என்கவுன்ட்டர் செய்து விடுவதாக மிரட்டிய ஓய்வுபெற்ற போலீஸ் உதவி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர் ஒருவரது மனைவியை சந்தித்த அப்போதைய போலீஸ் உதவி ஆணையர் இளங்கோவன், இனி உன் கணவர் கையில் கத்தியை எடுத்தால் என்கவுன்ட்டர் செய்து விடுவதாக மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம், சம்பந்தப்பட்ட உதவி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கும், காவல் ஆணையருக்கும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து உதவி ஆணையர் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தற்போது பணியில் இருந்து ஓய்வுபெற்று விட்டதாகவும், தனது தரப்பில் விளக்கமளிக்க வாய்ப்பு வழங்காமல் தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே இடைக்கால உத்தரவு பிறப்பித்ததாகவும், பிரதான வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் மாநில மனித உரிமை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாநில மனித உரிமை ஆணையம் இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக் கும் வரை மனுதாரரான ஓய்வுபெற்ற உதவி ஆணையர் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என இடைக்கால தடை விதித்தனர். மேலும், இதுதொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்கவும் மனித உரிமை ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.