tamilnadu epaper

கொஞ்சம் யோசியுங்கள் பெற்றோர்களே..!

கொஞ்சம் யோசியுங்கள் பெற்றோர்களே..!


 கோடை விடுமுறை துவங்கப் போகிறது பள்ளிக் குழந்தைகளுக்கு.!

ஆனால் பள்ளிகளில் இனிமேல்தான் அதிரிபுதிரியாக வேலைகள் ஆரம்பிக்கும். தேர்வுத் தாள் மதிப்பீடு , தேர்வு முடிவுகள் , அடுத்த கல்வியாண்டுக்கான பாடப் பிரிவுகளை முறைப் படுத்துவது, புதிய மாணவர் சேர்க்கைக்காக விளம்பர உத்திகளை உருவாக்குவது அப்படி, இப்படியென்று ஆயிரத்தெட்டு வேலைகள் காத்திருக்கும் பள்ளி நிவாகத்துக்கும், ஆசிரியர் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கும்....!



                           பெற்றோர்களுக்கோ கோடை விடுமுறையில் குழந்தைகளை எப்படி போரடிக்காமல் அவர்கள் நேரத்தை உபயோகமாக செலவிட வைப்பது, அவர்கள் அடிக்கும் லூட்டிகளை எப்படி சமாளிப்பது என்பது பெரிய்ய கேள்விக்குறியாக இருக்கும்...! அதிலும் கணவன், மனைவி இரண்டு பேரும் வேலைக்குப் போகும் குடும்பங்களில் கோடை விடுமுறை என்பது கொஞ்சம் கொடுமையான விடுமுறையாகத்தான் இருக்கும். 



"குழந்தைகளை உங்க அம்மா வீட்டுக்கு அனுப்பலாமா" னு கணவனும்... "ஏன் எங்கம்மா,அப்பாவ மட்டும் இரும்புலயா அடிச்சு வெச்சிருக்கு...பாவம் அவங்களுக்கே ப்ரஷர், சுகருனு உடம்பைப் படுத்துது..பேசாம உங்கம்மா வீட்டுக்கே அனுப்பிரலாம் "னு மனைவியும் பேசி முடிவெடுப்பதற்குள் ..இரண்டு வீட்டுப் பெரியவர்களும் புத்திசாலித்தனமாக ஒரு முடிவெடுத்து விடுவார்கள். ரெண்டு பக்கத்திலிருந்தும் ஃபோன் வரும்.



"குழந்தைகளுக்கு லீவ் விட்டாச்சில்ல... குழந்தைகளோட வந்து ஒரு வாரமாச்சும்(!) தங்கிட்டுப் போகக்கூடாதா?..அப்படீனு...!

இதிலிருந்தே தெரிஞ்சிக்கலாம்..."குழந்தைகளை மட்டும் அனுப்பினா எங்களால சமாளிக்க முடியாது.".னு அவங்க சொல்லாம சொல்றத...! உடனே பெத்தவங்களுக்கு ரோஷம் வரும்.



எங்கேயும் போக வேண்டாம். குழந்தைகளையும் அனுப்ப வேண்டாம். ஏதாச்சும் சம்மர் க்ளாஸ் ல சேத்திரலாம். லீவு முடியறதுக்குள்ள எங்கயாச்சும் நாலு நாள் டூர் போய்ட்டு வந்தா போகுது. அதுக்கப்புறம் இருக்கவே இருக்கு. அடுத்த வருஷத்துக்கான யூனிஃஃபார்ம் தைக்க...நோட்டு, புக்ஸ் இதை எல்லாம் வாங்கிட்டு வந்து அட்டை போட்டு,லேபிள் ஒட்டனு லீவெல்லாம் ஓடியே போயிடும்”னு இவங்களாகவே சம்மர் லீவுக்கு கூட ஒரு டைம் டேபிள் போட்டுக் கொள்வார்கள்...! சம்மர் கிளாஸில் சேர்த்த பிறகு தினமும் யார் கொண்டு போய் விட்டு, அழைத்து வருவது.. நீயா.. இல்லை நானா..?இது அடுத்த பிரச்சினை..!





                           இப்பிடி ஸ்கூல் நடத்துபவர்கள் ஒரு மாதிரி பிஸியாவும் மாணவர்களும் அவர்களைப் பெற்றவர்களும் வேறு ஒரு மாதிரி பிஸியாவும் இருப்பார்கள்.. ஆனால் இரண்டு தரப்பில் இருப்பவர்களும் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி யோசிக்கவே மாட்டார்கள். 



அது என்ன தெரியுமா? குழந்தைகளின் ஸ்கூல் பஸ் கண்டிஷன் எப்படி இருக்கிறது என்பதையோ, இல்லை குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் ஆட்டோ,வேன் இவற்றின் கண்டிஷன் எப்படி இருக்க்கிறதென்பதையோ யாரும் கவனிப்பதே இல்ல. ப்ரைவேட்டாக ஸ்கூலுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் வேன், ஆட்டோ எல்லாம் கோடை விடுமுறையில் ஓட்டமாக ஓடி 

டயர் எல்லாம் தேய்ந்து ஒரு மாதிரி இருக்கும்.! 



வாகன ஓட்டுனர்களிடம் சொல்லி வாகனத்தை எந்தவித ரிப்பேருமில்லாமல் நன்றாக சர்வீஸ் செய்து கொண்டு வந்தால்தான் குழந்தைகளை அனுப்ப முடியும் என்று பெற்றோர்கள் கறாராக சொல்வது மட்டுமல்லாமல்..வாகனம் நல்ல கண்டிஷனில் இருக்கிறதா என்று தாங்களே கட்டாயம் சோதனை செய்வது மிக அவசியம்.



             அப்புறம் ஸ்கூல் பஸ்..! ஸ்கூல் பஸ்ஸோட கண்டிஷனை எல்லாம் பள்ளி நிர்வாகம் கவனத்தில் எடுத்துக்காது..! அவர்கள் கவனமெல்லாம் புதிதாக மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் என்ன கண்டிஷன் போடலாமென்றோ அல்லது பள்ளிக் கட்டணத்தை எந்த விதமாக உயர்த்தலாம் என்பதில்தான் இருக்கும். 



                         இந்த விஷயத்தில் அதிக அக்கறையும்..பொறுப்பும் .பெற்றோர்களுக்கு மட்டும்தான்..! புதிய கல்வியாண்டுக்கு ஃபீஸ் கட்டச் செல்லும் போதே,பள்ளிப் பேருந்து நல்ல முறையில் பராமரிக்கப் பட்டு வருகிறதா..? பேருந்து ஓட்டுனர் ஓட்டுனர் உரிமம் பெற்றவரா...? உரிமத்தைப் புதுப்பித்துள்ளாரா? குழந்தைகளைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் அளவுக்குப் பொறுப்பானவராக அனுபவசாலியாக இருக்கிறாரா? என்பதை எல்லாம் ஐயமறக் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு திருப்தியான பதில் வந்த பிறகுதான் பள்ளிக் கட்டணத்தைக் கட்ட வேண்டும். 



மழுப்பலாகவோ...இல்லை இதை எல்லாம் உங்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கட்டாயமில்லை என்று அதிகார தோரணையாகவோ பதில் அளித்தால் பெற்றோர்கள் தாரளமாக அவர்களைக் கேள்வி கேட்கலாம்..பிள்ளைகளை வேறு பள்ளியில் சேர்க்கப் போவதாக எதிர்க்குரல் கொடுக்கலாம். குழந்தைகளின் பாதுகாப்புதான் முக்கியம். படிப்பு பிறகுதான்....! 



                       “நாங்க ரொம்ப பிஸி..! அதனால வேற பேரன்ட்ஸ்கிட்ட இதைப் பத்தி விசாரிக்கச் சொல்லி இருக்கோம்னு விட்டேத்தியா இருந்துடாதீங்க...! உங்களுக்கு அறிமுகமான பேரன்ட்ஸ் எல்லோரையும் கூட்டிகிட்டு ஒரு க்ரூப்பா போயி இதைப் பத்தி ஸ்கூல்ல விசாரிங்க.அப்புறமா "ஃபுல் ஃபீஸ்" ( Full Fees ) கட்டுங்க..! அப்பதான் உங்க மைண்ட் "பீஸ் ஃபுல்" லா (Peacefull) இருக்கும்... !.

கவனமாக இருங்க பெற்றோர்களே!



-விஜி சம்பத், 

சேலம்.