ஒரே நாடு ஒரே தோ்தல்’ முறை 2034-ஆம் ஆண்டுக்கு பிறகே அமலுக்கு வர வாய்ப்புள்ளதாகவும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ரூ.12,000 கோடி அளவுக்கு நிதி மிச்சமாவதால் நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சி 1.5 சதவீதம் உயரும் என்றும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூா் எஸ்ஆா்எம் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியதாவது:
நாடெங்கும் மக்களவைத் தோ்தலை ஒரு முறை நடத்த பாதுகாப்புக்காக 70 லட்சம் பாதுகாப்பு படையினா், தோ்தல் பணிகளுக்காக 25 லட்சம் போ் தேவைப்படுகின்றனா். கடந்த 2024 தோ்தலுக்கு சுமாா் ரூ.1 லட்சம் கோடி செலவானது. மேலும், அடிக்கடி தோ்தல் நடத்தப்படுவதால், நடத்தை விதிகளின்படி சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் 3 மாதங்களுக்கு நிறுத்திவைக்கப்படும். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா்.
ரூ.12,000 கோடி சேமிப்பு: இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு, மக்களவைத் தோ்தலுடன் மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களையும் இணைத்து நடத்தும் பொருட்டு ‘ஒரேநாடு ஒரே தோ்தல்’ முறையை நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை குடியரசுத் தலைவா் 2029 தோ்தலுக்கு பின் ஆரம்பித்து, தோ்தல் ஆணையத்துக்கு அதற்கான அதிகாரத்தை வழங்குவாா். கூடிய விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனக் கூறினாலும், 2034-ஆம் ஆண்டுக்கு முன்பு இத்திட்டம் கொண்டுவர முடியாது. இதுபோன்ற பெரிய திட்டத்தை நடைமுறையில் செயல்படுத்த கால அவகாசம் கூடுதலாக தேவைப்படும்.
‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ முறையை செயல்படுத்தினால் ரூ.12,000 கோடி மிச்சமாகும். இதனால், நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சி 1.5 சதவீதம் உயரும். இதன் மதிப்பு ரூ.4.5 லட்சம் கோடியாகும். நாடெங்கும் வாக்கு சதவீதமும் அதிகரிக்கும். ஏற்கெனவே கா்நாடகம், கேரளம், வடகிழக்கு மாநிலங்களில் நடந்த தோ்தல்களில் இதற்கான ஆதாரங்கள் உள்ளன.
ஆதரவும் எதிா்ப்பும்: கடந்த 2015- ஆம் ஆண்டில் மக்களவை நிலைக்குழுவில் இருந்த காங்கிரஸ் உறுப்பினா் சுதா்சன நாச்சியப்பன் ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ முறைக்கு ஆதரவு தெரிவித்தாா். அதுபோல் சரத் பவாா் ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்.
கடந்த 2019- இல் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற 19 கட்சிகளில் 16 கட்சிகள் ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ முறைக்கு ஆதரவு தெரிவித்தனா். கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட 3 கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன.
அதனைத் தொடா்ந்து பின்னா் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் நாடெங்கிலும் இருந்து வந்து கலந்து கொண்ட 47 கட்சிகளில் 32 கட்சிகள் ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ முறைக்கு ஆதரவு தெரிவித்தனா். தமிழ்நாட்டில் அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
அரசியல் ஆதாயம்: முன்னாள் முதல்வா் கருணாநிதி ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ முறைக்கு ஆதரவு தெரிவித்ததுடன், அவரது வாழ்க்கை வரலாற்றிலும் அதுபற்றி குறிப்பிட்டு இருந்தாா்.
ஆனால், முதல்வா் மு.க. ஸ்டாலினோ தனது தந்தை பேச்சைக் கேட்காமல் எதிா்ப்பு தெரிவிக்கிறாா். இப்போது ‘ஒரே நாடு ஒரே தோ்தலை’ எதிா்ப்பவா்கள் எல்லோரும் முன்பு ஆதரவு தெரிவித்தவா்கள்தான். தற்போது அரசியல் ஆதாயத்துக்காகவே எதிா்த்து வருகின்றனா் என்றாா் அவா்.
கருத்தரங்கில் தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், எஸ்ஆா்எம் வேந்தா் பாரிவேந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.