tamilnadu epaper

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா துவக்கம்

ஏர்வாடி தர்காவில்   சந்தனக்கூடு திருவிழா துவக்கம்


கீழக்கரை, மே 1-–

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் ஒலியுல்லா தர்கா சந்தனக்கூடு திருவிழா, நேற்று முன்தினம் மவுலீதுடன் துவங்கியது.


 851ம் ஆண்டின் சந்தனக்கூடு என்னும் மத நல்லிணக்க விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக, ஏர்வாடி கிராமத்தைச் சேர்ந்த, மீனவ கிராம மக்கள் ஏராளமானோர் ஒன்று கூடி, அருகே உள்ள மன்னார் வளைகுடா கடலுக்குச் சென்று, குடங்களில் கடல் நீரை சேகரித்து, அவற்றில் மஞ்சள் பொடி துாவி, தர்கா அலங்கார மண்டபத்தின் முன்புறம் வைத்தனர். உலக நன்மைக்கான சிறப்பு துவா ஓதப்பட்டது.


பின், கொண்டு வந்த கடல் நீரை, தர்காவின் தரைப்பகுதிகள் முழுவதையும் கழுவி, சுத்தம் செய்யும் பணி நடந்தது. நேற்று மாலை 6:30 மணிக்கு, ஷெரீப் மண்டபத்தில், மவுலீது எனப்படும் புகழ் மாலை துவங்கியது. இது மார்க்க அறிஞர்களால், தொடர்ந்து 23 நாட்களுக்கு ஓதப்படுகிறது. 


மே 9ல் ஏர்வாடி பாதுஷா நாயகத்தின் பச்சை வண்ண பிறை கொடி, யானையின் மீது வைத்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, தர்கா முன்புறமுள்ள கொடிமரத்தில், கொடியேற்றம் நடக்க உள்ளது. உரூஸ் எனப்படும் சந்தனக்கூடு விழா, மே 21 மாலை துவங்கி, மறுநாள் அதிகாலை, புனித மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது.


ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழாவில் மீனவ மக்கள் குடங்களில் கொண்டு வந்த கடல்நீரில் மஞ்சள் பொடி தூவி, தர்கா முன் வைத்தனர். அந்த நீரால் தர்கா சுத்தம் செய்யப்பட்டது.