எங்கள் குலதெய்வம் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில் திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு என்ற ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோவில் ஆகும்.திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் செல்லும் ரோட்டில் 9 கி.மீ., தூரத்தில் தாடிக்கொம்பு உள்ளது
கோயிலின் முகப்பில் ஐந்து நிலை ராஜ கோபுரம் உள்ளது. நான்கு பக்கங்களிலும் உயர்ந்த உறுதியான மதில்கள் நடுவில் கோயில் பிரகாரமும் ஐந்து சந்நிதிகளும் உள்ளன. ஆழ்வார்களின் செப்பு திருவுருவங்களும் திருமாலின் தசாவதாரத்தினை விளக்கும் சிற்பங்களும் அமைந்துள்ளன.
அம்மன் சன்னதியை அடுத்து கனகசபை மண்டபமும் அற்புத சிற்பங்கள் அடங்கியுள்ள கலைக்கூடமாக திகழ்கிறது. மதுரை, சுசீந்திரம், கிருஷ்ணாபுரம், தென்காசி போன்ற கோயில்களில் உள்ளது போலவே சப்த ஸ்வரங்களை எழுப்பும் இசைத்தூண்கள் இம்மண்டபத்தில் உள்ளன.
சௌந்தர்ராஜ பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி சமேதகராக காட்சியளிக்கிறார். சந்நிதியின் தென் புறத்தில் சௌந்தரவல்லி தாயார் சந்நிதி உள்ளது.
இக்கோயிலில் கல்வி தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதி இருவரும் அடுத்தடுத்து காட்சியளிக்கின்றனர். தன்வந்திரிக்கும் தனி சன்னதி உள்ளது.
இங்குள்ள சக்கரத்தாழ்வாரும் விசேசமானவர். இவரைச் சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகள் உள்ளனர். இவருக்குப் பின்புறம் உள்ள நரசிம்மரை சுற்றிலும் அஷ்ட லட்சுமிகள் உள்ளனர். விஷ்வக்ஸேனர், இரட்டை விநாயகர், பெருமாளின் தசாவதாரம், லட்சுமி நரசிம்மர், வேணுகோபாலர், ஆஞ்சநேயர், சொர்ண பைரவர் ஆகியோருக்கும் சன்னதி உண்டு.
திருக்கோவிலில் ஷேத்திர பாலகராக இருந்து ஸ்வர்ணாகர்ஷண பைரவராக அருள்பாலிக்கிறார். சிவன் கோவில்களில் மட்டுமே காணப்படும் பைரவர் இங்கே பெருமாள் கோவிலில் வீற்றிருப்பது ஒரு தனிச்சிறப்பு.
இங்குள்ள கார்த்தவீரியார்ஜூனன் சன்னநிதியில் எலுமிச்சை பழ மாலை மற்றும் நெய் விளக்கு ஏற்றி வழிப்பட்டால் நினைத்தது நடக்கும். வியாழன் கிழமைதோறும், இங்குள்ள ஆண்டாளுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணம் கைகூடும். குழந்தை வரம், வணிக வளர்ச்சி, வெளிநாட்டு வாய்ப்புகள் போன்ற பிரார்த்தனைகள் நிறைவேறும்.
சித்திரை மாதப் பௌர்ணமி நாளன்று செளந்தராஜ பெருமாள் குடகனாற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். ஆடி மாதம், ஆடிப் பூரம் நாளில் பெருமாள் - ஆண்டாளுக்கு திருக்கல்யாண உற்சவம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் நவராத்திரி உற்சவம் ஒன்பது நாட்கள் நடைப்பெறுகிறது. தாயார் சன்னதியில் கொலு விழா நடைப்பெறும். மார்கழி மாதத்தில் நடைப்பெறும் வைகுண்ட ஏகாதசி மிக முக்கியமான விழாவாகும். சொர்க்க வாசல் திறப்பு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திருவோணத்தன்று ஹயக்ரீவருக்கு தேனபிஷேகத்துடன் விசேஷ பூஜை நடக்கிறது. படிப்பில் மந்தம், ஞாபகமறதி, பேச்சுகுறைபாடு உள்ளவர்கள் ஹயக்ரீவருக்கு தேங்காய், நாட்டுச்சர்க்கரை, நெய் சேர்ந்த கலவையை படைத்து, ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள்.
அமாவாசைதோறும் மூலிகை தைலாபிஷேகம், மூலிகை லேகியம் படைத்து தன்வந்திரிக்கு பூஜை நடக்கிறது.
மதுரைக்கு அருகே உள்ள 2 திருமாலிருஞ்சோலை என்ற திவ்யதேசத்தோடு தாடிக்கொம்பு தலத்திற்குத் தொடர்புள்ளதை தென்னிந்திய கோயில் சாசனம். ‘திருமாலிருஞ்சோலை அழகருக்கு வடக்கு வீடான புறமலை தாடிக்கொம்பு’ என்று குறிப்பிட்டுள்ளது. இதுபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள காட்டழகர் கோயில், திருமாலிருஞ்சோலை அழகரின் தெற்கு வீடாகக் கருதப்படுகிறது. அதனாலேயே இந்த மூன்று தலங்களிலும் சித்திரை உற்சவத்தில் ‘அழகர் ஆற்றில் இறங்குவதில்’ ஒற்றுமை இருப்பதைக் காணலாம். இதற்கு அடிப்படை புராண ஒற்றுமை இருப்பதே காரணமாக இருக்கலாம்