tamilnadu epaper

எங்கள் குலதெய்வம் வல்லம் 'ஏகௌரி' அம்மன்' சிறப்பு

எங்கள்  குலதெய்வம் வல்லம் 'ஏகௌரி' அம்மன்' சிறப்பு

ஏகௌரி அம்மன் கோயில் தஞ்சை மாவட்டம் வல்லம் என்ற 

ஊரில் உள்ளது. தஞ்சாவூர் திருச்சி சாலையில் உள்ளது வல்லம்.

வல்லத்தில் இருந்து சுமார் 2 கி மீ தொலைவில் வல்லம் 

ஆலக்குடி சாலையிலும், ஆலக்குடி ரயில் நிலையத்தில் 

இருந்து சுமார் 4 கி மீ தொலைவிலும் உள்ளது இந்த கோயில்.

 

 சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கோயில் இது. முதலாம் பராந்தக 

 சோழன் காலத்தில் (கி பி 907 - 955) வல்லம் பட்டாரகி அம்மன் என்று 

 அழைக்கப்பட்டது இந்த கோயில். வல்லம் தல புராணத்தில்

 ஏகவீரி என்றும் சண்டிகா தேவி என்றும் போற்றப்படுகிறார். ஏகவீரி என்ற 

பெயரே ஏகௌரி என்று இன்று அழைக்கப்படுகிறது.  

 

'வல்லத்து ஏகௌரி வடக்கு பார்த்த செல்வி 

நீலி கபாலி நிரந்ததோர் பஞ்சாட்சரி"

-என்ற நாட்டுப்புற பாடல் இந்த அம்மனை போற்றிப் பாடுகிறது.  

 

1995 ஆம் ஆண்டு தஞ்சையில் நடந்த எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு வெளியீடாக 

வெளிவந்த 'வரலாற்றில் வல்லம்' - ஆசிரியர் திரு.ச.கிருஷ்ணமூர்த்தி (தொல்லியல் துறையில்

பணி புரிந்தவர்) என்ற நூலில் இந்த தகவல்கள் உள்ளன.

 

தஞ்சகாசுரன் எனும் அரக்கன் பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு 

ஏற்பட வேண்டும் என்ற வரம் பெற்று தேவர்களை துன்புறுத்தி வந்தான்.

தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட, அவரும் அசுரனை வதம் செய்ய அம்பிகையை அனுப்பி வைத்தார். 

அசுரன் பல வடிவங்கள் எடுத்து அம்பிகையுடன் போரிட்டான். ஒரு கட்டத்தில்

எருமையாக வடிவெடுக்க அம்பிகை சூலத்தால் குத்தி வதம் செய்தாள்.   

அசுரனை கொன்ற பிறகும் அம்பிகையின் உக்கிரம் குறையவில்லை. 

அதன் காரணமாகவும் தேவர்கள் துன்பப்பட்டார்கள். மீண்டும் அவர்கள் 

சிவபெருமானிடம் முறையீடு செய்தார்கள். ஈசன் அம்பிகையை பார்த்து 

அவளின் இன்னொரு பெயராகிய 'கெளரி' என்பதை குறிப்பிட்டு 'ஏ கெளரி'

சாந்தம் கொள் என்று சொல்ல அம்பிகை சாந்தமானாள். ஈசன் எப்படி 

அழைத்தாரோ அது போலவே அம்மனுக்கு 'ஏகௌரி' அம்மன் என்ற பெயர் 

வழங்கலாயிற்று. அசுரனை வதம் செய்தது ஆடி கடைசி வெள்ளிக்கிழமை.

ஒவ்வொரு ஆண்டும் அதே நாளில் பக்தர்கள் பால்குடம் எடுத்தும் 

தீமித்தும் அம்மனை சாந்தப்படுத்துகிறார்கள்.

 

களத்திர தோஷம், கால சர்ப்ப தோஷம் இருக்கும் பெண்களுக்கான பிரதான வழிபாட்டு 

தலம் இது. பெண்கள் அம்மனுக்கு குளியல் மஞ்சளை படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.

அர்ச்சனை முடிந்ததும் அதை பிரசாதமாக தருகிறார்கள். அந்த மஞ்சளை தேய்த்து 

தினமும் நீராடி வந்தால் வரன் தேடும் பெண்களுக்கு நல்ல வரன் அமையும் என்பது 

நம்பிக்கை. தீராத நோயால் படுத்த படுக்கையாக இருக்கும் கணவனை காப்பாற்ற வேண்டிக் 

கொண்டு, பிரார்த்தனை பலித்ததும் பெண்கள் எருமைக் கன்றை கோயிலுக்கு காணிக்கையாக 

கொடுக்கின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்தால் அம்மன் பாதத்தில் 

வைத்த எலுமிச்சம் பழத்தின் சாறு பிழிந்து அதை அவர்களுக்கு அருந்த தருகிறார்கள். 

விரைவில் அவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 

ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பெளர்ணமி தினத்தன்று அம்மனுக்கு சிறப்பு பூஜை 

மற்றும் ஹோமங்கள் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொள்பவர்களுக்கு சகல தோஷங்கள்,

சங்கடங்கள் உடனடியாக தீர்ந்துவிடும் என்பதுவும் காலம்காலமாக பக்தர்களின் 

நம்பிக்கையாக உள்ளது.

 

கோயில் திறந்திருக்கும் நேரம் சாதாரண நாட்களில் காலை 8.00 மணி முதல் மதியம் 2.00

மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் 6.30 வரையிலும் வெள்ளி மற்றும் 

அமாவாசை,பௌர்ணமி தினங்களில் காலை 7.00 மணி முதல் இரவு 7.30 வரையிலும் 

நடை திறந்திருக்கும். 

 

                                                           

திருமாளம் எஸ். பழனிவேல்