tamilnadu epaper

எங்கள் குலதெய்வம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்

எங்கள் குலதெய்வம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்

பெரம்பலூர் மாவட்டத்தில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிறுவாச்சூர் .இங்கு மதுர காளியம்மன் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

                    சிலப்பதிகார நாயகி கண்ணகியின் வரலாற்றை தொடர்பு படுத்தி இங்கு அம்மன் வரலாறு செய்தி கூறப்படுகிறது .கற்புடைய தெய்வம் கண்ணகி தன் கணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி கண்டு மனம் பொங்கி கோபம் கொண்டு மதுரையை எரித்துவிட்டு மன அமைதி இன்றி அலைந்து கொண்டிருந்தபோது இத்தலத்தில் வந்து அமைதி கொண்டாள் .எனவும் கண்ணகியைக் கொண்டு மதுரையை ஏறியூட்டிய மதுரை காளியம்மனே இத்தலத்தில் விரும்பி அமர்ந்தாள் எனவும் கூறுகின்றனர்.

            இத்தலத்தின் வழிபாட்டு தெய்வம் செல்லியம்மன் .ஒரு மந்திரவாதி தனது தவ வலிமையினால் இந்த அம்மனை கட்டுப்படுத்தி தீய செயல்களுக்கு பயன்படுத்தி வந்துள்ளான் .அன்னை மதுரை காளியம்மன் இத்தலத்தில் ஒரு வெள்ளிக்கிழமை இரவு வந்து தங்க வேண்டி மக்களிடம் இடம் கேட்க அவர்களோ மந்திரவாதிக்கு பயந்து இடம் தர பயந்தனர்.

மதுரகாளியம்மன் செல்லியம்மனிடம் கேட்க தன்னை மந்திரவாதி தவவலிமையால் அடிமைப்படுத்தி துன்புறுத்துகிறான் நீயும் மாட்டிக்கொள்ள வேண்டாம்" என செல்லியம்மன்கூற மதுரை காளியம்மன் தான் அதற்கு தக்க வழி செய்வதாக கூறி நானும் அங்கு தங்கினாள். மறுநாள் காலை அங்கு வந்த மந்திரவாதியை எதிர்கொண்டு தன் சூலாயுதத்தால் அழித்தாள். செல்லியம்மன் அன்னையின் திறன் கண்டு இனி மதுரைகாளியம்மனே சிறுவாச்சூர் ஆலயத்தில் இருந்து அடியவர்களுக்கு அருள் பாலித்து வரவேண்டும் என்றும் ,தான் அருகில் உள்ள பெரியசாமி மலை சென்று கோயில் கொள்ளப் போவதாகவும் ஆனால் கோவிலில் எப்போதும் தனக்கு தான் முதல் மரியாதை வேண்டும் எனவும் கூற மதுர காளியம்மன் அதற்கு ஒப்புக்கொண்டு ஆலயத்தில் அமர்ந்தாள்.

                 செல்லியம்மன் பெரியசாமி மலை சென்று கோயில் கொண்டாள்.செல்லியம்மன் சிறுவாச்சூருக்கு வெள்ளிக்கிழமை வந்து மதுரை காளியம்மன் பக்தர்களுக்கு திங்கள்கிழமை காட்சி தருவதாகவும் எனவே சிறுவாச்சூர்ஆலயம் திங்கள்,வெள்ளிக்கிழமை மட்டும் திறந்து பூஜை செய்யப்படுகிறது என்று வரலாறு கூறுகின்றன. மற்ற நாட்களில் மதுரை காளியம்மன் பெரியசாமி மலையில் செல்லியம்மனுடன் அமர்ந்து அருள் பாலிப்பதாகவும் ஐதீகம் உள்ளது.

             மதுரை காளியம்மன் என்ற திருப்பெயரே மருவி மதுர காளியம்மன் என்று ஆனது. சினம் கொண்டு வந்துமதுர காளியம்மன் இத்தலத்தில் வந்து அமைதி கொண்ட பிறகு பக்தர்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அருளச் செய்ததால் மதுர/இனிய என்ற பெயர் பெற்றாள்.

             செல்லியம்மன் தனக்கு முதல் மரியாதை வேண்டுமென கேட்டதற்கு இணங்க பூஜையின் போது தீபாரதனை முதலில் மலைமேல் கோயில் கொண்டுள்ள செல்லியம்மன் இருக்கும் அந்த திசை நோக்கி தீபாரதனை காட்டிவிட்டு பின்னரே மதுர காளியம்மனுக்கு தீபம் காட்டுவது இன்றும் நடைபெற்று வருகிறது .ஆண்டுதோறும் சித்திரை திங்களில் அமாவாசைக்கு பிறகு வரும் செவ்வாய் அன்று பூச்சொரிதல் விழா தொடங்கி அதனை அடுத்து செவ்வாய் அன்று காப்பு கட்டி 13 நாட்கள் தெப்ப திருவிழா மிக சிறப்பாக நடைபெறுகிறது.

                அருள்மிகு மதுர காளியம்மன் திருக்கோவிலில் திங்கள் வெள்ளிக்கிழமைகளில் நடை திறந்து பூஜை நடைபெறுவதோடு அமாவாசை பௌர்ணமி நாட்களில் நடைதிறந்து பூஜை நடைபெறுகிறது.

            இந்த மதுரகாளியம்மனையும் செல்லியம்மனையும் வேண்டுபவர்களுக்கு தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்றும் பிள்ளை வரம் கிடைக்கும் என்றும், காணாமல் போன பொருள் கிடைக்கும் அது மட்டும் அல்ல நஷ்டம் அடைந்த தொழிலும் நஷ்டம் மாறி லாபம் கிடைக்கும் என்றும் இந்த பகுதி மக்கள் நம்புகின்றனர் .நாமும் ஒரு முறை சிறுவாச்சூர் மதுரகாளியம்மனையும்,பெரியசாமி மலையில் வீற்றிருக்கும் செல்லியம்மனையும் வணங்குவோம் .வாழ்வில் எல்லா வளத்தையும் பெறுவோம்.