tamilnadu epaper

எங்கள் குலதெய்வம்* *ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை* சிறப்பு

எங்கள் குலதெய்வம்*  *ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை* சிறப்பு

தஞ்சை மாவட்டம் பாபநாசத்திலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீமுல்லை வனநாதர் ஆலயம்.

 

பிள்ளை வரம் வேண்டுபவர்கள், சுகப்பிரசவம் வேண்டுபவர்கள், திருமணம் விரைவிலேயே கைகூட வேண்டும் என்று வேண்டுபவர்கள் இங்கே பிரார்த்தனை

செய்து கொண்டால் உடனடியாக பலன் கிடைக்கும் என்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு. திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தையில்லாத பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி, இங்கே வந்து அம்பாள் சன்னதியில் சிறிது நெய்யால் மெழுகி, கோலமிட்டு அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

 

 தங்களுடைய பிரார்த்தனை பலித்தவுடன் பக்தர்கள் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செய்கிறார்கள்.

 

 அதேபோல் பல ஆண்டுகள் திருமணம் ஆகி குழந்தை இல்லாதவர்கள் அம்பாளின் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்துக் கொடுக்கப்படும் நெய்யை தம்பதியினர் 48 நாட்கள் தொடர்ந்து இரவில் சிறிதளவு சாப்பிட்டு வர வேண்டும். கணவனால் முடியாவிட்டால் கூட மனைவி தினமும் இரவு சிறிதளவு நெய்யை சாப்பிட்டு வந்தால், விரைவில் கருத்தரிக்கும் பாக்கியம் உண்டாகும்.

 

கருவுற்றிருக்கும் தாய்மார்கள் சுகப்பிரசவம் அடைய வைக்கும் விளக்கெண்ணெய் இந்த ஆலயத்தில் அம்பாள் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்துக் கொடுக்கப்படுகிறது. இது மிக மிக விசேஷமானது. 

 

 பிரசவ வலி ஏற்படுகின்ற பொழுது இந்த விளக்கெண்ணையை வயிற்றில் தடவினால் நல்ல விதமாக சுகப்பிரசவம் ஆகும்.

 

 இங்கே அருள்பாலிக்கும் ஈசனுக்கு முல்லை வன நாதர் என்று பெயர். இவர் சுயம்புவாக தோன்றியவர். இறைவனின் திருமேனி புற்று மண்ணினாலான சுயம்பு லிங்க திருமேனி ஆகும். இன்றும் சாமியினுடைய திருமேனியில் முல்லை கொடி படர்ந்த அந்த வடு தெரிகிறது. புற்று மண்ணினால் ஆனவராகையால், இவருக்கு தினசரி அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஸ்வாமிக்கு புனுகு சட்டம் சாத்துவார்கள்

 

தீராத நோய் உடையவர்கள் குறிப்பாக சரும நோய் உள்ளவர்கள் சுவாமிக்கு புனுகு சட்டம் சாத்தி தம் நோய் நீங்கப் பெற்று வருவதை இன்றளவும் நாம் கண்கூடாக காண முடிகிறது.

 

முல்லைவன நாதருக்கு முறைப்படியான வழிபாடுகளைச் செய்து துன்பம் நீங்கி மன அமைதி பெற்று அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையிலே நன்மைகளைப் பெறுகிறார்கள்.

 

ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடும் ஆடிப்பூர விழாவும் நடைபெறுகிறது. அம்பாள் இடது கையை இடுப்பில் வைத்தபடி கர்ப்பத்தைத் தாங்கியபடி உள்ளது சிறப்பான அம்சமாகும்.

 

 இங்கே சுவாமியுடன் நந்தி மற்றும் விநாயகர் ஆகியோரும் சுயம்பு வடிவமாக காட்சியளிக்கிறார்கள்.

 

ஒரு காலத்தில் இந்த இடம் முல்லைக் காடாக இருந்ததாம். நித்ருவர், வேதிகை என்ற தம்பதியர் தங்களுக்கு குழந்தை இல்லாத குறையால் முல்லைவனத்து நாதனையும் இறைவியையும் வணங்கி குழந்தை பேரு தரும்படி வழிபட்டனர். இறை அருளால் கருவுற்ற வேதிகை ஒருநாள் கணவர் வெளியில் சென்றிருந்த சமயம் கர்ப்ப வலியால் அவஸ்தைப்பட நேரிட்டது. அச்சமயம் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து அங்கே பிச்சை கேட்கவும் வலியினால் மயக்கமடைந்த நிலையில் இருந்ததால் வேதிகையால் முனிவருக்கு உடனடியாக உணவிடமுடியவில்லை. அது அறியாத முனிவர் சாபமிட வேதிகையின் கரு கலைந்தது. வேதிகை அம்பாளிடம் பிரார்த்தனை செய்து முறையிட அம்பாள் தோன்றி, கலைந்த கருவை ஒரு குடத்தில் ஆவாகனம் செய்து குழந்தை உருவாகும் நாள் வரையிலும் வைத்து காப்பாற்றி குழந்தையாக வேதிகையிடம் கொடுத்தார். வேதிகை மகிழ்ந்து இத்தலத்திலே எனது கர்ப்பத்தைத் காத்து ரட்சித்தது போல, இவ்வுலகில் உள்ள கருத்தரித்த தாய்மார்கள் அனைவருடைய கருவையும் காப்பாற்ற வேண்டும். கர்ப்ப ரட்சாம்பிகையாக நீ இங்கே அருளாசி செய்ய வேண்டும் என்று பிரார்த்திக்க, அம்பாள் இங்கிருந்து அருள் புரிவதாக தல வரலாறு கூறுகிறது.

 

 தஞ்சாவூரில் இருந்தும், கும்பகோணத்தில் இருந்தும் நேரடியாக பஸ் வசதி உள்ளது.

 

அனைவரும் கர்ப்ப ரட்சாம்பிகையின் அருளைப் பெறுவோம்.

 

சி.மகாலட்சுமி,

ஸ்ரீரங்கம்.