ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் அணி 11 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை ேதாற்கடித்து வெற்றியோடு தொடங்கியது.
ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 5-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்சை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த குஜராத் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணியில் பிரியான்ஷ் ஆர்யாவும், பிரப்சிம்ரன் சிங்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். பிரப்சிம்ரன் சிங் 5 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் நுழைந்தார். மறுமுனையில் புதுமுக வீரர் பிரியான்ஷ் 47 ரன்னில் (23 பந்து) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் (16 ரன்), மேக்ஸ்வெல் (0) சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த சாய் கிஷோரின் சுழலில் சிக்கினர். அப்போது அந்த அணி 4 விக்கெட்டுக்கு 104 ரன்களுடன் சற்று தடுமாற்றத்திற்குள்ளானது.
இந்த சூழலில் ஸ்ரேயாஸ் அய்யர், மார்கஸ் ஸ்டோனிசுடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் பந்துகளை நாலாபுறமும் ஓடவிட்டார். அணியின் ஸ்கோர் 162-ஆக உயர்ந்த போது, ஸ்டோனிஸ் 20 ரன்களில் சாய் கிஷோரின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.
20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுக்கு 243 ரன்கள் குவித்தது. ஐ.பி.எல்.-ல் பஞ்சாப்பின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அதே சமயம் இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாக பதிவானது.
ஸ்ரேயாஸ் அய்யர் 97 ரன்களுடனும் (42 பந்து), ஷசாங் சிங் 44 ரன்களுடனும் (16 பந்து) அவுட் ஆகாமல் இருந்தனர். அவர்கள் கடைசி 5 ஓவர்களில் மட்டும் 87 ரன்கள் திரட்டினர். குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டும், ரபடா, ரஷித்கான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 244 ரன் இலக்கை நோக்கி குஜராத் அணி ஆடியது. கேப்டன் சுப்மன் கில்லும், தமிழகத்தின் சாய் சுதர்சனும் முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்து சூப்பரான தொடக்கம் தந்தனர். கில் 33 ரன்னில் பெவிலியன் திரும்பினார். 2-வது விக்கெட்டுக்கு சாய் சுதர்சனுடன், ஜோஸ் பட்லர் கைகோர்த்தார். இவர்களும் அதிரடி காட்ட தவறவில்லை. அபாரமாக ஆடிய சாய் சுதர்சன் 74 ரன்களில் (41 பந்து) அர்ஷ்தீப்சிங் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். சிறிது நேரத்தில் ஜோஸ் பட்லர் 54 ரன்களில் (33 பந்து) வீழ்ந்தார். இதற்கிடையே, இம்பேக்ட் வீரராக வந்த ரூதர்போர்டுவும் நாலாபுறமும் மட்டையை சுழற்றினார்.
கடைசி ஓவரில் குஜராத்தின் வெற்றிக்கு 27 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங் வீசினார். ரூதர்போர்டு (46 ரன்), ராகுல் திவேதியா (6 ரன்னில் ரன்-அவுட்) ஆகியோரை சாய்த்த அவர் 15 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தார். குஜராத் அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 232 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் முதலாவது வெற்றியை சுவைத்தது.