திருவண்ணாமலை மாவட்டம் ,வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், சட்டு வந்தாங்கல் ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ நவசக்தி துர்க்கை அம்மன் கோயில் எழுந்தருளி உள்ளது.
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் சிறிய அளவில் இருந்ததாக கூறப்படும் இக்கோயில் தற்பொழுது பிரசித்தி பெற்ற வடக்கு பார்த்த வாயில் கொண்டு கட்டப்பட்டுள்ள கோயிலில் குடி கொண்டிருக்கும் துர்க்கை அம்மன் வேண்டியவருக்கு வேண்டிய அருள் தந்து நிறைவேற்றி வைக்கும் சக்தி உள்ளதாக நம்பப்படுகிறது.
இக்கோயிலுக்கு செய்யாறுலிருந்தும், ஆற்காட்டிலிருந்தும், காஞ்சிபுரத்திலிருந்தும் பயணித்து ராந்தம் மெயின் ரோட்டில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பிரசித்தி பெற்ற நவசக்தி துர்க்கை அம்மன் கோயில்.
இத்திருக்கோயிலுக்கு வருகை தந்து அம்மனிடம் பிள்ளை வரம் கேட்டு பெறுவோரும் ,நீண்ட நாள் திருமணம் ஆகாதோர் விரைவில் திருமணம் முடித்தும், சுப காரியங்களுக்கான பத்திரிகைகள் அம்மன் மடியில் வைத்து பூஜை செய்தும், காது குத்தல் நிகழ்ச்சி ,திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட பல சுப நிகழ்வுகள் இக்கோயிலில் நடந்து வருகிறது.
அருள்மிகு நவசக்தி துர்க்கை அம்மன் கோயில் ராந்தம்-ஆற்காடு செல்லும் வழியில் பிரதான சாலையில் சட்டு வந்தாங்கல் கோயில் வரவேற்பு நுழைவு வாயில் உள்ளது. அங்கிருந்து வானிய தெரு வழியாக சென்று ,குளக்கரை தெரு முடியும் இடத்தில் குளம் அருகில் கோயிலை அடையலாம்.
வேறு எங்கும் இல்லாத அளவில் வடக்கு பார்த்த வாயில் கொண்டுள்ள அம்மன் நவ சக்தி கொண்டவளாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் உள் பிரகார மூலவர் சன்னதியில் அம்பாள் பெரிய அளவில் நாக வாகனத்தில் சூலாயுதத்துடன் வண்ண சிலையாக
ஓங்காரமாக வீற்றிருக்கின்றார். இதற்கு முன் அம்மன் சிரசாக அருள் பாலிப்பதாக நிறுவப்பட்டுள்ளது.
உட்புற கோயில் வாயில் அருகில் அவற்றை சுற்றி வரும் போது தென்மேற்கு திசையில் மகிஷாசுரவர்த்தினி உருவம் அழகாக சுவற்றில் வரையப்பட்டுள்ளது. கோயிலின் கிழக்கு புறம் கரக ஜோடிப்பு அறையும், பக்கத்தில் மழைக்காலங்களில் பயன்படுத்த சமையல் அறையும் உள்ளது.
இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோயிலில் அர்ச்சராக எம் .பாபு என்பவர் உள்ளார். இவர் கடந்த 36 ஆண்டுகளாக இக்கோயிலில் பூஜை செய்து வருவதாக கூறப்படுகிறது.
தினசரி காலை பூஜையும் ,மாலை ஆராதனையும், நடைபெறுவது வழக்கம். ஆடி மாதம் ,பொங்கல் திருவிழா நாட்களில் சிறப்பு அபிஷேகம் ஆராதனைக்கு பின் உற்சவர் அம்மன் திருவீதி உலா நடைபெறுவது வழக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது.
நூற்றாண்டுக்கும் மேலாக இருக்கும் நவசக்தி துர்க்கை அம்மனை தரிசிக்க சென்னை ,வேலூர், பாண்டிச்சேரி, உள்ளிட்ட மாநகரிலிருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து வணங்கி மகிழ்ந்து போவது அவர்களுக்கு அம்மன் மூலமாக நடந்தேறிய நல்ல நிகழ்வுகளை காட்டுவதாக தெரிய வருகிறது.
கோயில் அர்ச்சகரான பாபு என்பவர் தமது அனுபவத்தை கூறியதாவது, தான் ஏழு வயதில் இருந்தே இக்கோயில் சிறிது அளவில் இருக்கும் போது வந்து சென்று பின்னர் குடியிருக்க வீடு இன்றி இவ்வூருக்கு வருகை தந்ததாகவும் ,பின்னர் இக்கோயிலில் பூசாரியாக சேர்ந்த பின்னர் தொகுப்பு வீடு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மெத்தை வீடு கட்டும் வாய்ப்பு அம்மன் அருளால்தான் கிடைத்துள்ளது. திருமணம் நடந்து நீண்ட நாள் குழந்தை பாக்கியம் இன்றி பின்னர் குழந்தை பேறு பெற்று தன்னிறைவுடன் வாழ்க்கை இருப்பதாக தமது சொந்த அனுபவத்தைபெருமிதத்துடன் குறிப்பிடுகின்றார் கோயில் பூஜாரி பாபு.
சட்டு வந்தாங்கல் மட்டுமின்றி அருகாமையில் உள்ள கிராமங்களில், பல்வேறு நகரங்களில், மாநிலங்களில் வசிப்பவர்களுக்கு குலதெய்வமாக அருள்மிகு நவசக்தி துர்கை அம்மன் விளங்குகின்றார்.
அருள்மிகு நவசக்தி துர்க்கை அம்மனிடம் கோரிக்கை வைத்து நிறைவேறிய பின்னர் நேர்த்திக்கடன் செலுத்துவது மரபாக உள்ளது என்று பக்தர்களும், பொதுமக்களும் தெரிவிக்கின்றனர். கோயில் சிறப்பு அம்சமாக வடக்கு திசை நோக்கி அருள் பாலிக்கும் நவசக்தி துர்க்கை அம்மனை வழிபடுவோம், அருள் பெற்று நலத்துடன் வளம் பெறுவோம்.
எறும்பூர் கை. செல்வகுமார்,
செய்யாறு.