tamilnadu epaper

சனியின் தென் திசை ரகசியம் !!!

சனியின் தென் திசை ரகசியம் !!!

 

 

#சிவாலயங்களில் தனி சன்னதியிலும், நவக்கிரக மண்டபத்திலும் சனீஸ்வரர் தெற்கு நோக்கி இருப்பார். இதற்கு காரணமான விழுப்புரம் மாவட்டம் கோலியனுார் வாலீஸ்வரர் கோயிலுக்கு, சென்று வரலாம்.??

 

#தல வரலாறு: இலங்கையை ஆண்ட ராவணன் சனி பகவானை சிறை பிடித்தான். 

வருத்தமடைந்த சனி, அங்கு வந்த நாரதரிடம் தன் குறைகளை கூறினார். நாரதர் சனியிடம், இன்னும் சில தினங்களில் வாலி இங்கு வருவான். அவனிடம் உன் குறைகளை கூறினால் அவன் உன்னை விடுவிப்பான். அதன் பின் உன் முழுப்பார்வையும் இலங்கையின் மீது இருக்கும் என்று கூறிச் சென்றார். வாலி, தினமும் ஆயிரம் சிவாலயங்களை வணங்குபவன். அதிலும் இவன் கிழக்கு பார்த்து அமர, இறைவன் மேற்கு பார்த்து வீற்றிருக்கும்படி உள்ள சிவாலயங்களை மட்டும் வணங்குவான். ஒரு மேற்கு பார்த்த சிவாலய வழிபாடு என்பது, ஆயிரம் கிழக்கு பார்த்த சிவாலயம் வழிபட்டதற்கு சமம். எனவே இவன் செல்லும் இடங்களில் மேற்கு பார்த்த சிவாலயம் இல்லையென்றால், இவனே லிங்கம் அமைத்து வழிபாடு செய்வான். அவ்வாறு அமைக்கப்பட்டதே இந்தக்கோயில். வாலி வணங்கியதால் சுவாமிக்கு வாலீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது.??

 

?️#தெற்கு நோக்கி அமர்ந்தவர்: வாலியுடன் யாராவது, நேருக்கு நேர் போர் செய்தால், எதிரியின் பலத்தில் பாதி இவனுக்கு வந்து விடும். (எனவே தான் ராமன் மறைந்திருந்து வாலியை வதம் செய்தார்) இவ்வளவு பலமுள்ள வாலியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று ராவணன் நினைத்தான். ஒரு முறை வாலி, மேற்கு பார்த்து சிவலிங்கம் அமைத்து, சிவபூஜையில் இருந்தான். அப்போது ராவணன் வாலியை வதம் செய்ய வந்தான். இதை தன் ஞான திருஷ்டியால் அறிந்த வாலி, ராவணனின் பலத்தில் பாதியைப் பெற்று, தன் வாலால் ராவணனை கட்டி, தன் மகன் அங்கதன் ஆடும் ஊஞ்சலின் மேல் பொம்மை போல கட்டி தொங்க விட்டான்.

அங்கு வந்த வாலியின் மனைவி தாராவிடம்,“தாயே, உன் கணவன் வாலியிடம் சொல்லி என்னை விடுவிக்க சொல். அதற்கு பரிசாக அவன் கண்ணுக்கு எட்டிய துாரம் உள்ள நிலப்பரப்பையும், வைரமும் தங்கமும் மூடை மூடையாக தந்து விடுகிறேன்,'' என கெஞ்சினான் ராவணன்.

வாலியும் ராவணனை விடுவித்து, “நீ என் விருந்தினராக ஆறுமாத காலம் அரண்மனையில் தங்க வேண்டும்,” என்றான். அப்படி தங்கிய ராவணனிடம், சனி பகவானை விடுவிக்கச் சொன்னான் வாலி. தெற்கில் உள்ள இலங்கையை நோக்கி சனியை பிரதிஷ்டை செய்து, உன் பார்வை தென்திசை நோக்கி இருந்து, ராவணனுக்கு தொந்தரவு கொடுத்து அவனையும் அவனது நாட்டையும் அழித்து விடட்டும்,'' என்றான். இதன் அடிப்படையில் சிவாலயங்களில் தென்திசை நோக்கி சனீஸ்வரர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். கோலியனுாரிலும் தென்திசை நோக்கி உள்ளார். 

இங்குள்ள பெரியநாயகி அம்மனை வணங்கினால் மாங்கல்ய, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.??

 

எப்படி செல்வது:விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் 7 கி.மீ.,

நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 04146- 231 159.

அருகிலுள்ள தலம்: திருநாவலுார் பக்தஜனேஸ்வரர் கோயில் (சுந்தரர் பிறந்த ஊர்)