tamilnadu epaper

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3,000 ஆக உயர்வு

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3,000 ஆக உயர்வு

பாங்காக், மார்ச் 29


மியான்மர் நாட்டில் நேற்று 2 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. நில நடுக்க இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை எட்டும் என அஞ்சப்படுகிறது. 2000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அடுத்துடுத்து நில நடுக்கம் ஏற்பட்டு வருவதால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.


தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது. சகாயிங் நகரின் வடமேற்கே 16 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், இதன் அதிர்வுகள் தென்மேற்கு சீனா மற்றும் தாய்லாந்தில் உணரப்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட 12 நிமிடங்களில் 6.4 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் மியான்மரை அதிரச் செய்தது. இதைத் தொடர்ந்து 4 முறை லேசான அதிர்வுகள் ஏற்பட்டன. இது தாய்லாந்திலும் மிகப் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது.


அடுத்தடுத்து அதிர்வுகள் ஏற்பட்டதால், மியான்மரின் மண்டலே நகரில் உள்ள மசூதிகள், வீடுகள் இடிந்து விழுந்தன. இங்குள்ள பழமையான அரண்மனையும் இடிந்து விழுந்தது. வரலாற்று சிறப்பு மிக்க துறவிகளுக்கான மடாலயம் பாதிக்கப்பட்டது. இர்ரவாடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த 90 ஆண்டுகள் பழமையான பாலம் உடைந்தது. 5 நகரங்கள் கட்டிட இடிபாடுகளை சந்தித்துள்ளன. அணை ஒன்றும் உடைந்து உள்ளது. இதனால் நீர்மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகளுக்குள் நீர் புகும் ஆபத்தும் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையில் நிலநடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட 6 பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.


மியான்மர் ராணுவம் தலைமையிலான அரசின் மூத்த ஜெனரல் மின் ஆங் லாயிங் தொலைக்காட்சியில் தோன்றி கூறியதாவது:


மண்டாலே, சகாயிங், மாக்வே, வடகிழக்கு ஷான் மற்றும் பகோ பகுதிகளில் அவசரகால நிலையை அரசு பிறப்பித்து உள்ளது. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றுடன் ரத்த நன்கொடைக்கான தேவையும் அதிகரித்து காணப்படுகிறது. நிவாரண பணிகளுக்கு ஐ.நா. அமைப்பு 50 லட்சம் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனை தொடர்ந்து ஆயிரம் படுக்கைகளுடன் சிகிச்சையளிக்க மருத்துவமனையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அவசரகால சிகிச்சை துறையும் தயாராக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.


இன்றும் நிலநடுக்கம்


மியான்மரில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது.


இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தலைநகர் பாங்காக்கில் வானுயர்ந்த கட்டடங்கள் குலுங்கின. கட்டுமானப் பணி நடந்து வந்த 30 மாடி கட்டடம் மண்ணுக்குள் புதைந்ததில், 10 பேர் உயிரிழந்தனர்; 90க்கும் மேற்பட்டோரை காணவில்லை என அந்நாட்டின் ராணுவ அமைச்சர் பும்தம் வெசாயசாய் தெரிவித்தார். மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் தென்கிழக்கு ஆசிய பகுதியில் உள்ள மலேசியா, வங்கதேசம், லாவோஸ், சீனா மட்டுமின்றி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது.


இந்தியா 15 டன்


நிவாரணப் பொருள்


பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், மியான்மர், தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் கவலை அளிக்கிறது. அந்நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக பிரார்த்திக்கிறேன். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது. உதவிக்கரம் நீட்ட தயார் நிலையில் இருக்கும்படி நம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரு நாட்டு அரசுகளுடனும் நம் வெளியுறவுத்துறை தொடர்பில் உள்ளது என கூறியுள்ளார்.


நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பிவைத்துள்ளது. இந்திய விமானப்படையின் (ஐஏஎப் சி130) விமானம் மூலமாக உத்தரப் பிரதேச மாநிலம் ஹிண்டன் விமான நிலையத்தில் இருந்து சுமார் 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் கூடாரங்கள், தூங்கும் பைகள், போர்வைகள், சாப்பிடத் தயாராக இருக்கும் உணவுகள், தண்ணீர் சுத்திகரிப்பான்கள், சுகாதாரப் பொருள்கள், சூரிய விளக்குகள், ஜெனரேட்டர் பெட்டிகள், அத்தியாவசிய மருந்துகள் (பாராசிட்டமால், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், கேனுலா, ஊசிகள், கையுறைகள், பஞ்சுகள், சிறுநீர் பைகள் உள்ளிட்ட பிற பொருள்கள்) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் பாதிக்கப்பட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளின் நிவாரணத்துகாக 5 மில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளதாகக் கூறினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் “மியான்மர் அதிகாரிகளுடன் பேசியுள்ளேன். மியான்மருக்கு உதவி செய்யப் போகிறோம்’ என்றார்.


தாயகம் திரும்பிய


இந்திய பயணிகள்


மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தாய்லாந்தின் பாங்கக் நகரிலிருந்து இந்திய பயணிகள் பலர் விமானம் மூலம் புதுடெல்லி விமான நிலையத்துக்கு இன்று காலை வந்தடைந்தனர்.


நிலநடுக்கம் ஏற்பட்டதால் நேற்று பாங்காக்கில் உணவு, தண்ணீர், கால் டாக்ஸி கிடைக்காமல் தாங்கள் மிகுந்த சிரமப்பட்டதாகவும், எனினும், நல்லபடியாக தாங்கள் தாயகம் திரும்பியதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்று பயணிகள் கூறினர்.


உள்நாட்டு போரால் மியான்மர் பாதிக்கப்பட்டு உள்ள சூழலில், தகவல்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. இணையதள சேவையும் நிறுத்தப்பட்டு உள்ளது, சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் வெளிவருவதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்நாட்டில் ஏற்பட்டு உள்ள உள்நாட்டு போரால் 30 லட்சம் பேர் புலம் பெயர்ந்து உள்ளனர். 2 கோடி பேர் உதவி தேவைப்படுவோராக உள்ளனர் என ஐ.நா. அமைப்பு தெரிவித்து உள்ளது.