பட்டாசின் கரும்புகையும்
பரப்பியிருக்கும் குப்பையையும்
பாதி எரிந்த நெருப்பையும்
தீக்காயமின்றி
தீபாவளி கொண்டாடட்டும்
துப்புரவு தொழிலாளர்கள்!
ஊர் எல்லையில்
அதுவும்
அதிக சப்தம் வராத
பசுமைப் பட்டாசுகளை
பக்குவமாக வெடிப்போம்
பயமின்றி
பிரியமாய்
தீபாவளியைக்
கொண்டாடட்டும்
பிராணிகள் எல்லாம்!
ஒலி எழுப்பும்
பட்டாசுகளை வெடிப்போம்
சப்தம் கேட்டு
சற்று விலகி
சந்தோஷமாய்
கொண்டாடட்டும்
தீபாவளியை
கண் பார்வையற்றோரும்!
ஒளியைப் பார்த்து
குதூகலமடைய
கொஞ்சம் கொஞ்சமாக
வண்ணப் பட்டாசுகளை
வெடிப்போம்
விரும்பியபடி
தீபாவளியைக்
கொண்டாடட்டும்
காது கேளாதோரும்!
காற்றின்
கழுத்தறுக்குமளவுக்கு
கசியவிடாமல்
குறைத்துக்கொள்வோம்
கெமிக்கல் பட்டாசுகளை
தீபாவளியைக் கொண்டாடட்டும்
கறைபடாத காற்றும்!
கந்தக பூமிக்கு
குந்தகம் ஏற்படுத்தாமல்
அதிரவிடாமல்
உருவாகும்
உள்ளூர் பட்டாசுத்
தொழிற்சாலையில்
விபத்துகளின்றி
இந்தத்
தீபாவளியாவது
கொண்டாடட்டும்
பட்டாசுத் தொழிலாளர்கள்!
மண்ணின் பெருமையைக்
காப்பது இருக்கட்டும்
முதலில்
மண்ணின் வளம்
இருப்பதையாவது
காப்போம் என்பதை
வெடி வைத்துத்
தகர்த்திடாமல்
விடியல் தரும்
தீபமேற்றி
தீபாவளியைக்
கொண்டாடட்டும்
மண்ணில் மரங்கள்!
இப்படி
சுற்றமும் நட்பும்
சூழ்ந்திருக்க
சூழ்ச்சிகளின்றி
அனைவரின் நலன் கருதி
பொதுநலத்துடன்
கொண்டாடுவோம்
மனதிற்குள்
ஒவ்வொருவரிடமும்
ஒளிந்திருக்கும்
நரகாசுரனைத்
தூக்கி எறிந்து விட்டு...
தீபாவளித் திருநாளை!!!
-பிரபாகர்சுப்பையா,
வில்லாபுரம்.