tamilnadu epaper

பங்குனி - மங்கல மாதம்

பங்குனி - மங்கல மாதம்


பங்குனி தமிழ் மாதங்கள் பன்னிரெண்டில் கடைசி மாதமாகும். சித்திரை தொடக்கம் பங்குனி வரையான தமிழ் மாதங்கள் சூரிய மாதங்களாகும். அதாவது சூரியனைப் பூமி சுற்றுவதனால் ஏற்படும் பூமிக்குச் சார்பான சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே இம் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. சூரியன் இராசிச் சக்கரத்தில் மீன இராசிக்குச் செல்வது பங்குனி மாதப் பிறப்பைக் குறிக்கிறது. இந்த மாதம் முழுதும் சூரியன் மீன இராசியிலேயே சஞ்சரிக்கும். இந்த மாதம் 30 நாட்களைக் கொண்டது. ஆங்கில காலக்கணிப்பின் படி மார்ச்சு மாதம் 15 ஆம் நாளிலிருந்து ஏப்ரல் மாதம் 13 ஆம் நாள் வரையான காலப்பகுதி தமிழ்ப் பங்குனி மாதத்துடன் பொருந்துகிறது.

மங்கலங்கள் நிறைந்த மாதம் என்று பங்குனி மாதத்தைப் போற்றுவார்கள். புராணத்தில் குறிப்பிட்டிருக்கும் சகல மங்கல காரியங்களும் பங்குனி மாதத்தில்தான் பெரும்பாலும் அரங்கேறியிருக்கின்றன என்று போற்றுகின்றனர்.


மலைமகள் உமையவளை சிவபெருமான் மணம் புரிந்த மாதம் பங்குனி என்கிறது புராணம். இந்த மாதத்தில் நாம் செய்கிற சின்னச் சின்ன தானங்கள் கூட மிகுந்த பலன்களைத் தரும் என்றும் ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியத்தைத் தருகிற மாதம் இது என்றும் கூறுகின்றார்கள்.


பங்குனி மாதத்தில் முறையே நாம் தெய்வ வழிபாடுகளைச் செய்து வந்தால், தடைகளெல்லாம் நீங்கும். வெற்றி தேடி வரும் என்பது ஐதீகம்!

அரங்கனை விபீஷணர் பெற்றுக்கொண்ட மாதமும் பங்குனி என்கிறது புராணம். அதுமட்டுமா? அரங்கன் அமர்ந்துகொண்டு, காவிரிக்கும் கொள்ளிடத்துக்குமான இடத்தை திருவரங்கம் என அமைத்து திருத்தலமாக்கியதும் இந்த பங்குனியில்தான் என்கிறது ஸ்தல புராணம்.

சிவனாருக்கு உகந்த மாதம் பங்குனி. அதேபோல் அரங்கனைப் போற்றுகின்ற மாதமாகவும் திகழ்கிறது பங்குனி மாதம். பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திர நாள் ரொம்பவே விசேஷமானது. இந்த நாளில்தான் முருகப்பெருமானை விரதம் இருந்து தரிசிப்பார்கள் பக்தர்கள். அதேபோல், காவடி எடுத்தும் பால் குடம் ஏந்தியும் எண்ணற்ற பக்தர்கள் வழிபடுவார்கள்.

பங்குனி மாத உத்திர நட்சத்திர நாளில் விரதம் இருந்து முருகக் கடவுளைத் தரிசித்தால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


அதேபோல், பங்குனி மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசியை விஜயா ஏகாதசி என்பார்கள். எத்தனை தடைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் நீக்கி, எடுத்த காரியத்தில் வெற்றியை அளிக்கக் கூடியது விஜயா ஏகாதசி. பங்குனி தேய்பிறை விஜயா ஏகாதசியில், பெருமாளை தரிசிப்பதும் துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்வதும் மகத்தான பலன்களை வழங்கும். நாம் பெருமாளிடம் வைக்கிற கோரிக்கைகளெல்லாம் நிறைவேறும் என்கிறார்கள்.


‘இலங்கை சென்று ராவணனுடன் போரிட்டு, சீதையை எப்படி மீட்பது?’ என்று ஸ்ரீராமர் சிந்தனையில் ஆழ்ந்தார். அப்போது முனிவர் ஒருவர் அவரிடம் இந்த விஜயா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கச் சொன்னார். அதன்படி விரதம் இருந்து ஸ்ரீராமர், சீதையை மீட்டு வந்தார் என ஏகாதசி விரத மகாத்மியம் தெரிவிக்கிறது.

விஜயா ஏகாதசி நன்னாளில், வாழை இலையில் ஏழு விதமான தானியங்களை (எள் சேர்க்கக் கூடாது என்பார்கள்) ஒன்றின் மேல் ஒன்றாகப் பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு கலசத்தை வைத்து, அதில் திருமாலின் திருவடியை வரைந்து வழிபட வேண்டும் என்கிறார்கள். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். தம்பதி இடையே விட்டுக்கொடுத்தலும் புரிந்து கொள்ளுதலும் அதிகமாகும். பிரிந்த தம்பதி கூட ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம்.

மறு நாள் துவாதசி அன்று, யாருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்கினால், மகா புண்ணியம் என்றும் பூஜை செய்த கலசம் மற்றும் தானியங்களை பிறருக்கு வழங்கி நமஸ்கரித்தால், சகல ஐஸ்வரியங்களையும் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் .


அதேபோல், பங்குனி மாதத்தில், குருவாரம் என்று அழைக்கப்படும் வியாழக்கிழமைகளில், சிவ வழிபாடு மேற்கொள்வதும் சிவகுருவாகத் திகழும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை மனதார வழிபடுவதும் மகத்தான பலன்களைத் தந்தருளும்!


-அரவிந்தன்

தஞ்சை.