எங்கள் குலதெய்வம் ஐயன்
எங்கள் நெஞ்சம் இனிதுற - நின்றன்
இன்னருள் நாடினோம் ஐயனே!
பொங்கும் மகிழ்வே புகுந்திட - நின்றன்
புகழே பாடினோம் மெய்யனே!
எங்கள் குலமாதா
நாங்கள் எல்லாம் கூடியே - நின்
நல்லருள் நாடும் நேரமே!
நாங்கள் எல்லாம் பாடியே - நின்
நல்லருள் தோன்றக் காண்போமே!
எங்கள் முன்னோர்கள் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே தூத்துக்குடி அருகிலுள்ள உடன்குடி கிராமத்தின் அருகில் கூழையன் குன்று என்னும் இடத்திலிருந்து விருதுபட்டிக்கு வந்து வியாபாரம் பண்ணி முன்னேறியுள்ளார்கள். இன்றும் அவ்விடத்தில் கூழையன் குன்று என்று எழுதி உள்ள சான்றுகள் உள்ளன. எங்கள் குல முன்னோடி கூழையன் நாடார். மதுரையில் வணிகம் செய்த கூ.முத்துக்கருப்ப நாடார் மற்றும் அ.வடிவேல்முருக நாடாரும் விருதுபட்டியில் கே.வி.எஸ். பள்ளிக்கூடம் கட்ட பிடியரிசித் திட்டம் கொண்டு வந்து முதன் முதலில் விருதுபட்டியில் ஆண்கள் பள்ளியை 1881ல் நிறுவினார்கள். தற்போதைய பங்குனிப் பொங்கல் பறைசாட்டும் பிள்ளையார் கோவில் அருகில் கூட்டுக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளனர். அப்பொழுது நம் வெயிலுகந்தமன் கோவிலுக்கும் மாரியம்மன் கோவிலுக்கும் சப்பரமும் வாகனங்களும் செய்து கொடுத்து உள்ளனர். இன்றும் கோவில் தேவஸ்தானத்தில் அதன் விபரங்கள் உள்ளன. பஸ், ரயில் இல்லாத அந்தக் காலத்திலேயே மாட்டு வண்டி கட்டி தேனி, கோயம்புத்தூர் சென்றும் வியாபாரம் செய்துள்ளனர். இன்றும் வேல்கம்பு, ஈட்டி முதலியன அந்தக்கால ஞாபகமாக உள்ளன. 1905ம் ஆண்டு முதலில் சாத்தூர் ரோடு நந்தவனத்தை நம் மக்கள் வாங்கியுள்ளார்கள். பின்னர் மாதா கோவிலும், கருப்பசாமி கோவிலும் இடம் வாங்கிக் கட்டப்பட்டுள்ளன. நந்த வனத்தில் பிள்ளையார், தண்டபாணி, நாகர், அல்லியூத்து அய்யானார் ஆகிய தெய்வங்களை கோவில்களில் நிறுவினர். 1989ல் கருப்பசாமி கோவிலில் காமாட்சி அம்மனையும் நிறுவியுள்ளார்கள். நம் கோவிலில் தைப்பொங்கல் அன்றும் , மாசி சிவராத்திரி அன்றும் அனைவரும் ஒன்று கூடி சாமி கும்பிட்டு வருகிறோம். முன்பெல்லாம் சாமி கும்பிட்டு பானக்காரம் மட்டுமே கொடுத்து வந்துள்ளார்கள். பின் அவுல், கடலை, சுண்டல் என்று கொடுத்துள்ளார்கள். அதன் பின்புதான் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் படையல் வைத்து சாமி கும்பிட்டு வருகிறோம். தற்போது 1998ல் இருந்து மதியச் சாப்பாடும் எற்பாடு செய்யப்பட்டுள்ளது. அ. வடிவேல் முருக நாடார் சமூக சேவையிலும் நாடார் மகாஜன சங்க சரித்திரத்தில் இடம் பெற்றவர். வாரவாரம் வெள்ளி அன்று பூஜை செய்து பிரசாதம் வழங்கப்படும். தைப்பொங்கல், சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, மற்றும் சரஸ்வதி பூஜை அன்று சிறப்பு பூஜை நடைபெறும். மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது தண்ணீர் பந்தல் மற்றும் மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு கொடுப்பது சிறப்பு. ஸ்ரீஅல்லியூத்து அய்யனார், ஸ்ரீ கருப்பசுவாமி மற்றும் ஸ்ரீகாமாட்சி அம்மன் அருள் கிடைக்க தமிழ்நாடு இ பேப்பர், தமிழ்நாடு பண்பலை ,தமிழா தொலைக்காட்சிக்கும், வாசகர்கள் மற்றும் நேயர்களுக்கும் வேண்டுகிறேன்.
K. ஜவஹர்
6/1023 பாலன்நகர்
பேராலி ரோடு
பேளம்பட்டி
விருதுநகர்-626001