tamilnadu epaper

பழையனூர் தல வரலாறு:

பழையனூர் தல வரலாறு:

பழையனூர் என்ற கிராமம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து நகரப் பேருந்து பழையனூர் சென்று வர இருக்கின்றது. வைகை நதியின் கிளை நதியான கிருதமால் நதி இக்கிராமத்தில் பாய்கிறது. இவ்வூரின் நடுநாயகமாக அருள்மிகு சந்தனக் கருப்பண்ண சுவாமி கோயில் உள்ளது. அருள்மிகு அங்காள ஈஸ்வரி உடனாய் சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் அருள்மிகு சந்தனக் கருப்பண்ண சுவாமி மூர்த்தம் கொண்டுள்ளார். சுந்தர மகாலிங்கம் சுவாமி சுயம்புவானவர். வயலை உழும்போது கொழுமுனை தட்டியே, இவர் மூர்த்தம் கொண்டுள்ளது தெரிய வந்ததாகக் கூறுவர். இன்றும் லிங்கத் திருமேனியில் கொழுமுனை தழும்பு இருப்பதைக் காணலாம். அங்காள ஈஸ்வரி சிங்கப் பல்லுடன் நின்ற திருக்கோலத்தில் சாந்த வடிவில் அருள் பாலிக்கின்றாள். சகல விதமான பூதப் பிசாசு அசுர சக்திகளைத் தன்னுள் அடக்கி அருள் சக்தி ஸ்வரூபமாய் அம்பாள் மூர்த்தம் கொண்டு இருக்கின்றாள். சுந்தர மகாலிங்கம் சன்னதியில் அதிகார நந்தியும், அங்காள ஈஸ்வரி சன்னதியில் அருள் பலிபீடமும் உள்ளன.

 

அம்பாள் சன்னதியில் அர்த்த மண்டபத்தில் அருள்மிகு விநாயகரும், அருள்மிகு கார்த்திகேயரும் அருள் பாலிக்கின்றனர். சுவாமி சன்னதியில் உயர்ந்த கொடிமரம் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் மாசி மாதம் சிவராத்திரியின் போது கொடியேற்றமும், தேர் ஓட்டத் திருவிழாவும் நடைபெறுகின்றது.

 

ஶ்ரீ சந்தனக் கருப்பண்ண சுவாமி சதுரகிரி மகாலிங்க மலையில் இருந்து வந்தவர் என்று வரலாறு கூறுகிறது. மகாலிங்க மலையில் அமைந்த பலாவடி கருப்பன் அழகில் மயங்கிப் பம்பை கொட்டும் நபர்கள் சந்தனக்கருப்பரைக்

குழந்தை போல் தொட்டில் கட்டி எடுத்து வந்திருக்கின்றனர். பழையனூர் கிருதமால் நதிக்கரையில் இவர்கள் ஓய்வு எடுக்கும் போது கீழே வைத்த சந்தனக் கருப்பண்ண மூர்த்தி அங்கேயே நின்று விடுகிறார். அவரை எடுத்துப் போக இயலவில்லை. அசரீரி வாக்காக "நான் வர வேண்டிய இடம் இது தான்; இங்கேயே சுந்தர மகாலிங்கம் கோவிலில் மூர்த்தம் கொள்வேன்" என்று வந்துள்ளது. இவரைச் சுற்றிப் பரிவார தேவதைகள் சுவாமிகள் மூர்த்தம் கொண்டுள்ளனர். சிவராத்திரி களரி விழாவும், பாரிவேட்டையும் பார்க்கத் தகுந்த விழாக்கள் ஆகும்.

 

அனைத்து ஜாதியினரும் ஶ்ரீ சந்தனக் கருப்பண்ண சுவாமியைக் குலதெய்வமாக வழிபடுகின்றனர். சாமிகூட்ட மறவர் வம்ச கறுப்பு ராஜா வகையறா இக்கோயிலின் அறங்காவலர்களாக உள்ளனர். இவ்வூரில் ஒரு காலத்தில் அக்ரஹாரம் இருந்துள்ளது. அதன் காரணமாக இன்றும் அந்தண சமூகத்தினருக்கும் ஶ்ரீ சந்தனக் கருப்பண்ண சுவாமி குலதெய்வமாக அமைந்து உள்ளது. இக்கோவில் பூசாரிகளாகப் பூக்கட்டும் பண்டார வம்சத்தினர் உள்ளனர்.

 

பழையனூர் நீலி இக்கோவிலில் குடல் பிடுங்கி இராக்கச்சியாக அமைதி ஸ்வரூபத்தில் அருள் பாலிக்கின்றாள். மேலும் ஶ்ரீ சந்தனக் கருப்பு கர்ப்பக்கிரத்தில் அருள்மிகு சீலைக்காரி அம்மன் அரூபமாக அருள் பாலிக்கின்றாள். அருள்மிகு முத்து வீரப்பசுவாமி தனிச் சன்னதியில் அருள் பாலிக்கின்றார். அருள்மிகு மகாலிங்க சுவாமி, அங்காள ஈஸ்வரி சன்னதியில் அசைவப் புழக்கம் இன்றும் கிடையாது.

 

அருள்மிகு சந்தனக்கருப்பண்ண சுவாமி பேசும் தெய்வமாக அருள் பாலிக்கின்றார். பக்தர்கள் வேண்டிய வரத்தினை அளிக்கின்றார். இவரைக் குலதெய்வமாக உடையவர்கள் மாந்த்ரீகம் போன்றவைகளை விரும்ப மாட்டார்கள். கருப்பு பெயர் சொல்லி விபூதி இட்டுக் கொண்டால் போதுமானது. சகல தோஷங்களும் சூரியனைக் கண்ட பனி போல நீங்கி விடும். ஶ்ரீ சந்தனக் கருப்பையா நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.

 

ஶ்ரீ சந்தனக் கருப்பையா சுவாமியை உளமார வேண்டிக் கொண்டால் அவர் உடன் வந்து நமது வேண்டுதலை நிறைவேற்றுவார். நாம் முழுமையாக அவரிடம் நம்பிக்கை வைத்துச் சரணடைய வேண்டும். நமது வேண்டுதல் உண்மையானதாக நன்மை தரக் கூடியதாக இருக்க வேண்டும். ஶ்ரீ சந்தனக் கருப்பையா அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.

 

R. பிருந்தா இரமணி,

சென்னை - 600020