எங்கள் குலதெய்வம் ஸ்ரீகெவிபெருமாளப்பன் ஆகும். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுக்காவில் உள்ள சிங்காரப்பேட்டைக்கு சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குன்றின் மேல் உள்ளது எங்களுடைய குலதெய்வக் கோயில். சிங்காரப்பேட்டையிலிருந்து பக்தர்கள் நடந்தும், ஆட்டோவிலும், பேருந்திலும் இந்தக் கோயிலுக்குச் செல்லுகிறார்கள்.
வழக்கமாக சனிக்கிழமைகளில்தான்
இங்கு பக்தர்கள் அதிகம் செல்லுகிறார்கள். புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மிக விசேசமானவை. அப்பொழுது நிறைய பக்தர்கள் கோயிலுக்குச் செல்வார்கள். மற்ற நாட்களில் கோயில் பூசாரிக்கு ஃபோனில் தகவல் சொல்லி அவருடைய இசைவைப் பெற்று கோயிலுக்குச் செல்லலாம்.
கோயிலுக்கு முன்னால் ஒரு சிறிய மண்டபமும், அதற்கு பக்கத்தில் சற்று பெரிய மண்டபமும் உள்ளன. பயணக் களைப்பு தீர பக்தர்கள் சிறிய மண்டபத்தில் உட்காருகிறார்கள். கோயில் விசேசங்கள் நடக்கும் பொழுது, பெரிய மண்டபத்தில் சாப்பாடு போடுகிறார்கள்.
குன்றின் அடிவாரத்தில் ஒரு ஆஞ்சநேயர் கோயில் திறந்தவெளியில் இருக்கிறது. குன்றின் மேல் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேதரராக அமர்ந்திருக்கும் ஸ்ரீகெவிபெருமாளப்பனை வழிபடுவதற்கு முன்பு பக்தர்கள் இந்த ஆஞ்சநேயரைத்தான் வழிபடுகிறார்கள்.
குன்றின் மேல் ஏறுவதற்கு, பாதி வரை ஒழுங்கான கற்களைப் போட்டிருக்கிறார்கள். கொஞ்சம், கொஞ்சமாக பக்தர்களிடம் நிதி உதவி பெற்று மீதியையும் போட்டு முடிக்க முயற்சி செய்து வருகிறார்கள். குன்று நெடுக அதிக குரங்குகள் காணப் படுகின்றன. எனவே நம்முடைய கைகளில் உள்ள பைகளை நாம் கவனத்துடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
சுமார் பதினைந்து நிமிடங்கள் குன்றின் மேல் நடந்த பிறகு கோயில் வந்து விடுகிறது. கோயிலுக்கு எதிரே கருட கம்பம், ஒரு சிறிய ஆஞ்சநேயர் சிலை ஆகியவை இருக்கின்றன. எதிரே உள்ள சிறிய குகைக் கோயிலில் எம்பெருமான்,தேவியர்கள்
சூழ அமர்ந்து, தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த கோயிலின் சாவி பூசாரியிடம் உள்ளது. கோயிலுக்குப் பக்கத்தில் கற்களால் கட்டப்பட்ட ஒரு சிறிய அறை இருக்கிறது. இறைவனுக்கு படைக்கத் தேவையான பிரசாதங்களை பூசாரி இங்கு தான் செய்கிறார். பக்கத்தில் இயற்கையாகவே தொட்டி போல அமைந்துள்ள கற்களுக்கு மத்தியில் நீர் இருக்கிறது. முன்பெல்லாம் பூஜை வேலைகளுக்கு இந்த நீரைத்தான் பயன்படுத்தினார்களாம்.
இப்பொழுது பயன்படுத்துவதில்லை என்று கூறுகிறார்கள்.
மலை உச்சியிலிருந்து கீழே பார்க்கும் பொழுது அழகான காட்சிகள் தெரிகின்றன. இறைவனை
தரிசித்து, வணங்கி விட்டு
குன்றிலிருந்து கீழே இறங்கும் பொழுது, வீசும் மூலிகைக் காற்று மனதுக்கும், உடலுக்கும்
இதமாக இருக்கிறது. வீட்டுக்கு வந்த பின்பும் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேதர ஸ்ரீகெவிபெருமாளப்பனின் நினைவுகள் நம் மனதில் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கின்றன. அந்த எம்பெருமானின் நல்லாசிகள் அனைவருக்கும் கிடைக்கட்டுமாக!
...............................................
அனுப்பியவர் முகவரி
.........................................
இரா.வசந்தராசன்
பழைய போஸ்ட் ஆபிஸ் தெரு
கல்லாவி (P.O)
கிருஷ்ணகிரி (D.T)
PIN 635304