தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகில் உள்ள கயத்தாரிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வடக்கு கோனார் கோட்டை.இங்கு அமர்ந்து அருள் பாலிப்பவர் தான் சங்கிலி மாடசாமி. ஒவ்வொரு வருடமும் மாசி படப்பை அன்று முந்தின நாள் இரவே இங்கு வந்து பக்தர்கள் தங்கி விடுவது வழக்கம். மாசித்திருநாள் அன்று காலையில் தாங்கள் கொண்டுவந்த நேர்ச்சைக்கான கிடாய்களை வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர்.
எப்போதுமே கோபத்தின் உச்சியில் இருப்பதால் சங்கிலி மாடனை சங்கிலியால் கட்டிப் போட்டு இருப்பதாக கூறுவது ஐதீகம். அதனால் தான் சங்கிலி மாடசாமி என்ற பெயர் உருவானதாக தல வரலாறு கூறுகிறது. இந்த குலதெய்வ கோவில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி என்ற இரு மாவட்டங்களின் எல்லையாக அமைந்திருப்பதும் இன்னொரு தனிச்சிறப்பு ஆகும். கோவில்பட்டியில் இருந்து வெள்ளப்பனேரி செல்லும் பேருந்து கோயில் வாசலிலேயே பக்தர்களை இறக்கி விடுவதும் தனிச் சிறப்பாகும்