பெரும்பாலும் ஒவ்வொரு ஆலயத்திலும் தல வரலாறு விற்பனை செய்யப்படுகிறது. இவைகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இந்து அறநிலையத்துறை அல்லது கோயில் நிர்வாகம் இவைகளை வெளியிடுகின்றது. 212 பக்கங்கள் கொண்ட மதுரை தல வரலாறு விலை ரூ50தான்.
கோயில் குறித்து விரிவாக இவைகளில் விவரிக்கப்படுகின்றன. புகைப்படங்களும் வரைபடங்களும் இதில் இடம்பெறுகின்றன.கோயில் கட்டுரைகள் எழுதுபவர்கள் அவசியம் தல வரலாறு வாங்க வேண்டும். கோயில் குறித்த கட்டுரையில் அதிகாரபூர்வமான தகவல்களை வெளியிட இது உதவும்.
மதுரை போன்ற பழைய கோயில்களுக்கு பழமையான தல புராணம் உண்டு. அதன் அடிப்படையில் தல வரலாறுகள் எழுதப்படுகின்றன. புதிய கோயில்களுக்கு உள்ளூர் தமிழ் அறிஞர்களால் தல வரலாறுகள் எழுதப்படுகின்றன.
தல வரலாறுகளில் கோயில் கட்டிய காலம், கோயிலை கட்டியவர் விபரம்,கோயில் அமைப்பு, வழிபடும் முறை, தினசரி பூசை முறைகள், திருவிழாக்கள், உபகோயில்கள், இலக்கியங்கள், கல்வெட்டுகள், நிர்வாகம், சிறப்பு கட்டணங்கள், திருப்பணிகள்,
தலப்பதிகங்கள் ஆகியவை காணப்படுகின்றன.
கோயிலை பார்ப்பதற்கு முன்பு தல வரலாறு படித்துவிட்டு கோயிலிற்குள் சென்றால் முக்கியமான இடங்களை தவறவிடாமல் பார்க்க முடியும். ஆகையால் கோயிலுக்குச் சென்றதும் முதலில் தல வரலாறு வாங்கி ஒரு பார்வை பார்த்து விடுங்கள்.
சிறு கோயில்கள் ஆனாலும் தல வரலாறுகள் எழுதப்பட்டு விற்பனைக்கு கிடைக்கின்றன. நான் சென்ற கோயில்களில் கிடைக்கின்ற தல வரலாறுகள் அனைத்தையும் சேகரித்து வைத்திருக்கிறேன்.
பல கோயில்களைப் பற்றிய தொகுப்பு நூல்களும் உண்டு. அவைகள் நாம் செல்லும் கோயில்களுக்கு வழிகாட்டியாக திகழ்கின்றன.
-க.ரவீந்திரன்,
22 பிள்ளையார் கோயில் வீதி, சாஸ்திரி நகர்,
ஈரோடு - 638002.