ஆடி மாதம் முழுவதும் அம்மன்களுக்கு உகந்த மாதம். இம்மாதம்
முழுவதும் பெண் தெய்வங்கள் அனைவரையும் போற்றி வழிபாடு செய்யும்
காலமாக அமைந்துள்ளது. குறிப்பாக துர்க்கை அம்மனை வழிபாடு
செய்தால் சிறப்பாகும்.
மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் பூம்புகார் கல்லணை
சாலையில் உள்ளது கதிராமங்கலம் என்ற கிராமம். இங்கு புகழ்பெற்ற
வனதுர்க்கை அம்மன் கோயில் உள்ளது. முதன்மை தெய்வம் துர்க்கை தான்
சில இடங்களில் மட்டுமே துர்க்கை அம்மனுக்கு தனிக் கோயில் இருக்கும்.
அதில் இத்தலம் ஒன்று. சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கோயில் இது.
இத்தலத்திற்கு சிவ மல்லிகா வனம் என்ற சிறப்பு பெயரும் உண்டு.
அசுரர்களாகிய மகிஷன், சும்பன்,நிசும்பன், பண்டன் ஆகியோர்களை வதம்
செய்ய துர்க்கா பரமேஸ்வரியாக அவதரித்தாள் அன்னை பார்வதி தேவி.
அசுரர்களை வதம் செய்த பிறகு மீண்டும் பார்வதியாக மாறி ஈசனோடு இணைய
இத்தலத்தில் ஏகாந்த நிலையில் அம்பிகை தவம் இருந்தாள். அந்த காலத்தில்
சிவ பூஜைக்கு மல்லிகை மலர்களை பறிக்க தினமும் ராகு பகவான் அந்த
இடத்திற்கு வந்து கொண்டு இருந்தவன் தேவியை அடையாளம் கண்டு கொண்டான்.
அவரின் தவத்திற்கு இடைஞ்சல் விளைவிக்காமல் தேவியை அங்கேயே பூஜித்து
அவர் தவம் முடிந்து கண் விழிக்கும் வரையில் காத்திருந்தான். தவம் முடித்த
தேவியும் ராகு பகவானின் செயல் கண்டு மகிழ்வுற்றாள். தொடர்ந்து அந்த வனத்தில்
இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் படி ராகு பகவான் வேண்டுகோள் வைத்தார்.
ஈசனுடன் இணைந்த பிறகு உரிய நேரத்தில் வந்து அவதரிப்பதாகவும் வாக்கு
கொடுத்தாள். தன்னுடன் ராகு பகவான் துணை தெய்வமாக இருக்க வேண்டும் என்றும்
தன்னை வணங்குபவர்களுக்கு அவரால் ஏற்படும் தீமைகளை விலக்க வேண்டும் என்றும்
கட்டளையிட்டார். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். கதிராமங்கலம் வனதுர்கை யை
வணங்கினால் ராகு தோஷம் விலகும் என்ற ஐதீகம் அதன் பிறகு ஏற்பட்டது.
மிருகண்டு முனிவர் தனது மகன் மார்கண்டேயனை அவனது பதினாறாம் பிராயத்தில்
காத்தருள கதிராமங்கலம் வனதுர்கை யைத் தான் வழிபட்டார். திருக்கடையூர் சென்று
ஈசனை வழிபட்டு வந்தால் நல்லது நடக்கும் என்று வழிகாட்டியவர் அம்பாள் தான்.
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இந்த ஊரிலிருந்து சுமார் ஐந்து கி மீ தொலைவில் இருக்கும்
தேரழந்தூர் என்ற ஊரில் பிறந்தவர். அவர் வன துர்க்கை மீது அளவுக்கதிகமான பக்தி
கொண்டவர். இந்த அம்மனை வழிபடாமல் எந்த ஒரு செயலையும் தொடங்கமாட்டார்.
மழைக்காலத்தில் ஒரு நாள் அவர் வீட்டு கூரை சிதைந்து வீட்டுக்குள் மழை நீர்
கொட்டியது. அப்போதும் கம்பர் 'அடைமழை இடைவிடாமல் பெய்கிறது. ஒரு கூரை கூட
இல்லாமல் நீயே நனைந்தபடி நிற்கிறாய், உன் அருள் மழை என்றும் என்னை காக்கும்"
என்று மனமுருகி வேண்டி ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்டார். மறுநாள் காலை எழுந்து
பார்த்த போது அவர் வீட்டுக் கூரை நெற்கதிர்களால் வேயப்பட்டு இருப்பதை கண்டார்.
எல்லாம் தேவியின் திருவிளையாடல் என்பதை உணர்ந்த அவர் "கதிர் தேவி,
கதிர்வேய்ந்த மங்கள நாயகி என்று பாடினார். கதிர்வேய்ந்த மங்கள நாயகி இருக்குமிடம்
கதிர்வேய்ந்த மங்கலம் என்று அழைக்கப்படலாயிற்று. அதுவே பின்னர்
கதிராமங்கலம் என்று மாறியது.
பார்வதி, சிவபெருமான் திருமணத்தை கண்டு களிக்க தேவாதி தேவர்களும், முனிவர்களும்
கயிலாயத்தை சென்றடைந்தனர். அதனால் தென் பகுதி உயர்ந்து உலகின் நிலை மாறுபட்டது.
அதை சரி செய்ய இறைவன் தென் பகுதிக்கு அகத்தியரை அனுப்பி வைத்தார். தென் திசையில்
தனது திருமண கோலத்தை காட்டுவதாக அவரிடம் சொன்னதை ஏற்று அகத்தியரும்
தென் திசை நோக்கி புறப்பட்டார். அவருக்கு இடைஞ்சலாய் விந்தியன் என்ற அசுரன் வழியில்
தடையாய் நின்றான். அவனை அழிக்க இந்த வனத்தில் துர்கையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு
அசுர வதம் முடிந்ததும் தென் திசை நோக்கி பயணத்தை தொடர்ந்தார்.
இவையனைத்தும் அம்பாள் தொடர்பான வரலாறுகள். குல தெய்வம் தெரியாதவர்கள்
இந்த அம்மனை குல தெய்வமாக நினைத்து வழிபடுகின்றனர். இங்கு வன துர்க்கை கிழக்கு
நோக்கி தனி கோயிலாக அமைந்திருப்பது சிறப்பு.
ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுவது நல்லது. ராகுவுக்கு அதிதேவதை துர்க்கை.
ராகு காலம் என்பது ராகு பகவான் துர்க்கையை வழிபடும் நேரம். எனவே அந்த நேரத்தில்
அனைவரும் துர்க்கையை வழிபடும் போது ராகுவின் பரிபூர்ண அருள் கிடைக்கும்.
ராகு காலத்தில் துர்க்கைக்கு நெய் விளக்கேற்றி 108 அல்லது 54 என்ற எண்ணிக்கையில்
எலுமிச்சை மாலை சாற்றி வழிபடுகிறார்கள். திருமணம் ஆகாத ஆண்,பெண்கள்
துர்க்கையை வழிபட்டால் விரைவில் திருமணம் நிச்சயம் ஆகும். புத்திர பாக்கியம்
கிடைக்கும். சகல துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறலாம்.
கும்பகோணத்தில் இருந்து வேப்பத்தூர், சூரியனார்கோயில் வழியாக குத்தாலம் செல்லும்
நகரப்பேருந்தில் பயணித்தால் கதிராமங்கலம் செல்லலாம். இவ்வழியாக
மயிலாடுதுறை வரை செல்லும் தனியார் பேருந்தும் உண்டு. கதிராமங்கலம் வந்து
அம்பாளை தரிசித்து நல்ல பலனை அடையுங்கள்.
திருமாளம் எஸ். பழனிவேல்