ஐவகை நிலங்களில் முதலானது 'குறிஞ்சி'. மலையும் மலை சார்ந்த
இடமும் குறிஞ்சி நிலமாகும். இந்த நிலத்தின் தெய்வம் முருகன்.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று
சொல்வார்கள். மலை உச்சியில் இருந்து அருள் புரியும் அந்த முருகக் கடவுளை
தரிசிக்க பலர் விரதம் இருந்தும், கால் நடையாய் நடந்தும் காவடி எடுத்தும்
செல்வார்கள். தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு அருகில் இருக்கும்
பண்பொழி என்ற ஊரில் 'திருமலை முத்துக்குமாரசாமி' என்ற முருகன் தலம்
ஒன்று உள்ளது. ஓம் என்ற வடிவில் மலை அமைந்துள்ளது. இது தேவார
வைப்புத் தலமாகும்.இந்த மலை கோயில் சுமார் 500 அடி உயரம் இருக்கும்.
544 க்கு மேற்பட்ட படிகள் உள்ளன. இரு சக்கர வாகனம்,மற்றும் இதர வாகனங்கள்
செல்ல மலைப்பாதையும் உள்ளது. கோவிலுக்கு செல்ல தேவஸ்தானம் சார்பில்
சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. திருப்புகழில் அருணகிரிநாதர் இந்த கோயிலைப்
பாடியுள்ளார். இந்த பண்பொழி ஊருக்கு அருகில் இருந்து கேரளா எல்லை
ஆரம்பமாகிறது. சுமார் இருபது கி மீ தொலைவில் உள்ளது அச்சன்கோவில்.
ஒரு காலத்தில் இந்த மலையில் காளி கோயிலும் ஒரு புளியமரமும் அந்த மரத்தடியில்
வேல் மட்டுமே இருந்தது. பூவன் பட்டர் என்ற அர்ச்சகர் பூஜைகளை செய்து வந்தார்.
ஒரு நாள் இந்த அர்ச்சகர் கனவில் முருகன் தோன்றி தான் அச்சன் கோயிலுக்கு
செல்லும் வழியில் கோட்டைத்திரடு என்ற இடத்தில் மூங்கில் புதருக்குள் இருப்பதாகவும்
அந்த இடத்துக்கு அருகில் எறும்புகள் சாரை சாரையாக ஊர்ந்து செல்லும் ஒரு
குழியை தோண்டிப் பார்த்தால் சிலையாக நான் இருப்பேன். அதை எடுத்து இந்த
மலையில் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும். அப்படி செய்தால் நீண்ட நாட்களாக
நோயினால் வருந்திக்கொண்டு இருக்கும் மன்னன் குணமாவான். உடனே அவனிடம
சென்று சொல்லுங்கள் என்று சொல்லி மறைந்தார். அப்போது சேர நாட்டை ஆண்டு வந்த பந்தள ராஜாவுக்கு
தகவல் தெரிவிக்கப்பட்டு சிலையை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்தார்கள்.
மன்னனின் நோயும் குணமானது. மாலிக்காபூர் தென்னாட்டின் மீது படையெடுத்து
வந்த போது (கி பி 1311) அப்போது பட்டத்திற்கு போட்டி போட்டுக் கொண்டிருந்த இரு
பாண்டிய மன்னர்கள் குடும்பத்தினர் தங்களை தற்காத்துக்கொள்ள மலையாள நாட்டின்
கோட்டயம் மலைப்பகுதிகளில் ஒளிந்து கொண்டனர். அவர்களில் ஒரு பிரிவினர்
பந்தனம் திட்டா மாவட்டத்தில் பந்தள அரசை நிறுவினர். திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன்
நட்பு பாராட்டினார்கள். இக்கோவிலுக்கு அருகில் உள்ள நகரீஸ்வரமுடையார், சுந்தரபெருமாள்
கோயில்களில் கிடைத்த 15, 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் பந்தள அரசை நிறுவியவர்கள் பிற்கால
பாண்டியர்கள் என்பதை தெரிவிக்கின்றன. திருமலை முருகன் கோயில் பற்றிய தகவல்களும்
அதற்கு அவர்கள் கொடுத்த மானியங்கள் பற்றிய செய்திகளும் அதில் உள்ளன.
பண்பொழி க்கு அருகில் உள்ளது நெடுவயல் கிராமம். அந்த கிராமத்தில் வசதியான குடும்பத்தில்
பிறந்தவர் சிவகாமி அம்மையார். திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. இந்த முருகன்
மேல் தீவிர பக்தி கொண்டவர். ஒரு முறை ஞானி ஒருவரை அவர் சந்திக்க நேர்ந்தது. மலை மேல்
இருக்கும் திருமலை முருகன் தான் உனக்கு குழந்தை. அவனுக்கு சேவை செய்யவே நீ பிறவி
எடுத்துத்துள்ளாய் என்று சொன்னார். ஞானி சொன்னபடியே முருகனையே மகனாக
ஏற்றுக்கொண்டு கோயில் திருப்பணிகள் செய்தார். தனது சொத்துக்களை எல்லாம் திருமலை
முருகன் பெயரில் பட்டா செய்தார். இந்த கோயிலுக்கு சேரவேண்டிய சொத்துக்களை
நீதிமன்றம் மூலமாக மீட்டெடுத்தார். திருப்பணிக்கான கல்தூண்கள், உத்திரங்கள் பனை நார்கள்
மூலமாக அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. பாரம் தாங்காமல்
அவைகள் அறுந்து தூண்கள் கீழே விழும் போது அதை தனது பக்தியால்...சக்தியால்
தடுத்து நிறுத்தினார். திட்டமிட்டப்படி திருப்பணிகளை முடித்து கோவிலில் வசந்த மண்டபம்
கட்டி முடித்தார். 1854 ஆம் ஆண்டு சித்தி அடைந்தார்.வண்டாடும் பொட்டல் என்ற இடத்தில்
அவரது சமாதி உள்ளது.
ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா, தைப்பூச திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
9 வது நாளன்று தேரோட்டம் நடக்கும். சித்திரை முதல் நாள் படித்திருவிழா விமர்சையாக
நடக்கும். 544 படிகளுக்கும் அன்றைய தினம் சிறப்பு பூஜை நடைபெறும். ஒவ்வொரு மாதமும்
வரும் கார்த்திகை அன்று விசேஷ பூஜைகள் நடைபெறும். உபயதாரர்கள் கட்டணம்
செலுத்தினால் தங்கத்தேர் உலா வரும்.
இந்த கோயில் தீர்த்தத்திற்கு பூஞ்சுனை என்று பெயர். அகத்தியர் உருவாக்கியது இந்த சுனையில்
நாள்தோறும் ஒரு தாமரை பூக்கும். அதை பறித்து தேவர்களும், சப்த கன்னியர்களும்
முருகனுக்கு சூட்டி வழிபடுவதாக நம்பிக்கை. இந்த தீர்த்தத்தில் நீராடினால் தீராத
நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த மலையில் அரிய வகை மூலிகைகள்
ஓடவள்ளி, நள மூலிகை, திருமலைச் செடி ஆகியவை வளர்ந்தன. இந்த மூலிகைகள் பல்வேறு நோய்களை
குணப்படுத்தும். இந்த மூலிகைகளை அடையாளம் கண்டு கொள்ள முடியாவிட்டாலும்
இந்த மலையில் உள்ள முருகனை தரிசிக்க வந்தவர்கள் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படுவது
உண்மை. விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலம்.
இங்கு வந்து முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் நம் சந்ததிகளுக்கு நல்ல வாழ்வு அமையும்
சிறந்த வாரிசுகள் உருவாகும் என்பது நம்பிக்கை. மலைமேல் 16 படிகள் கொண்ட
உச்சிப்பிள்ளையார் சந்நிதி ஒன்று உள்ளது. அவரை வணங்கினால் வாழ்க்கையில் ஒருவனுக்கு
கிடைக்கவேண்டிய 16 வகை பேறுகள் கிட்டும். மூலவர் திருமலை முருகன் நான்கு கைகளுடன்
நம்மை காத்து ரட்சிக்க வீற்றிருக்கிறார்.
மயிலாடுதுறையில் இருந்து மதியம் 12 மணியளவில் செங்கோட்டை வரை செல்ல ரயில் உள்ளது.
தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை செல்ல வாரத்தில் மூன்று நாட்கள் (ஞாயிறு, செவ்வாய்,
வியாழன்) மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்குடி வழியாக செல்லும் விரைவு ரயிலும் உள்ளது.
செங்கோட்டை , தென்காசியில் இருந்து பேருந்து வசதிகளும் உண்டு.
காலை 6.00 மணி முதல் 1.00 வரையிலும் மாலை 5.00 முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
-திருமாளம் எஸ். பழனிவேல்