tamilnadu epaper

மகிழ்வாய் இருப்பது எப்படி

மகிழ்வாய் இருப்பது எப்படி

 

            அமலன் கண்ணாடி முன் நின்று நிறைவாகப் புன்னகைத்தான். கருநீல ஜீன்ஸ் பேண்டும், இள நீல முழுக்கைச் சட்டையும் அவனுக்கு கச்சிதமாகப் பொருந்தி இருந்தது. தலைமுடியை இன்னொரு தரம் படிய ப்ரஷ் பண்ணிக் கொண்டான். இன்று ரூபிகாவினுடைய தம்பியின் நிச்சயதார்த்தம். அதற்குதான் கிளம்பிக் கொண்டு இருக்கிறார்கள். இன்று விசேஷத்தில், மாப்பிள்ளை ராபர்ட்ஸைக் காட்டிலும் தானே எடுப்பாக இருக்கப் போகிறோம். என்ற துள்ளலுடன், மேசை மேலிருந்த ப்ரஸ்லெட் செயின், மோதிரம், இவைகளை ஒவ்வொன்றாக அணிய ஆரம்பித்தான்.

                "அமலன்! ரெடியாகி விட்டாயா" என்று கேட்டுக் கொண்டே வந்த ரூபிகா ,ஸ்கார்லட் கலர் மைசூர் புடவை வகையில் தேவதையாகத் தெரிந்தாள். இளம் மென்னகையுடன் இருந்த ரூபிகாவின் முகம் சுருங்கியது. " என்னப்பா! நீ ஸ்கூல் யூனிஃபார்மில் இருப்பது போல் ட்ரஸ் பண்ணியிருக்க" என்ற ஒரு கமன்ட்டோடு, அவன் மகிழ்வை உடனடியாக காலி செய்தாள். " நான்தான் அந்த இளம் க்ரீம் கலர் ஜீன்ஸும், ஸ்கார்லட் கலரில் ஃபுல் ஆர்ம் சட்டையும் எடுத்து வைத்திருக்கிறேனே; நீ பார்க்கலையா. அதுதான் நான் கட்டியிருக்கும் மைசூர் சில்க் புடவைக்கும் மேட்சாக இருக்கும். போய் மாத்திட்டு வா". என்றாள். 

                      அமலன் ஒரு கணம் தான் யோசித்தான் " சரி, ஃரூபி! நான் டரெஸ்ஸை மாத்திட்டு வரேன்.இட் வில் டேக் ஜஸ்ட் டூ மினிட்ஸ். யு வெயிட் அவுட் சைட்" என்றான்.

      ‌‌ அவள் வெளியே போனதும், கதவைத் தாளிட்டவன், தன்னை இரண்டொரு செல்ஃபி எடுத்து அதை தன் ஃபோன் ஸ்டேட்டஸில் பதிவு செய்து, முகநூலிலும், "ஹவ் ஆம் ஐ லுக்கிங் டுடே" என்னும் வினாவுடன் பதிவிட்ட பிறகுதான் அவனுக்கு மனது எளிதாகியது 

                   வேகமாக அவன் உடுப்பை மாற்றி முடிக்கவும், ரூபிகா அறைக் கதவை மெல்ல தட்டும் சப்தம் கேட்பதற்கும் சரியாக இருந்தது.

                   வெளியே வந்த அமலனைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியுடன்" யு லுக் ரேவிஷிங்" என்ற கமன்ட்டுடன் அவன் கையைப் பற்றி " வா போகலாம். ஆல்ரெடி வீ ஆர் ரன்னிங் லேட்"

என்றாள்.

               அமலன் தன் அலைபேசியில் தன் படத்திற்கு வந்த " இருதய" குறியீடுகளையும்" உயர்த்தின கட்டை விரல் குறியீடுகளையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவனை, ரூபியின்,"லெட் அஸ் டேக் எ செல்ஃபி டு போஸ்ட்" என்ற குரல் அழைத்தது. அதற்கும் அவன் தயாராகி நிற்கையில், அவனை அவனே பாராட்டிக் கொண்டான்." மகிழ்வுடன் இருக்கத் தெரிந்தவன்டா, நீ" என்று.

 

-சசிகலா விஸ்வநாதன்