tamilnadu epaper

கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் கிடப்பில் போடுவது கடமையை மீறுவதாகும் - மதுரை ஐகோர்ட்டு கருத்து

கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் கிடப்பில் போடுவது கடமையை மீறுவதாகும் - மதுரை ஐகோர்ட்டு கருத்து

மனுதாரர்களின் மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலிக்காதது கடமையை மீறுவதாகும் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த குருசாமி என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-


ராமநாதபுரம் மாவட்டம் செல்வநாயகபுரத்தில் தனிநபர்கள் கோவில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் உரிய இடத்தில் கோவில் கட்டுவதற்கு தடையில்லா சான்றிதழ் பெறவில்லை. இதற்காக திரட்டப்பட்ட நிதியை முறைகேடு செய்கின்றனர். இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரினோம். இதுவரை எந்த விசாரணையும் நடக்கவில்லை. எனவே தனிநபர்களின் நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதி விவேக்குமார் சிங் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-


இதுபோன்ற மனுக்களை காலவரையின்றி நிலுவையில் வைப்பதற்குப் பதிலாக, விரைவாக அந்த மனுவை விசாரித்து ஏதாவது ஒரு பொருத்தமான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டிய கடமை மாவட்ட கலெக்டருக்கு உள்ளது என்பதை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமில்லை. இதுபோன்ற மனுதாரர்களின் மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலிக்காதது கடமையை மீறுவதாகும்.


எனவே இந்த கோர்ட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தி, மனுதாரரின் மனுவை குறிப்பிட்ட காலத்துக்குள் பரிசீலிக்க உத்தரவிட முடிவு செய்கிறது.அதன்படி மனுதாரர் மனுவை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் பரிசீலித்து அனைத்து தரப்பினரும் விளக்கம் அளிக்க வாய்ப்பு அளித்து முறையாக விசாரித்து 8 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.