பாகிஸ்தான் ராணுவம் ஜிஹாதி மற்றும் தீவிரவாத அமைப்புகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது என கூறப்படுவது உண்டு. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக திகழ்கிறார் 3 நட்சத்திர அந்தஸ்து பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி. இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ஐஎஸ்பிஆர்) இயக்குநராக பதவி வகிக்கும் இவர், பாகிஸ்தான் ராணுவத்தின் முகமாக செயல்படுகிறார். குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான மோதல் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இந்தியாவுக்கு எதிராக பல்வேறு பொய்யான தகவலை தெரிவி்த்தார்.
சர்வதேச தீவிரவாத அமைப்பான அல்-காய்தாவின் நிறுவனரும் அமெரிக்காவின் உலக வர்த்தக மைய தாக்குதலுக்கு (9/511) காரணமானவருமான ஓசாமா பின்லேடனின் நெருங்கிய கூட்டாளிதான் சுல்தான் பஷிருதீன் முகமது. அணு விஞ்ஞானியான இவர், அணு ஆயுத தொழில்நுட்பத்தை அல்-காய்தா அமைப்புக்கு வழங்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் அல்-காய்தா, தலிபான் இயக்கங்களுக்கு ஆயுதங்களை வழங்கியதாகவும், நிதி திரட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இவருடைய பெயர் இடம்பெற்றுள்ளது.
இவருடைய மகன்தான் இப்போது பாகிஸ்தான் ராணுவத்தின் முகமாக செயல்படும் ஷெரீப் சவுத்ரி என்பதை உலக நாடுகள் நினைவுகூர வேண்டும். தீவிரவாதத்தால் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ளதாக நீலிக் கண்ணீர் வடிப்பவரும் இவர்தான்.
பாகிஸ்தான் ராணுவத்தில் ஜிகாதி கலப்பு இருப்பதற்கான மற்றொரு உதாரணம் அதன் ராணுவ தளபதியான ஜெனரல் அசிம் முனீர். இவருடைய தந்தை ஒரு ஆசிரியர்-மதகுரு. அணு விஞ்ஞானியாகவும் இருந்த முனீரின் தந்தை, ஒருகட்டத்தில் முரட்டுத்தனமாக நடந்து கொண்டு மேற்கத்திய நாடுகளுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.