tamilnadu epaper

எங்கள் குலதெய்வம் 'சன்னாபுரம் வட பத்திரகாளி அம்மன்' சிறப்பு

எங்கள் குலதெய்வம் 'சன்னாபுரம் வட பத்திரகாளி அம்மன்' சிறப்பு

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள ஊர் 

சன்னாபுரம். கும்பகோணத்தில் இருந்து சுமார் 8 கி மீ தொலைவில் 

திருநாகேஸ்வரம் திருவிடைமருதூர் சாலையில் உள்ளது இந்த ஊர்.

இங்கு புகழ்பெற்ற வட பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது.

சரித்திர புகழ்பெற்ற, 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோயில்.

இதற்கு சான்றாக இருப்பது கோயிலுக்கு வெளியே இருக்கும் 

பிரம்மாண்டமான ஆலமரம்.

 

 

ராஜ ராஜ சோழன் ஆட்சியோடு தொடர்புடைய கோயில் இது. சுமார் 

30 ஆண்டுகள் (கி பி 985 - 1014) சோழ நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தவர் 

ராஜ ராஜ சோழன். அவரது ஆட்சிக் காலம் சோழ நாட்டின் பொற்காலம் 

என்று சொல்வார்கள். அவரது பெருமைகளை 'ராஜ ராஜ சோழன் உலா' 

என்ற சிற்றிலக்கியத்தில் கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் அழகாக விளக்கி உள்ளார்.

"அறம் காக்க அறச்சாலை உருவாக்கினான், மறம் காக்க படைச்சாலை 

உருவாக்கினான், உயர்க்கல்விக் கூடங்கள் உருவாக்கினான், பக்தி வளர்ந்திட 

ஆலயம் உருவாக்கினான் சோழன் உருவாக்கினான்..." டி.ஆர். மகாலிங்கம் 

அவர்களின் கம்பீரக் குரலில் ஒலிக்கும் ராஜ ராஜ சோழன் புகழ் பாடும்  

கவியரசர் எழுதிய இந்த பாடலை இன்றும் நாம் கேட்கும் வண்ணம் தந்தவர் 

திரு.ஏ.பி.நாகராஜன் அவர்கள். எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் அவர் 

தந்ததை இந்த பாடல் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். பொதுவாக மன்னர்கள் 

இரவு நேரத்தில் மாறுவேடம் பூண்டு நகர் உலா வருவது வழக்கம். மக்களின் 

குறைகளை, நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளவே அவ்வாறு செய்வார்கள்.

அப்படி நகர் வலம் வரும்போது ராஜ ராஜ சோழனுக்கு நேர்ந்த மெய்சிலிர்க்க 

வைக்கும் அனுபவமே இந்த சன்னாபுரம் கோயில் வரலாறு.

 

 

கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள திருபுவனம், திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம் 

ஆகிய பகுதிகளில் ராஜ ராஜ சோழன் அடிக்கடி நகர்வலம் செல்வதுண்டு. 

அப்போதெல்லாம் மன்னன் குலதெய்வமாக வழிபட்ட இந்த வட பத்திரகாளி அம்மன் 

கிளி உருவத்தில் வழிகாட்டியாக முன்னே செல்வாள். தனக்கு வழிகாட்டுவது 

பத்திரகாளி அம்மன் தான் என்று மன்னன் உணர்ந்து கொண்டான். கண் மூடி அன்னையை 

வணங்கி இருக்கிறான். கிளி காட்டும் வழியில் தொடர்ந்து செல்வான். கிளி காளியாக 

காட்சி தர வேண்டும் என்று பலமுறை மனசுக்குள் பிரார்த்தனை செய்து வந்தான்.

ஒரு நாள் இரவில் மரத்தடி ஒன்றில் கண்மூடி அமர்ந்திருந்த போது அந்த கிளி அவன் முன் 

தோன்றி பேசத் தொடங்கியது. நான் சன்னவபுரவனத்தில் குடிகொண்டுள்ளேன். எப்பணியை 

தொடங்கினாலும் எம்மை வந்து தொழுது பின் தொடங்கு. தடைகள் நீங்கி வெற்றி 

காண்பாய் என்று சொல்லிவிட்டு பறந்து சென்றது. மறுநாள் தனது அரசாங்க சகாக்களோடு 

சன்னவபுர வனத்திற்கு சென்றான். அங்கு காளி கம்பீரமாக அமர்ந்திருப்பதை கண்டான். 

அந்த அன்னையை வணங்கினான். அதன்பிறகு வடபத்திரகாளியை தரிசிக்காமல் எந்த 

செயலையும் அவன் தொடங்கவில்லை. அந்த அம்மன் அமர்ந்திருக்கும் அந்த தல மண்ணை 

நெற்றியில் பூசிய பிறகு யுத்தகளம் செல்ல ஆரம்பித்தான். வெற்றி மேல் வெற்றி மேல் 

குவித்து சோழப் பேரரசின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றான்.

 

 

காளி வழிபாடு செய்தால் அனைத்து தீய சக்திகளும் நம்மை நெருங்காது. 

அதுவும் வட பத்திரகாளி மாமன்னன் ராஜ ராஜ சோழனுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறாள். 

அந்த அன்னையை ஒரு முறை தரிசனம் செய்தால், அந்த மண்ணை மிதித்தால் நமக்கான

சிறந்த வழிகள் திறக்க ஆரம்பிக்கும் வாழ்வில் நாம் மேலும் மேலும் 

உயரலாம். அந்த அம்மனின் அருள் பார்வை நம் மேல் பட நேருக்கு நேராய் சென்று 

மானசீகமாக தரிசிக்க வேண்டும். குலதெய்வ வரலாறுகளை இணையதளத்தில் பார்த்து, படித்து அப்படியே 

எழுதுவதை விட அந்தந்த கோயில்களுக்கு நேரில் சென்று தரிசனம் நமக்கு 

கிடைத்த அனுபவங்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிப்பது சிறப்பு.

 

 

சாதாரண நாட்களில் மதியம் 12.00 மணி முதல் 2.00 மணி வரையில் நடை திறந்திருக்கும்.

வெள்ளிக்கிழமை மதியம் 1.00 முதல் இரவு 9.00 வரையில் திறந்திருக்கும். ஆடி வெள்ளி 

சிறப்பாக கொண்டாடப்படும். அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து 

தீபம் ஏற்றியும், மாவிளக்கு போட்டும் வழிபடுவர்கள். தற்போது கும்பாபிஷேக பணிகள் 

நடந்து வருகிறது.

 

                                            

திருமாளம் எஸ். பழனிவேல்