Breaking News:
tamilnadu epaper

குருத்தோலை கற்றுத் தரும் பாடம்..!

குருத்தோலை கற்றுத் தரும் பாடம்..!


கிறிஸ்தவர்களின் தவக்காலம் என்பது சாம்பல் புதன் தொடங்கி உயி்த்தெழுந்த பண்டிகையான ஈஸ்டர் வரையுள்ள நாட்கள் ஆகும். இந்த 46 நாட்களில் 6 ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்து 40 நாட்கள் உபவாசம் இருந்து கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைபிடிக்கிறார்கள்.


இயேசு உயிர்த்தெழுந்த ஞாயிறுக்கு முந்தைய ஞாயிறு கிறிஸ்தவர்களால் Palm Sunday என்னும் குருத்தோலை ஞாயிறாக கொண்டாடப் படுகிறது. இந்நாளில் கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலை பிடித்து இயேசு நாதர் எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு பவனியாய் வந்ததை நினைவு கூறுவர்கள். இது புனித வாரம் எனப்படும் பெரிய வாரத்தின் துவக்க நாளாகவும் கொண்டாடப்படுகிறது.


இன்று ஊர்வலங்களில் பெரும்பாலும் தென்னங்குருத்து ஓலைகள் தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பைபிளில் தென்னை மரம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. "நீதிமான் பனையைப் போல செழித்து வளர்வான்" என பனையைப் பற்றித் தான் கூறப்பட்டுள்ளது.


ஆகவே குருத்தோலை என்பதை பனங்குருத்தோலை எனக் கொண்டால் அது கற்றுத்தரும் பாடம் பல. அது என்ன என அறிந்து கொண்டால் நாமும் குருத்தோலையைப் போல வாழலாம்.


1. குருத்தோலை நேராக மேல் நோக்கியே நிற்கும். அதனைப் போல நாமும் உலகப்பிரகாரமாகவும் ஆன்மிகப் பிரகாரமாகவும் மேலானவைகளையே நாட வேண்டும். நம்முடைய பார்வை மேலான இறைவனை மட்டுமே பார்ப்பதாகவே இருக்க வேண்டும்.


2.குருத்தோலை சுத்த வெள்ளையாக இருக்கும். எந்தக் கறையும் இருக்காது. அது போல நாமும் பரிசுத்தமாக கறையற்ற வாழ்வு வாழ வேண்டும்.


3. பனங்குருத்தோலை வாசமாக இருக்கும். பனையோலையில் வைத்து அவிக்கும் கொழுக்கட்டையில் இந்த மணத்தை உணர முடியும். அது போல நாமும் மணம் வீசுபவர்களாக வாழ வேண்டும்.


4.பனங்குருத்தோலையின் இரு இதழ்களும் நன்கு ஒட்டியிருக்கும். ஆது போல நாமும் இறைவனுடன் இணைந்து வாழ வேண்டும். உலகத்தவரோடும் இணைந்து வாழ வேண்டும்


5. பனங்குருத்தோலை எவ்வளவு காலமானாலும் தன் நிறத்தை மாற்றிக் கொள்ளாது. அதனைப் போல நாமும் நம்மை ஒருபோதும் மாற்றிக் கொள்ளக்கூடாது.


பனங்குருத்தோலை கற்றுத் தரும் பாடங்களை மனதில் நிறுத்துவோம். இறைவனுக்கு உகந்தவர்களாக இந்த தவக்காலத்தில் மட்டுமல்ல எல்லாக் காலத்திலும் வாழ்வோம்.


ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்

வேம்பார்.

(குருத்தோலை ஞாயிறு 13.04.2025)