சென்று வணங்க, வாழ்வில் திருப்பம் நிச்சயம்' என்று திருப்பதி தரிசனத்தைச் சொல்வார்கள். எத்தனை முறை தரிசித்தாலும், சலிப்பைத் தராதது திருப்பதி தரிசனம்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், கிழக்குத்தொடர்ச்சி மலைகளில் ஒன்றாக, நன்றாக அமைந்திருக்கிறது திருப்பதி
திருவேங்கடமலை. இதன் மீதுதான் ஏழுமலையான் கோயில் கொண்டிருக்கிறார்.
பெருமாளின் திருவேங்கடமும், பத்மாவதி தாயார் குடியிருக்கும் திருச்சானூரும், பொதுவில் திருப்பதி என்று ஒரே பெயரிலேயே அழைக்கப்படுகிறது. மலைக்கு மேலுள்ளதை மேல் திருப்பதி என்றும், மற்றதை கீழ் திருப்பதி என்றும் அழைக்கிறார்கள்.
'சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி' ஆகிய ஏழுமலைகளுக்கும் அதிபதி என்பதால் பெருமாளுக்கு 'ஏழுமலையான்' என்றொரு திருநாமம்.
இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் ஒன்றாகும்.
'உலகில் துயரங்கள் அநீதிகள் எல்லாம் அகன்று, சகல நன்மைகளும் பெருகவேண்டும்' என்பதற்காகப் பெரும் யாகம் நடத்தத் தீர்மானித்தார்கள் முனிவர்கள். யாகத்தின் பலனை மும்மூர்த்திகளில் ஒருவருக்கு அளிப்பது என்று முடிவானது. மூவரிலும் தகுதியானவர் யார் என்பதை அறியும் பொறுப்பு, பிருகு முனிவரிடம் விடப்பட்டது.
பிருகு முனிவருக்குப் பாதத்தில் ஞானக் கண் உண்டு. எதிர்காலத்தை உணரும் சக்தியும் உண்டு. இதைப் பயன்படுத்தி மற்றவர்களை மட்டம் தட்டுவதில் அவருக்கு அலாதி இன்பம்! இதனால் உண்டான அவரது கர்வத்தை பங்கம் செய்ய பரம்பொருளும் தருணம் எதிர்பார்த்திருந்தது.
பிருகு முனிவர் முதலில் சத்தியலோகம் சென்றார். அங்கு சரஸ்வதியும் பிரம்மனும் தனித்திருந்தனர். பிருகு, அனுமதி பெறாமல் உள்ளே நுழைந்துவிட்டார்.
பிரம்மா இதைக் கண்டித்தார். இதனால் கோபம் கொண்ட பிருகு, "பக்தனை வரவேற்காத பிரம்மனுக்கு உலகில் பூஜையே நடக்காது" எனச் சபித்துவிட்டு, கயிலாயத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அங்கே, சிவனும் பார்வதியும் தனித்திருந்தனர். அங்கும் தடைகளைப் பொருட்படுத்தாது உள்ளே நுழைந்தார். சிவனாரும் கோபத்துடன் அவரைக் கண்டித்தார். பக்தர்களை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லையே என்று கருதி, ஈசனுக்கும் சாபம் தந்தார் பிருகு. "பூலோகத்தில் உமக்கு இனி லிங்க ரூபமே கிடைக்கும். அதற்கே பூஜை நடக்கும்" என்று சபித்தவர், வைகுண்டத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
அங்கே சயனத்தில் இருந்த திருமால், முனிவரின் வருகையை அறிந்தும் அறியாதவராக அரிதுயில் கொண்டிருந்தார். மிகுந்த கோபம் கொண்ட பிருகு, பகவானின் மார்பில் எட்டி உதைத்தார். ஆனால் எம்பெருமானோ கோபம் கொள்ளவில்லை.
குழந்தை மார்பில் உதைத்தால், தந்தைக்கு சினம் எழுமா என்ன? அதேநேரம், குழந்தையின் துடுக்குத்தனத்தை களைய வேண்டாமா? பிருகுவின் பாதம் நோகுமே என்று பிருகுவின் பாதத்தைப் பிடித்துவிடுபவர்போல் அதிலிருந்த ஞானக் கண்ணையும் பிடுங்கி எறிந்து விட்டார் பகவான்.
பிருகு முனிவர் பகவானின் சாந்தத்தைக் கண்டு, அவரே யாக பலனை ஏற்கத் தகுதியான மூர்த்தி என்று முடிவு செய்தார். ஆனால், தான் வசிக்கும் எம்பெருமானின் திருமார்பை முனிவர் எட்டி உதைக்கிறார், அவரை தன் நாயகன் கண்டிக்கவில்லையே என்ற கோபம் திருமகளுக்கு. எனவே, லட்சுமி கோபம் கொண்டு வைகுண்டத்தில் இருந்து கிளம்பி, பூலோகத்தை அடைந்து தவத்தில் ஆழ்ந்தாள்.
திருமாலும் திருமகளை தேடி பூவுலகத்தைச் சுற்றி அலைந்து வேங்கடமலையில் வந்து ஒரு புற்றில் கண்மூடி அமர்ந்தார். அவருக்கு பசித்தது. இதுபற்றி, நாரதர் தவத்தில் இருந்த லட்சுமியிடம் சொன்னார். லட்சுமி வருத்தமடைந்தாள். நாரதர் அவளிடம் திருமாலின் பசியைப் போக்க உபாயம் சொன்னார்.
அதன்படி பிரம்மாவும், சிவனும் பசுவாகவும் கன்றாகவும் மாற, லட்சுமி தாயார் அவற்றின் எஜமானி போல் வேடமணிந்து, அப்போது அப்பகுதியை ஆட்சி செய்த மன்னனிடம் விற்கச்சென்றாள். மன்னன் வாங்கிய பசு மேய்ச்சலுக்குச் செல்லும்போது திருமால் இருந்த புற்றுக்குச் சென்று பால் சொரிந்தது.
பசுவினை மேய்த்தவர், பசுவின் பின்னால் சென்று புற்றில் பால் சொரிவதைக் கண்டார். கோடரியால் பசுவை அடிக்க முயன்றார். கோடரி தவறி புற்றுக்குள் இருந்த பெருமாளின் தலையில் பட்டு ரத்தம் சிந்தியது. தன் காயம் தீர மூலிகை தேடிச் சென்ற பெருமாள் ஆஸ்ரமம் ஒன்றினைக் கண்டார்.
அது வராஹ மூர்த்தியின் ஆஸ்ரமம்.
அங்கிருந்த வகுளாதேவி (முற்பிறவியில் கண்ணனின் அன்னை யசோதையாக பிறந்தவள்) தன் பிள்ளையான திருமாலின் முகத்தைக் கண்டவுடன் பாசத்தில் மூழ்கினாள். திருமாலும் அன்புடன் வகுளாதேவியை, "அம்மா" என்று அழைத்தார்.வகுளாதேவி தன் பிள்ளைக்கு, 'ஸ்ரீனிவாசன்' என்று பெயரிட்டாள். தன் பிள்ளையின் காயம் தீர மருந்திட்டு, பசிபோக்கிட கனிகளைத் தந்தாள்.
இந்நிலையில், சந்திரிகிரி என்ற பகுதியை ஆகாசராஜன் என்பவன் ஆண்டு வந்தான். பிள்ளை வரம் வேண்டி தன் குலகுரு சுகமாமுனிவரின் ஆலோசனைப்படி புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய நல்ல நேரம் குறித்தான்.
யாகம் செய்யும் இடத்தை செம்மைப்படுத்தும் போது, பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்த தாமரையில், படுத்த நிலையில் ஒரு பெண் குழந்தை கிடைத்தது. தாமரைக்கு, 'பத்மம்' என்று பெயர் உண்டு. எனவே குழந்தைக்கு பத்மாவதி என்று பெயரிட்டான்.
ஸ்ரீராமாவதாரத்தின் போது வேதவதி என்னும் பக்தை, ராமனை மணாளனாக பெற வேண்டி தவம் செய்தாள். ராமனும் அவளிடம், பின்னாளில் அவளை மணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தந்தார். அதன்படியே வேதவதி பத்மாவதியாகப் பிறந்தாள். பிறந்து ஆகாச ராஜனின் மகளாக வளர்ந்து வந்தாள்.
ஸ்ரீனிவாசனுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் இனிதே நடந்து, கல்யாணத்துக்காக குபேரனிடம் கடன்பட்டு, அந்தக் கடனை இன்றுவரையிலும் அவர் செலுத்திக்கொண்டிருக்கிறார். அதன்பின் ஸ்ரீனிவாசன் கலியுகம் முடியும் வரை திருமலையில் சிலாரூபமாக பக்தர்களுக்கு அருள் தரும் விதமாக திருமலையில் எழுந்தருளினார் என்பது தல புராணம்.
"செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!"
என்று மனம் உருகும்படி பாடினார் ஸ்ரீகுலசேகர ஆழ்வார். இதனால் திருவேங்கடமுடைய பெருமாளின் வாசற்படி, 'குலசேகரப்படி' என்று பெயர் பெற்றது.
திருப்பதியின், விசேஷம் முடி காணிக்கையாகும்
காணிக்கை உண்டியலில் பணம் செலுத்தி வணங்குவது மற்றொரு சிறப்பு.
வெளியேறும் வழியில், இனிக்கும் லட்டு பிரசாதம் கொடுப்பார்கள்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் தரிசனம் முக்கியமானது. பக்தர்களுக்கு அனைத்து நலன்களையும் தரத் 'தயார்' என்பதனாலேயே அவர், 'தாயார்'!
தயாரை வணங்கி வெளியேறும் வழியிலும், பிரசாதம் கொடுப்பார்கள்.
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமாலின் அற்புதமான, திருத்தல தரிசனம் நிறைவைத் தருவது என்றால் மிகையாகாது!
-வி.சி. கிருஷ்ணரத்னம்,
காட்டாங்குளத்தூர்.
--------------------------------------------------
F1, மங்கள் ஃபிளாட்ஸ்,
(எஸ்.எஸ்.வி. ஹாஸ்டல் அருகில்)
ஆர்.எம்.ஆர். அவென்யூ,
28, ஞானாம்பிகை தெரு,
காட்டாங்குளத்தூர் & போஸ்ட்
செங்கல்பட்டு மாவட்டம்,
பின் - 603 203.