ராமநாதபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் தேவி பட்டினம் உள்ளது
தேவிபட்டினம் என்றாலே ராமர் தன்னுடைய தோஷ நிவர்த்திக்காகக் கடலுக்குள்ளே பிரதிஷ்டை செய்த நவபாஷாண நவகிரகம் தான் நினைவுக்கு வரும். ஆனால் இலங்கை செல்வதற்கு முன்பு உலக நாயகி அம்மனை ராமர் வழிப்பட்டார் என்பது நம்பிக்கை.
ஸ்ரீராமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நவ பாஷாணம் (9 கற்கள்) என்ற நவ கிரகங்கள் உள்ளன. இவை கரையிலிருந்து சுமார் 40 மீட்டர் தொலைவில் கடலுக்குள் அமைந்துள்ளன. இந்தியாவிலேயே இங்குதான் கடலில் நவக்கிரகங்கள் உள்ளன.
இங்கு அம்மனுக்கு உருவம் ஏதும் கிடையாது. சக்தி பீடங்களிலே காஞ்சி காமாட்சிக்குக் காமகோடி பீடம் என்றும் காசி விசாலாட்சிக்கு மணிகர்ணிகா பீடம் என்பது போல் தேவிபட்டினத்தை வீர சக்தி பீடம் என்று சொல்கிறோம்.
தேவிபட்டினம், ராமநாதபுரம் மாவட்டம். உலகநாயகி, மகிஷாசுர மர்தினி அம்மன். புராணப்பெயர் தேவிபுரம் அல்லது தேவிப்பூர். இது 51 சக்தி பீடங்களில் வீரசக்தி பீடமாகும். இது கடற்கரை ஓரத்தில் அமைதியான சூழலிலே அமைந்த கிழக்கு நோக்கிய கோவில் ஆகும். பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்தது.
மகிஷாசுர மர்த்தினியாக அவதாரம் செய்த பொழுது விஷ்ணு, சிவன், பிரம்மா, இந்திரன், அக்னி, வருணன், வாயு, ஐராவதம், எமன், குபேரேன், சூரியன் ஆதிஷேசன் எல்லோரும் ஆயுதங்களை அம்பாளுக்கு அளித்தார்கள். அம்பாளுக்கு ஹிமவான் சிம்ம வாகனமாக ஆனான்.
உலகைக் காப்பதற்கு, எருமைத் தலையுடைய மகிஷாசுரனுடன் ஒன்பது நாள் போராடி பத்தாம் நாள் வெற்றி பெற்ற அம்பாள், சயன கோலத்திலே சுயம்புவாக உலக நாயகி என்ற பட்டத்துடன் இங்கே காட்சி தருகிறார்
சர்வசக்தி பொருந்திய இந்த தேவி பதினெட்டு கரங்களிலும் ஆயுதங்களை ஏந்தி, சிம்மவாகனத்தில் சென்று மகிஷாசுரனை வதம் செய்து, ஒய்வு எடுத்த நிலையிலே இங்கு இருக்கின்றாள். இந்த வீர சக்தி பீடத்தைத் தொழுதால் அனைவருக்கும் மனோதைரியம் வருவது நிச்சயம்.
ஓம் சக்தி
கீதாராஜா