tamilnadu epaper

பிரபல போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் இந்தியா

பிரபல போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் இந்தியா

வாஷிங்டன்:

2025-ம் ஆண்டுக்கான மெகா கோடீஸ்வரர்கள் (பில்லியனர்கள்) பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில், 902 பில்லியனர்களுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 200 பில்லியனர்களுடன் இந்தியா 3-வது இடத்திலும் உள்ளன.


ஒவ்வொரு ஆண்டும் உலக கோடீஸ்வர்களின் பட்டியலை அவர்களது சொத்து மதிப்பின் அடிப்படையில் ஆய்வு செய்து போர்ப்ஸ் இதழ் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவில் கடந்தாண்டில் 813-ஆக இருந்த பில்லியனர்கள் எண்ணிக்கை நடப்பாண்டில் 902-ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம், மெகா கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. எலான் மஸ்க் (342 பில்லியன் டாலர்), மார்க் ஸுகர்பெர்க் (216 பில்லியன் டாலர்), ஜெப் பெசோஸ் (215 பில்லியன் டாலர்) ஆகியோர் இந்த பட்டியலில் முன்னிலையில் உள்ளனர்.


இதற்கு அடுத்தபடியாக, சீனா 450 பில்லியனர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு 1.7 டிரில்லியன் டாலர். பைட் டான்ஸ் நிறுவனர் 65.5 பில்லியன் டாலருடன் முதலிடம் வகிக்கிறார்.


அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து இந்த பட்டியலில் இந்தியா 205 பில்லியனர்களுடன் இந்தாண்டு மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்தாண்டை விட நடப்பாண்டில் 5 பேர் பில்லியனர் இந்த பட்டியிலில் புதிதாக இடம்பிடித்துள்ளனர். இதில், முகேஷ் அம்பானி (92.5 பில்லியன் டாலர்) , கவுதம் அதானி (56.3 பில்லியன் டாலர்) முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.


மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அமெரிக்கா, சீனா, இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


சர்வதேச சொத்து மதிப்பு கணிசமாக அதிகரித்ததையடுத்து, நடப்பாண்டில் பில்லியனர்களின் எண்ணிக்கை 3,000-த்தை தாண்டியுள்ளது. இவர்களின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பு 16.1 டிரில்லியன் டாலர் ஆகும்.