கடலூர், ஏப். 11
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிநெறி வழிகாட்டும் மையத்தில் பயின்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்- தொகுதி-4 நடத்திய தேர்வு வாயிலாக பணிநியமனம் பெற்றவர்களுக்கு நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பாராட்டி கேடயங்களை வழங்கினார்.
அப்போது கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியதாவது:
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ளும் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் போட்டித்தேர்விற்கு தேவையான பாடப்புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் அதிக அளவிலான தேர்வாளர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும், இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்ட தேர்வாளர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்க்கு கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக இத்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகளும், பாடவாரியான மற்றும் முழு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட்டன. இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் 108 போட்டித்தேர்வாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கடந்தாண்டு நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் 14 நபர்கள் தேர்ச்சி பெற்று பணிநியமனம் பெற்றனர். பணிநியமனம் பெற்ற நபர்களை பாராட்டி இன்றைய தினம் கேடயம் வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.