திங்கள் இரவு மட்டும் திறக்கப்படும் அதிசய சிவன் கோவில்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை அருகில் பரக்கலக்கோட்டை என்னும் ஊரில் அமைந்திருக்கிறது பொதுவுடையார் கோவில். இக்கோவில் திங்கட்கிழமை மட்டும் வாரத்தில் ஒருநாள் நள்ளிரவில் திறக்கப்படுகிறது.
இக்கோவிலில் அம்பாள் கிடையாது. சிவபெருமான் வெள்ளால மர வடிவில் காட்சி தருகிறார். தை மாதம், தைத் திருப்பொங்கல் நாள் அன்று மட்டும் அதிகாலையிலிருந்து மாலை 7 மணி வரை நாள் முழுவதும் நடை திறக்கப்பட்டிருக்கும். அன்று சுவாமியின் மீது சூரிய ஒளி விழுவது சிறப்பம்சம். சுவாமிக்கென்று தனி விமானம் எதுவுமில்லை.
இங்கு சிவலிங்கம் கிடையாது. வெள்ளால மரமே லிங்கமாக பூஜிக்கப்படுகிறது. வெள்ளால மரத்தில் சந்தனக்காப்பு கட்டி சிகப்பு வஸ்திரம் கட்டி சிவலிங்கமாக பாவித்து, பக்தர்கள் வணங்குகிறார்கள்.
மூலஸ்தானத்தில் ஆலமரத்திற்கு முன்பாக சிவனின் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிவபெருமான் முனிவர்களுக்கு காட்சி தந்ததன் அடையாளமாக இந்த பாதம் வைக்கப்பட்டுள்ளதாக ஐதீகம்.
இந்த கோவிலில் திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு 11 மணிக்கு அலங்காரம் நடைப்பெறுகிறது. சுவாமியை 12 மணிக்கு தரிசிக்கலாம்.
சூரிய உதயத்திற்கு முன்பாகவே ஆலயம் மூடப்படுகிறது. சிவராத்திரி, திருகார்த்திகை, அன்னாபிஷேகம் என்று எந்த பண்டிகையும் இங்கே கொண்டாடப்படுவதில்லை. இங்கு சிவனாக கருதப்படும் ஆலமரத்து இலையே, பிரசாதமாக கருதப்படுகிறது. பக்தர்கள் இந்த இலையை வீட்டில் கொண்டு வைத்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்றும் விவசாய நிலத்தில் இட்டால் விவசாயம் பெருகும் என்றும் கருதப்படுகிறது.
இந்தக் கோவில் மூடப்பட்டிருக்கும் நேரத்தில் சுவாமி சன்னதியருகே பூஜை நடைப்பெற்று தான் வருகிறது. அங்கிருக்கும் கதவையே சிவனாக பாவித்து பக்தர்கள் வேண்டிக்கொண்டு செல்கிறார்கள். திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இந்த மரத்தில் தாலி கட்டி, தொட்டில் கட்டி வேண்டிக்கொண்டு செல்கிறார்கள்.
பெண்கள் முடி வளர்வதற்காக தென்னங்கீற்றால் செய்யப்பட்ட துடப்பத்தை காணிக்கையாக செலுத்துகிறார்கள். தென்னங்கீற்றில் உள்ள குச்சிகளை தங்கள் கைகளால் துடப்பமாக செய்து காணிக்கை செலுத்தும்போது தங்களுக்கும் தென்னங்கீற்று போலவே தலைமுடி வளரும் என்ற நம்பிக்கை உள்ளது.
இத்தகைய அதிசயக்கோவிலுக்கு சென்று ஒருமுறையாவது சிவனை தரிசிப்பது சிறப்பாகும்.
அகிலம் காக்கும் அப்பா அண்ணாமலையாரே ஒரு நொடியும் உன்னை
பிரியா வரம் தந்தருள்வாய்
சிவாய நம
சிவமே ஜெயம்
சிவமே தவம்
சிவனே சரணாகதி சிவமே என் வரம்.
வ.கோ. வெற்றித் திருமகள்
அம்பிகா காம்ப்ளெக்ஸ்,
866/497 திருவொற்றியூர் நெடுஞ்சாலை,
பழைய வண்ணாரப்பேட்டை மார்க்கெட் எதிரில்,
சென்னை - 600021.