மும்பை, மார்ச் 20
நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.58 கோடி பரிசு வழங்கப்படும் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த 1998ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இறுதியாக இந்த தொடர் 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இத்தகைய சூழலில் தான் இந்த ஆண்டுக்கான போட்டி பாகிஸ்தானில் நடைபெற்றது. அதே சமயம் இந்திய அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளும் துபாயில் நடைபெற்றது. இந்த தொடரின் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய 4 அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 4 அணிகளும் என மொத்தமாக 8 அணிகள் விளையாடின. லீக் போட்டியில் பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகளை வெற்றி கொண்ட இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி துபாயில் 9 ந் தேதி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்களை குவித்தது. 252 ரன் இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3வது முறையாக கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.19.50 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. சம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
ரூ. 58 கோடி பரிசு
முன்னதாக, 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் வென்றிருந்தது. அடுத்த சில மாதங்களிலேயே இந்திய ஒருநாள் அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையையும் கைப்பற்றியுள்ளது. இந்த இரண்டு தொடர்களிலும் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. மிகவும் வெற்றிகரமான அணியாக இந்திய அணி திகழும் நிலையில், சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்காக பிசிசிஐ 58 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.
இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2025 ஆம் ஆண்டு இது இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது ஐசிசி கோப்பை" என சுட்டிக்காட்டி உள்ளது. முன்னதாக, இந்திய அண்டர் -19 மகளிர் அணி 2025 அண்டர்- 19 மகளிர் உலகக் கோப்பையை வென்றிருந்தது. அதைத் தொடர்ந்து இந்திய ஆடவர் அணி ஐசிசி நடத்திய சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் வெற்றி பெற்றுள்ளது. பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் தேவஜித் சைக்கியா மற்றும் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் இந்திய அணியை பாராட்டி உள்ளனர்.