tamilnadu epaper

ஜம்முவில் பாகிஸ்தான் தாக்குதலில் எல்லை பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு: 7 வீரர்கள் காயம்

ஜம்முவில் பாகிஸ்தான் தாக்குதலில் எல்லை பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு: 7 வீரர்கள் காயம்

ஜம்மு:

ஜம்மு எல்லையின் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் படை நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார், 7 வீரர்கள் காயம் அடைந்தனர்.


இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் 4 நாட்கள் நீடித்தது. எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து பீரங்கி தாக்குதல் நடத்தி வந்தது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சர்வ எல்லையில் 2,000 கி.மீ தூரத்துக்கு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் உள்ளனர்.



ஜம்முவின் ஆர்.எஸ் புரா பகுதியில் எல்லை பாதுகாப்பு படை சப் - இன்ஸ்பெக்டர் முகமது இம்தியாஸ் நேற்று முன்தினம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பாக். படைகள் பீரங்கி தாக்குதல் நடத்தியதில் முகமது இம்தியாஸ் வீர மரணம் அடைந்தார். இந்த தாக்குதலில் மேலும் 7 வீரர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.



இது குறித்து ஜம்மு எல்லை பாதுகாப்பு படை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘ ஜம்மு எல்லையில் நடைபெற்ற தாக்குதலில், வீர மரணம் அடைந்த எல்லை பாதுகாப்பு படை எஸ்.ஐ முகமது இம்தியாஸின் உன்னத தியாகத்துக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம்’’ என தெரிவித்துள்ளனர். மறைந்த முகமது இம்தியாஸ் உடலுக்கு எல்லை பாதுகாப்பு படை உயரதிகாரிகள் மலர் வளையம் வைத்து நேற்று அஞ்சலி செலுத்தினர்.