tamilnadu epaper

தேன் சொட்டும் பாசுரங்கள்

தேன் சொட்டும் பாசுரங்கள்


ஆழ்வார்கள் ஒவ்வொருவரின் எழுத்தும் ஒரு அகராதி என்றால் மிகையாகாது.  


அதிலும் பொய்கையாழ்வாரின் பாசுரங்கள் ஒவ்வொன்றும் தித்திக்கும் தேனமுதம்.  



இதை எடுத்துக் காட்டுவதற்காக அவர் எழுதிய முதல் திருவந்தாதியின் பாசுரம் ஒன்றை பார்ப்போம் :


“சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம், நின்றால் மரவடியாம்; நீள்கடலுள்; -- என்றும் புணையாம்; மணி விளக்காம்; பூம்பட்டாம்; புல்கும் அணையாம், திருமாற்கு அரவு…..”

இப்பாசுரத்தின் விளக்கத்தை படித்து சுவைத்தால் பெருமாளுடனே ஒன்றி விடும் உணர்ச்சி வரும்.  


பொய்கையாழ்வார் ஆதிசேஷனை இவ்வாறு ரசித்து வர்ணிக்கிறார். 


“என்றும் பிராட்டியுடன் ஒன்றியிருக்கும் பெருமாள் என்றும் பிராட்டியுடன் ஒன்றியிருப்பவர். அவர் உலாவ போகும்போது மழையோ வெய்யிலோ அவர் மீது பட்டு துன்புறுத்தாமல் இருக்க தன்னை குடையாக மாற்றி கொண்டு சேவை செய்கிறாராம்.


பெருமாள் அமர்ந்த திருக்கோலத்தின்போது ஆதிசேஷன் சிம்ஹாசனவடிவமாக மாறி பெருமாளின் கம்பீரத்தையும் தேஜஸையும் உயர்த்தி கைங்கர்யம் செய்கிறாராம்.  


பெருமாளின் நின்ற திருக்கோலத்தில் பாதுகையாக மாறி தன் மேல் நிற்கும் பேரு பெருகிறாராம் அதிசேஷன்.


அவரது கிடந்த (ஸயன) கோலத்தில் ஆதிசேஷன் திருபள்ளியாக (மெத்தையாக) வடிவெடுத்து பெருமாள் அலுங்காது சிலுங்காது இருக்குமாறு பார்த்துக் கொண்டு கைங்கர்யம் செய்கிறாராம். அதே போல் திருப்பாற்கடலில் அழுந்தாதபடி தெப்பமாக வடிவெடுத்து பெருமாள் சுகமாக சயனிக்க ஏதுவாக இருந்து பெருமாளை மகிழ்விக்கிறாராம் ஆதிசேஷன்.


தாயார் பெருமாள் அருகிலேயே திருவிளக்காக (மங்கள தீபமாக) வடிவெடுத்து யாவரும் திவ்ய தம்பதியை கண் குளிர காணும்படி செய்கிறாராம்.


கண்ணை பறிக்கும் வஸ்திரமாகவும், தழுவிக் கொள்வதற்கு ஏற்றார்போல் அணையுமாகவும் பல வடிவங்கள் எடுத்து திவ்ய தம்பதிகளுக்கு கைங்கர்யம் செய்து மகிழ்கிறாராம் ஆதிசேஷன்”.


இது வெறும் ஒரு மேற்கோள்தான். ஒவ்வொரு ஆழ்வாரும் பெருமாளை பற்றியும் தாயாரை பற்றியும் அவர்களை சுற்றி சுற்றி வந்து கைங்கர்யம் செய்யும் மாணிக்கங்களை பற்றியுமே நினைத்தபடி வாழ்கிறார்கள். விதவிதமாக அவர்களை பற்றி பாடும் இந்த 12 ஆழ்வார்களின் பாசுரங்கள் ஒவ்வொன்றும் தேனில் மூழ்கிய பலாவாகும்.


அவைகளை படித்து அனுபவித்து மகிழ்ந்தாலே நமது ஜன்மம் சாபல்யமடையும் என்பதில் எந்த ஐயமுமில்லை.


இறை வழிபாடு……

மறை வழிபாடு…….



-ரமா ஸ்ரீனிவாசன்