tamilnadu epaper

சத்தியவான் சாவித்திரி

சத்தியவான் சாவித்திரி


சத்தியவான் சாவித்திரி வரலாறு சிவ புராணத்தில் சொல்லப்படுகிறது.

இக்கதையினை மகாபாரத இதிகாசத்தில் பாண்டவர் வனவாசத்தின் போது பதிபக்தியின் சக்தியை கற்பின் திறத்தினை திரௌபதிக்கு விளக்கும் முகத்தான் மார்க்கண்டேய முனிவர் எடுத்துரைக்கிறார்.


மத்ராபுரி நாட்டின் மன்னன் அசுவபதிக்கு சூரியக் கடவுளின் அருளால் பிறந்த மகளே சாவித்திரி.

பருவமெய்திய சாவித்திரி தகுதியான மன்னனை கணவனாகத் தேடித்தேர்ந்தெடுக்க தந்தையின் அனுமதியோடு நாடெல்லாம் சுற்றி வருகிறாள்.

நாட்டை பகைவரிடம் இழந்த கண்பார்வையற்ற சால்வ மன்னன் மனைவியோடும் மகனோடும் காடுறை வாழ்வில் இருக்கிறான்.


சாவித்ரியின் கண்களில் சத்தியவான் படுகிறான். சத்தியவானைக் கண்டாள்; இதயம் இழந்தாள்; காதல் கொண்டாள்; அவனும் அவ்வண்ணமே;

நாடு திரும்பிய சாவித்திரி தந்தையிடம் தனது விருப்பைச் சொல்கிறாள்; அவ்வமயம் அவண் வந்த தேவ முனி நாரதர் சத்தியவானுக்கு இன்னும் ஓராண்டே ஆயுள் இருப்பென்கிறார்;

சாவித்திரி காதலில் வைராக்கிய சித்தம் உடையவளாக இருந்தாள்;

தன் மகளின் முகங்கோணி பார்த்திராத அசுவபதியும் திருமணத்திற்கு உடன்பட திருமணம் சாவித்திரிக்கும் சத்தியவானுக்கும் இடையே இனிது நடந்தேறியது.

சாவித்திரி சத்தியவானுடன் கானகம் ஏகி குடிலில் வாழ்கிறாள்;

சத்தியவானின் இறப்பின் இரகசியம் தெரிந்தும் அதுகுறித்து சத்தியவானிடம் சாவித்திரி எதுவும் சொன்னாளில்லை.

குறித்த நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னாலிருந்து ஊணும் உறக்கமும் துறந்து கடும் பிரார்த்தனையில் விரதத்தில் அமர்ந்தாள் சாவித்திரி.

குறித்த நாள் காலையில் கணவனும் மனைவியும் விறகு கொணர கானகம் சென்றனர்;

சிறிது நேரத்தில் சாவித்திரி மடியில் மயங்கி விழுந்து உயிர் துறந்தான் சத்யவான்;

உயிரெடுக்க எமதூதர் வந்தனர்; சாவித்ரியின் தவாக்னி தகித்திட பின்வாங்கினர்;

எமனே வந்தான் சத்யவான் உயிரெடுக்க!;

சாவித்திரி தடுக்க எமன் உரைத்தான்:

"உயிர் பிரிந்த உடலை விட்டெழு!மரணம் மனிதரின் விதி'.

சத்தியவான் உடலை விட்டு நீங்கி நின்றாள் சாவித்திரி;

சத்தியவானின் உயிரை கவர்ந்து செல்லும் எமனைத் தொடர்ந்தாள்;

உரைத்தாள் எமனிடம்

"ஒரு அன்புக்கணவனையும் அவனது அன்பு மனைவியையும் விதி பிரிக்கக் கூடாது'"என வேண்டினாள்.

சாவித்ரியின் பதிபக்தியைப் பாராட்டிய எமதர்மன் ஏதாவது வரம் கேள் என்றனன்;

"சாவித்ரி எனது மாமனாரின் சந்ததி அழியலாகாது; மாமனாரின் அரசு சத்தியவானின் புத்திர்களுக்கு கிட்டவேண்டும் எனவரம் கேட்டாள்;

இது கேட்ட எமதர்மன்"பெண்ணே உன் பதிபக்தியின் முன்னர் எந்தன் ஆற்றல் வலுவிழந்தது;

உன் கணவன் உயிர் பெறுவான்; நீ கேட்டதெல்லாம் கிடைக்கும் என்றனன்;

சத்தியவான் உயிரோடு எழுந்தான்; அறம் மாறா கூற்றுவன் திறம் இழந்து மறைந்தான்;

சால்வத்தை ஆண்ட பகைமன்னன் மரணிக்க ,துயுமத் சேனன் கண்ணொளி பெற அனைத்தும் நலமானதே.


இது தொடர்பாக சத்தியவான் சாவித்ரி நாடகத்திற்காக சங்கரதாஸ் ஸ்வாமிகள் எழுதிய பாடல்கள் ரசனைக்கும் பயன் பாட்டுக்கும் தரப்படுகின்றன:


சத்தியவானும் சாவித்ரியும் சந்திப்பின் போது:


சாவித்ரி:

அண்டர் தொழு மாரனோ தண்டுளப வண்ணலோ

அன்பு ரதி என்று மகிழின்பபத மதனோ

கண்டு பணிவார் வினை துண்டுபட மோதிய

கந்தனெனும் எங்களுமை தந்த சுகனோ


சத்யவான்:

ஏனோ என்னை எழுப்பலானாய் மடமானே!

எனக்கதனை யுரைக்கவேணும் 

இசைந்து கேட்பன் நானே!


சாவித்ரி:

சிங்கத்தால் நானைடந்த துன்பந் தீரந்ததாலே செய்த நன்றி எண்ணி வந்தேன் தேர்ந்த அன்பினாலே'


சத்யவான்:

எந்தவூரோ இருப்பு ஏதுபேர் யார் தந்தை

இன்றெனக்கு நீயுரைத்தால்

இன்பங்கொள்ளும் சிந்தை


சாவித்ரி:

அழகிய மத்ராபுரி அஸ்வபதி புத்ரி;

அக்கம் பக்கத்தோர்களென்னை

அழைக்கும் பேர் சாவித்ரி


சத்யவான்:

இன்னும் மணமானதோ

இல்லையோ நீயோது இச்சை கொண்டேன் கேட்பதற்கு லஜ்ஜையுமாகாது.'


சந்தியவானும் சாவித்ரியும் பிரியுங்காலைப் பாடல்


சாவித்ரி:

மன்னா என்னாசை மறந்திடாதீர்

எண்ணம் மாறி நீரங்கே இருந்திடாதீர்!


சத்யவான்:

உன்னாசை நானோ மறப்பதில்லை; 

உண்மையாய் நம்பென் உறுதிச் சொல்லை'

ரூபச்சித்திர மாமரக் குயிலே

உனக்கொரு வாசகத்தினை

நானுரைத்திட நாடிநிற்கிறதால்

அன்பினால் இன்பமாய் இங்கு வா!


சாவித்ரி::அப்படியே இதோ கிட்டவாறேன்.


சத்தியவான்:சித்தமானேன் சமீபத்தில் நீவா!


-K Banumathi Nachiyar Sivagiri