்திகைகள் மற்றும் மாதாந்திரக் கிருத்திகை முதலியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

அமைதியான கிராமிய சூழ்நிலையில், கூட்ட நெரிசல் இல்லாமல், கந்தனைக் கண் குளிர தரிசனம் செய்யலாம்.

 

 

 

 

 

 

  

 

 

காலத்தின் கட்டாயமா ?

      ++++++++++++++++++++++

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திருமணங்களில் மாப்பிள்ளை மழுங்க ,மழ மழவென்று ஷேவ் செய்திருப்பார். மீசையும் இருக்காது. பிற்காலத்தில் மீசையுடன் மணமகன்கள் பலர் காட்சி அளித்தனர்.

   சுமார் ஆறு,ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, நான் பார்த்த திருமணத்தில் மணமேடைக்கு வந்த மாப்பிள்ளையைப் பார்த்ததும் தூக்கி வாரிப் போட்டது.அவர் தாடி,மீசை,படிய சீவாத தலைமுடி இத்தகைய(அலங்)கோலத்தில் இருந்தார். அட்லீஸ்ட் தாடியை டிரிம் பண்ணியிருக்கலாம். அதன்பிறகு நான் பார்த்த எல்லாத் திருமணங்களிலும் மாப்பிள்ளை தாடி, மீசை,நன்றாக வளர்ந்து விட்ட தலைமுடி சகிதம் தான் இருந்தார்கள்.

  அதற்கு மாறாக மணப்பெண் பியூட்டிப் பார்லருக்குச் சென்று அலங்காரம் செய்து கொள்வது அல்லது கல்யாண மண்டபத்திலேயே சில மணி நேரம் ஒதுக்கி பிரைடல் மேக்கப் போட்டுக் கொள்கிறார்கள்.

 சில லட்ச ரூபாய்கள் செலவு செய்து வீடியோ, ஃபோட்டோ எடுக்கிறார்கள்.அதில் "நீட் " ஆகத் தெரிய வேண்டாமா ? இதில் வெளிநாட்டில் மற்றும் உள்நாட்டில்வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் ஒன்றாகத் தான் இருக்கிறார்கள்.

 மேக்கப்புடன் இருக்கும் மணப்பெண்ணிற்கு சமமாக இருக்க வேண்டாமா ? இந்தப் பரட்டைத்தலை மோகம் எப்பொழுது மாறும் ? 

 சமீபத்தில் பார்த்த ஒரு திருமணத்தில் மாப்பிள்ளையின் கோலம் கண்டு, இந்தப் பதிவை எழுதத் தூண்டியது.

      மாப்பிள்ளையின் இந்த ஃபேஷனை மணப்பெண்ணும் ஏற்றுக் கொள்கிறாள் என்று தானே அர்த்தம்.

  இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.இந்த கலாச்சாரம் மற்றவர்கள் பார்வையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கலாம்.என் போன்ற வயதானவர்களால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.காலத்தின் கட்டாயமாக எடுத்துக் கொள்வதா ?

---------------------------------

வி.வெங்கட்ராமன்

----------------------------------

.எங்கள் குலதெய்வம்

----------------------------------------

 சென்னிமலை முருகன்

---------------------------------------------

( சென்னிமலை முருகன் ,எனது மருமகளின் தந்தைக்கும் அவரது சகோதரர்களுக்கும் தான் குலதெய்வமாகும் )

    அறுபடை வீடுகளைத் தவிர , இன்னும் பல இடங்களில் வீற்றிருந்து முருகன் அருள் பாலிக்கும் ஸ்தலங்கள் பல பிரசித்தமானவை.அவற்றுள் திருப்போரூர் , மைலம் , வல்லக்கோட்டை , சிறுவாபுரி , குமார வயலூர் , திருவிடக்கழி , சென்னிமலை போன்றவை குறிப்பிடத்தக்கது.

இங்கு குறிப்பிடப்படாத , இன்னும் அநேக முருகன் கோவில்கள் உள்ளன.

    சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட , பழமை வாய்ந்த , சிறப்பு மிக்க பிரார்த்தனை தலம் சென்னிமலை முருகன் ஆலயம்.

இவருக்கு சிரகிரி ஆண்டவர் , சிரகிரி வேலவன் , சென்னி ஆண்டவர் போன்ற வேறு பெயர்களும் உள்ளன.

சிவாலயச் சோழன் மன்னர் காலத்தில் இத்திருக்கோவில் கட்டப்பட்டது.

அந்த மன்னருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க , முருகப் பெருமானே அர்ச்சகராக வந்து , தன்னைத் தானே பூஜித்து , மன்னருக்கு ஏற்பட்ட பிரும்மஹத்தி தோஷத்தை நீக்கி அருளினார் .

    அனந்தன் என்ற சர்ப்பத்திற்கும் , வாயு பகவானுக்கும் ஏற்பட்ட பலப் பரீட்சையில் வாயு பகவான் கடுமையாகக் காற்றை வீசி அனந்தன் பிடியிலிருந்து மேருமலையை விடுவிக்க முயன்றார்.அப்போராட்டத்தில் மேரு மலையின் சிகரம் பறந்து சென்று பூந்துறை நாட்டில் விழுந்தது.அந்த சிகரப் பகுதி தான் சிரகிரி என்னும் சென்னிமலை.

    ஒரு காராம் பசு தினமும் பால் சொரிந்து வந்த இடத்தை சுமார் ஆறு அடி ஆழம் தோண்டிய பிறகு , ஒரு அழகான சிலை கிடைத்தது.ஆனால் இடுப்பிற்கும் கீழே பாதம் வரை வேலைப்பாடுகள் எதுவும் இல்லை.சிற்பி அதை சீர் செய்ய முற்பட்ட பொழுது ரத்தம் பீறிட்டது.

அந்த சிலை அப்படியே ஒரு குன்றின் மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டது.அதுவே சென்னிமலை தண்டாயுதபாணி.

   அதற்குச் சான்றாக தண்டாயுதபாணி மூர்த்தம் திருமுகம் பூரணப் பொலிவுடனும் , இடுப்புக்குக் கீழே வேலைப்பாடு இல்லாமல் இருப்பதையும் இன்றும் காணலாம்.

   மூலவர் சென்னிமலை ஆண்டவர் நடுநாயக மூர்த்தியாக , செவ்வாய்க் கிரஹமாக வீற்றிருக்க , மூலவரைச் சுற்றி , மற்ற எட்டு கிரஹங்களும் தேவ கோஷ்டங்களில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்கள்.சென்னி மலையில் மூலவரை வணங்கினாலே , நவக்கிரஹங்களை வழிபட்ட பலன் கிட்டும்.

   வள்ளி , தெய்வயானை திருக்கோயில்கள் முருகன் சந்நிதிக்குப் பின்புறம் படிக்கட்டுகள் வழியாக மேலே சென்றால் அமிர்தவல்லி , சுந்தரவல்லி என்ற பெயர்களுடன் , சென்னிமலை ஆண்டவரைத் திருமணம் செய்ய தவமிருந்து , இறைவனை அடைந்து , தனிக் கோவிலில் , வள்ளி , தெய்வானை இருவரும் ஒரே கல்லில் திருவாசியுடன் காட்சி அளிக்கிறார்கள்.

  சென்னிமலையில் பதினாறு தீர்த்தங்கள் உள்ளன.

   பட்சி தீர்த்தத்தில் இரும்புச் சத்து உள்ளன.

அதில் நீராடினால் ,தோல் வியாதிகள் நீங்கும்.

மலையில் பல அரியவகை மூலிகைகள் உள்ளன.

     மாமாங்க தீர்த்தத்தில் , பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை , வறண்ட கோடை காலத்தில் , மாமாங்க தீர்த்த விநாயகர் முன்பு , நீர் தானாகவே பொங்கி வழியும் அற்புதத்தை பக்தர்கள் பலர் கண்டு களித்துள்ளனர்.

  இங்கு வரும் பக்தர்கள் புதிய வீடு கட்ட , திருமணங்கள் நடத்த , விவசாய நிலம் வாங்க , விற்க , கிணறு வெட்ட , ஆழ்குழாய் கிணறு அமைக்க இன்னும் பல கோரிக்கைகள் சம்பந்தமாக முடிவு செய்ய , ஆண்டவருக்கு அர்ச்சனை செய்து , சிரசுப்பூ உத்தரவு கேட்பார்கள்.நல்ல உத்தரவு கிடைத்தால் மேற்கொண்டு செயலில் இறங்குவதும் , உத்தரவு நல்லதாகக் கிடைக்காவிட்டால் அந்த செயல்களைத் தவிர்ப்பதும் வழக்கம்.

  ஆண்டவரின் தினசரி அபிஷேகம் மற்றும் நைவேத்திய காரியங்களுக்கான திருமஞ்சனத் தீர்த்தம் அடிவாரத்திலிருந்து தினமும் இரண்டு அழகிய பொதிகாளைகள் மூலம் 1320 திருப்படிகள் வழியாக மலைக்குக் கொண்டு செல்வது தமிழ்நாட்டில் வேறு எங்கும் காண முடியாத சிறப்பாகும்.

   ஸ்ரீ கந்தர்சஷ்டி கவசம் இயற்றியவர் ஸ்ரீ பால தேவராய ஸ்வாமிகள்.

 

-V.VENKATARAMAN ,

HOUSE # 1, SURVEY # 1/4 ,

NEAR MANASAROVAR HEIGHTS -- PH I ,

MANO VIKAS NAGAR ,

HASMATHPET ,

SECUNDERABAD --500 009

(Telangana State )