tamilnadu epaper

திருத்தல வரலாறு

திருத்தல வரலாறு

வெள்ளூர்.

வெள்ளூர். இந்த ஊரில் உள்ளது சிவகாமிசுந்தரி சமேத திருக்காமேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில் அலைமகளாய் ஐஸ்வர்ய மகாலட்சுமி அற்புதமாக அருள்பாலிக்கிறாள். மகாலட்சுமிக்கு ஐஸ்வர்ய மகுடத்தை அருளியதால் இத்தல இறைவனுக்கு ஐஸ்வர்யேஸ்வரர், லட்சுமிபுரீஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு. ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் பலி பீடமும், நந்திகேஸ்வரரும் இருக்க, அடுத்துள்ளது மகாமண்டபம்.


மகாமண்டபத்தின் வலதுபுறம் பிள்ளையார், முருகன், வள்ளி, தெய்வானை திருமேனிகளும், வடக்கு திசையில் ஞான பைரவர், கால பைரவர் திருமேனிகளும் அருள்பாலிக்கின்றனர்.

வலதுபுறம் இறைவியின் சந்நதி உள்ளது. இந்த அன்னைக்கு நான்கு கரங்கள். மேலிரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தி, கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் இன்முகம் மலர அருள்பாலிக்கிறாள். கருவறையில் இறைவன் சிவலிங்கத் திருமேனியில் அருட்பிரகாசமாய் விளங்குகிறார்.


மன்மதன் பற்றிய புராணக் கதை ஒன்று இத்தலத்துடன் தொடர்புடையது - தட்சனின் யாகத்திற்குச் சென்ற பார்வதியை சிவபெருமான் சபித்ததையடுத்து பூலோகத்தில் பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்தாள் அம்பிகை. பராசக்தி பார்வதி என்ற பெயருடன் சிவபெருமானை நோக்கித் தவம் புரியத் தொடங்கினாள். பார்வதியைப் பிரிந்த சிவபெருமான் கயிலையில் அசைவற்ற நிலையில் இருந்தார். இதனால் பிரபஞ்சத்தில் ஓர் அணுவும் அசையவில்லை. இதேநிலை தொடர்ந்து நீடித்தால் பிரபஞ்சமே அழிந்து விடும் என்று அஞ்சிய பிரம்மாவும் விஷ்ணுவும் தேவர்கள் சூழ சிவபெருமானையும் பார்வதியையும் ஒன்றிணைக்க முயன்றனர்.

ஆதலால், தேவர்கள் மன்மதனை அழைத்து சிவபெருமான் மேல் காமபாணத்தை ஏவுமாறு கேட்டுக்கொண்டனர். மன்மதன் அதற்கு மறுப்பு தெரிவிக்க, பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்கள் அவனுக்கு சாபமிட, அதுகண்டு பயந்த மன்மதன் ஒரு புன்னைமர நிழலில் ஒளிந்து கொண்டு ஈசன் மேல் காமபாணத்தை ஏவ முற்பட்டான். நாண் வெளியேறும் முன் மன்மதனை ஈசன் தன் நெற்றிக்கண்ணால் சுட்டெரிக்க, திசைமாறிய காமபாணம் தவம் செய்து கொண்டிருந்த பார்வதியின் மேல் பட பராசக்தி பூப்படைந்து காம சுந்தரியாகப் பொலிவு பெற்று சிவபெருமானை அடைந்தாள். அந்த சிவகாம சுந்தரியே இந்த ஆலயத்தின் இறைவி. காமபாணத்தை எதிர் கொண்டதால் இத்தல இறைவன் காமேஸ்வரர் ஆனார். ரதிதேவி தன் கணவரான மன்மதனுக்கு உயிர்ப்பிச்சை கேட்க, மனமிரங்கிய இறைவன் மன்மதனுக்கு உயிர் கொடுத்து அவன் ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரிவான் எனப் பணித்தார்.


ரதியும் மன்மதனும் இந்த வெள்ளூர் வந்து மன்மதனுக்கு பழைய உடலைத் தர வேண்டுமென சிவபெருமானை வழிபட ஈசனும் மனம் இரங்கி மன்மதனுக்கு உடலைத் தந்தார். இங்கு மகாலட்சுமி ஐஸ்வர்யமகாலட்சுமி என அழைக்கப்படுகிறாள். என்ன காரணம்?

தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தனர். அந்த அமிர்தம் தேவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டுமென எண்ணிய மகாவிஷ்ணு, மோகினி அவதாரமெடுத்தார். அசுரர்களை மயக்கி லவண சமுத்திரம் எனும் உப்பு நிறைந்த கடலில் அசுரர்களை மூர்ச்சையாகும்படி செய்துவிட்டு திரும்பும்போது சிவபெருமானின் பார்வையில் மோகினி தென்பட்டாள். மோகினியின் அழகைக்கண்டு சிவபெருமான் மோகிக்க ஹரிஹரபுத்திரர் எனும் ஐயப்பன் அவதரித்தார். இதைக் கேள்விப்பட்ட மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி கோபம் கொண்டாள். உடனே வைகுண்டத்தை விட்டு வெளியேறி பூலோகம் வந்தாள். இங்கு வில்வாரண்ய க்ஷேத்திரம் எனும் வெள்ளூரில் சிவபெருமானை நோக்கி தவம் செய்யலானாள். பல யுகங்ளாக தவம் செய்தும் சிவபெருமான் காட்சி தரவில்லை. உடனே மகாலட்சுமி தன்னை வில்வமரமாக மாற்றிக்கொண்டு சிவலிங்கத் திருமேனியில் வில்வமழையாகப் பொழிந்து சிவபூஜை செய்தாள்.


பூஜையில் மகிழ்ந்த ஈசன் மகாலட்சுமியின் முன் தோன்றி, ஹரிஹரபுத்திர அவதாரத்தின் நோக்கத்தை விளக்கிக்கூறி மகாலட்சுமியை சாந்தப்படுத்தினார். பின் மகாலட்சுமியை ஸ்ரீவத்ஸ முத்திரையுடன் கூடிய சாளக்ராமமாக மாற்றி மகாவிஷ்ணுவின் இதயத்தில் அமரச் செய்து, மகாவிஷ்ணுவையும் மகாலட்சுமியையும் சேர்த்து வைத்தார். வில்வமரமாகத் தோன்றி வில்வமழை பொழிந்து சிவபூஜை செய்ததின் பலனாக இத்தலத்தில் மகாலட்சுமிக்கு ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை அளித்து மகாலட்சுமியை ஐஸ்வர்யத்திற்கு அதிதேவதையாக மாற்றினார்.

அதனால் இத்தலத்தில் மகாலட்சுமி, ஐஸ்வர்ய மகாலட்சுமி என்ற திருநாமத்துடனேயே திருவருட்பாலிக்கிறாள். இத்தலத்திற்கு வெள்ளூர் என்ற பெயர் வரக் காரணமும் உண்டு. ஒரு சமயம் வலன் என்ற அசுரன் சிவபெருமானை நோக்கி பல யுகங்கள் தவமிருந்தான். தேவர்கள் மற்றும் எந்த தெய்வ சக்தியாலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தினை சிவபெருமானிடமிருந்து பெற்றான். அதனால் கர்வம் தலைக்கேறிய வலன் தேவலோகத்தின் மீது படையெடுத்தான். பயந்த இந்திரன், பிரம்மா விஷ்ணு ஆகியோரை சரணடைந்தான். வலன் மனிதர்களால் மட்டுமே மரணத்தை தழுவுவான்.

எனவே நீ சோழமன்னன் முகுந்தனை முன்னிறுத்தி சண்டையிடு வெற்றி கிட்டும் என்றனர் இருவரும்.


எனவே இந்திரன் சோழ நாடு சென்று முகுந்தனிடம் முறையிட்டான். முகுந்தன் அசுரனாகிய வலனுடன் போரிடச் செல்லும் முன் திருக்காமேசப்பெருமாளிடம் தன்னுடைய மகுடத்தையும், போர்க்கருவிகளையும் வைத்து வழிபட்டு ஆற்றல் பெற்று அசுரனை வென்றான். எனவே இந்த ஊருக்கு வெல்லூர் எனப் பெயர் வந்தது. அது மருவி தற்போது வெள்ளூர் என அழைக்கப்படுகிறது.

பீடத்தில் பைரவர் உண்டு ஆனால் இங்கே லிங்க் பாணத்தில் பைரவர் உண்டு.இரண்டு பைரவர்

ஒன்று காலபைரவர் இன்னொன்று ஞானபைரவர்.

 கல்வி ஞானம் தரும் ஞான பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் ஆராதனை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்கின்றனர்பக்தர்கள்.

வடகிழக்கு பகுதியில் பாதாளத்தில் போகர் சந்நதி உள்ளது.அவரது சித்து தன்மைகள் வியாபித்து நிற்கும் என்று பக்தர்கள் மனதார நினைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

சுமார் 1600 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் கி.பி. 6ம் நூற்றாண்டில் முதலாம் விஜயாதித்த சோழனால் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றதாக கல்வெட்டு கூறுகிறது. 

திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் உள்ள முசிறியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.


-முனைவர் பாலசந்தர் மண்ணச்சநல்லூர்