tamilnadu epaper

திருக்குறள் களஞ்சியம்

திருக்குறள் களஞ்சியம்


ஆசிரியர்: கீழாம்பூர் 

வெளியீடு: கலைமகள் பப்ளிகேஷன்ஸ் 

விலை : ₹450

தொடர்புக்கு: 94450 89079


திருக்குறள் பற்றிய அரிய செய்திகளுடன் வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன், உ.வே. சாமிநாத ஐயர், மூதறிஞர் இராஜாஜி, டாக்டர் மா.இராசமாணிக்கனார் உள்ளிட்ட பலரின் ஆராய்ச்சி கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது.


வள்ளுவர் காலம் - தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி இங்கே உங்கள் பார்வைக்கு:



பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களுக்கு பிறகுதான் திருக்குறள் தோன்றியிருக்க வேண்டும்.


திருக்குறள் ஐம்பெரும் காப்பியங்களுக்கு முன்னும், சங்க நூல்களுக்கு பின்னும் தோன்றியிருக்க வேண்டும்.


சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நூல்களில், திருக்குறளின் சொற்றொடர்கள் காணப்படுகின்றன.


தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை என்ற அப்

பொய்யில் புலவன் பொருள் உரை தேறாய் 

என்பது மணிமேகலை.


தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாளைக் தெய்வம் தொழும் தகைமை திண்ணிதால்

என்பது சிலப்பதிகாரம்.


சங்க இலக்கியங்களில் திருவள்ளுவரைப் பற்றிய குறிப்பே இல்லை. சங்க இலக்கிய கருத்துக்கள் பலவற்றைத் திருக்குறளிலே காணலாம்.


முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பினும் நஞ்சு உண்பர் தனிநாகரிகர்.


பழமையான நட்புள்ளவர்கள் நஞ்சைக் கொடுப்பாராயினும் கண்ணோட்டமுள்ளவர்கள் அதை உண்பார்கள் (நற்றிணை 355) என்பது நற்றிணைச் செய்யுள், இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டதே எனக் கூறுகிறார்.


திருக்குறள் சங்கநூல்களுக்கு பிற்பட்டதே என்பதற்கு பல காரணங்கள் உண்டு. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய நூல்களில் மதுவும் மாமிசமும் கடியப்படவில்லை. ஔவையார், கபிலர் போன்ற பெரும் புலவர்கள் எல்லாம் மதுவும் மாமிசமும் உண்டவர்கள்.

   திருக்குறளிலே இவை இரண்டும் கண்டிக்கப்படுகின்றன. விலக்கப்பட வேண்டியவை என்று வலியுறுத்தப்படுகின்றன.


சங்க காலத்திலே பலதார மணம் ஆதரிக்கப்பட்டு வந்தது.திருக்குறளில் பலதார மணம் ஆதரிக்கப்படவில்லை. 

" வாழ்க்கைத் துணை நலம்" எனும் அதிகாரத்தைப் படிப்போர் இவ்வுண்மையை காணலாம் என்கிறார்.


-ஸ்ரீகாந்த்

திருச்சி.