மன்னரின் யானையொன்று அண்டை அயல் நகரங்களுக்குச் சென்று பயிர்களை அழித்துக்கொண்டும், மக்களில் பலரை நசுக்கிப் படுகாயப்படுத்திக் கொண்டும் மக்களுக்கு தொந்தரவுக் கொடுத்துக் கொண்டிருந்தது. இது மன்னருக்கு தெரிந்தும் மன்னர் கண்டு கொள்ளவில்லை.
இதனால் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சென்று முல்லாவிடம் மன்னரின் யானையால் தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பற்றிக் கூறினார்கள். அதற்கு முல்லா, மக்களிடம் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த யானையைப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப்போட்டு விடுங்கள். மன்னரிடமிருந்து யாராவது அங்கு வந்து கேட்டால் முல்லாதான் யானையைக் கட்டிப் போடச் சொன்னதாகக் கூறி விடுங்கள் என்றார்.
பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து கஷ்டப்பட்டு யானையைப் பிடித்து ஒரு பெரிய மரத்தில் கட்டிப் போட்டுவிட்டனர். இத்தகவல் அறிந்த மன்னர் முல்லாவை வர வழைத்து உமக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் என்னுடைய யானையைக் கட்டிப் போட்டிருப்பீர் என்று முல்லாவிடம் கேட்டார்.
மன்னர் பெருமானே! தங்களது யானை தனக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து வைக்கச் சொல்லி எங்கள் ஊர் மக்களிடம் கேட்டது. நாங்கள் பெண் யானை தேடிக் கண்டுபிடிப்பதற்குள் யானை கோபித்துக் கொண்டு தவறான செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதற்காகத் தான் யானையைக் கட்டி வைத்திருந்தேன் என்றார்.
மன்னர், யானையாவது தனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்பதாவது? யாரிடம் நீ விளையாடுகிறாய்? என்று கேட்டார். மன்னர் பெருமானே! வேண்டுமானால் தாங்களே நேரில்வந்து தங்களின் யானையையே விசாரித்துப் பாருங்கள். நான் சொல்வது பொய் என்றால் தாங்கள் கொடுக்கும் தண்டனை ஏற்றுக்கொள்கிறேன் என்று முல்லா கூறினார்.
மன்னர் தமது பரிவாரங்களுடன் முல்லாவை அழைத்துக் கொண்டு முல்லா சொன்ன பகுதிக்குச் சென்றார். வழி நெடுக்கிலும் விளை நிலங்களுக்கும், பழ மரங்களுக்கும் ஏற்பட்டிருந்த கடுமையான சேதத்தை அழிவைக் கண்டு அதிர்ச்சியடைந்த மன்னர், தனது யானையால் தான் இந்த பேரழிவு நிகழ்ந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்.
மன்னர் யானையினால் நடந்த சேதத்திற்கு நஷ்ட ஈடு வழங்க சொல்லி அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார். பிறகு அந்த யானையைக் கொண்டு சென்று அரண்மனையில் கட்டிப் போடச் சொல்லி உத்திரவிட்டார். ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முல்லாவுக்கு மனதார நன்றி தெரிவித்தார்கள். மன்னரும் முல்லாவின் அறிவைப் பாராட்டினார்.
எதிர்கால வாழ்க்கை
ஒரு நாள் கந்தன் தெரு வழியாக நடந்து செல்லும் போது ஒரு குடிசையின் வாசலை கடந்து செல்லும் போது குடிசைக்குள் இருந்து ஏதோ ஒரு சத்தம் கேட்க உள்ளே சென்று பார்த்தார். அந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப் பெண். அவளுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான். அவள் துணிகளை தைத்துக் கொடுத்து கொண்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறாள் என்பது கந்தனுக்கு ஏற்கனவே நன்கு தெரியும்.
வீட்டுக்குள் தாயும் மகனும் எதோ சண்டைப் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து, இங்கே என்ன நடக்கிறது? என்று கந்தன் கேட்டார். அதற்கு அந்த பெண் கந்தன் அவர்களே, இவன் எனது ஒரே மகன். ஒழுங்காக பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறான், அறிவுரை சொல்லிப் பார்த்தேன், அடித்தும் பார்த்தேன் ஆனால் பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்கிறான், என்றாள் தாய் வேதனையோடு.
தம்பி நீ பள்ளிக்கூடம் போக வேண்டியது அவசியம் என்று கந்தன் சிறுவனுக்கு புத்திமதி கூறினார். நான் பள்ளிக்கூடம் போகப்போவதே இல்லை என்று அடம்பிடித்தான். கந்தன், அந்தப் பையனின் தாய் தைப்பதற்காக வைத்திருந்த விலை உயர்ந்த துணி ஒன்றை எடுத்து துண்டாகக் கிழித்து விட்டார். அதைக்கண்டு தாயும் மகனும் அதிர்ச்சியும் திகைப்பு அடைந்தனர். அம்மா..! கந்தன் விலை உயர்ந்த துணியைக் கிழித்து விட்டரே? என்று பையன் கேட்டான்.
பள்ளிக்கூடம் போகாததால் உன் எதிர்கால வாழ்க்கையையே பாழாகும்போது, இந்த விலை உயர்ந்த துணி பாழானது பெரிய விஷயமா என்றார் கந்தன். இந்தச் சொற்கள் அவன் மனத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கிற்று. உடனே புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பாட்டான். அவன் சென்ற பிறகு கந்தன் தாம் கிழித்த துணியின் மதிப்புக்கேற்ற விலையைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார்.
கழுதையால் கிடைத்த பாடம்
ஒரு நாள் ராஜாவின் நண்பர் ஒருவர் ராஜாவை பார்க்க அவரது வீட்டிற்கு வந்தார். ராஜா அவர்களே! உங்களுடைய கழுதையை எனக்கு இரண்டு நாட்களுக்கு தயவுசெய்து இரவலாகத் தாருங்கள் இரண்டு நாட்கள். கழிந்ததும் திருப்பி தந்து விடுகிறேன் என்றார் நண்பர்.
அந்த நண்பர் முன்பும் இரண்டொரு தடவை கழுதையை இரவல் வாங்கிச் சென்று கழுதைக்கு சரியான உணவளிக்காமல் பட்டினிப்போட்டிருந்தார். அதேபோல் சொன்னமாதிரி கழுதையை திருப்பி தருவதும் இல்லை.
அதனால் ராஜா, நண்பரே! என் கழுதை இப்போது வீட்டில் இல்லை. அதை வேறு ஒருவர் இரவலாகக் வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார் என்றார். சரி நான் வேறு யாரிடமாவது கேட்டுப் பார்க்கிறேன் என்று சொல்லி நண்பர் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட சமயம் பார்த்து ராஜாவின் வீட்டுக் கொல்லைப் புறத்தில் கழுதையின் கத்தும் குரல் கேட்டது.
ராஜா அவர்களே கழுதை வீட்டில் இருக்கிறது போலிருக்கிறதே! யாரோ இரவலாகக்கொண்டு சென்றதாகக் கூறினீர்களே என்று நண்பர் வியப்புடன் கேட்டார். ராஜாவுக்குக் கோபம் வந்த விட, நான் சொன்ன சொல்லை நீர் நம்பவில்லை. ஒரு கழுதையின் சொல்லைத்தான் நம்புகிறீர். என் மீது நம்பிக்கை இல்லாத ஒருவருக்குக் கழுதையை இரவல் தரக்கூடாது என்பதற்காகத்தான் வேறு ஒருவர் அதைக் கொண்டு சென்றிருக்கிறார் என்று சொன்னேன் என்றார். நண்பர் அவமானமடைந்து அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்.
சோம்பேறிகள் எத்தனை பேர்
ஒரு நாள் சந்தை கூடும் இடத்தில் ஒரு உயர்ந்த இடத்தில் ரவி ஏறி நின்று கொண்டு, ரவி மக்களைப் பார்த்து, அன்பார்ந்த நண்பர்களே? உங்களில் எத்தனை பேருக்கு உடல் உழைப்பு இல்லாமல் வீட்டில் இருந்தவாறே ஆயிரக்கணக்கில் சம்பாதித்து சுகபோக வாழ்வு வாழ வேண்டுமென்று ஆசைபடுகிறவர்களுக்கு நான் ஒரு வழி சொல்கிறேன். யாரெல்லாம் என்னுடைய யோசனைகளைக் கேட்கத் தயாராக இருக்கிறீர்களோ அவர்கள் மட்டும் கைதூக்குங்கள் என்றார் ரவி. அங்கே இருந்த அத்தனைபேரும் கை தூக்கினார்கள்.
ரவி தாம் நின்றிருந்த இடத்தை விட்டுக் கீழிறங்கி நடக்கத் தொடங்கினார். என்ன ரவி அவர்களே, ஒன்றும் சொல்லாமல் செல்லுகிறீர்களே? என்று மக்கள் கேட்டனர்.
நண்பர்களே நமது ஊரிலே எத்தனை சோம்பேறிகள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பினேன். என்னையும் சேர்த்து இந்த ஊரில் உள்ள எல்லோருமே சோம்பேறிகள்தான் என்ற உண்மை எனக்கு தெரிந்து விட்டது. இனி எனக்கு இங்கே என்ன வேலை? போய் வருகிறேன் என்று கூறியவாறே ரவி செல்லத் தொடங்கினார். அங்கிருந்த மக்கள் திகைப்படைந்தவர்களாக ரவி சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
உலகில் சிறந்தது
மன்னரிடம் சில காலம் தெனாலிராமன் அமைச்சராக இருந்தபொழுது, தெனாலிராமனை எப்போதுமே மன்னர் தன்னுடனே வைத்துக் கொண்டு உரையாடி மகிழ்வார். மன்னர் உணவருந்தும் சமயத்தில் தெனாலிராமனையும் தம்முடன் அமர்ந்து உணவருந்தச் சொல்வார். ஒருநாள் மன்னரும் தெனாலிராமனும் வழக்கம் போல அருகருகே அமர்ந்து உணவருந்தினார்கள். அப்போது மன்னர் தெனாலிராமனை நோக்கி, தெனாலிராமன் உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்று நான் நினைக்கிறேன். நீர் என்ன நினைக்கிறீர்? என்று கேட்டார்.
தெனாலிராமன் ஆமாம் மன்னர் அவற்றையே நானும் நினைக்கிறேன் என்றார். உடனே மன்னர் சமையற்காரனை அழைத்து, இனிமேல் அன்றாடம் ஏதாவது ஒரு உருவத்தில் பீன்ஸை உணவுடன் சேர்ந்து விடு என்று உத்திரவிட்டார். நாள் தவறாமல் உணவில் பீன்ஸை சேர்த்துக் கொண்டதால் மன்னருக்கு அந்த காயின் மீது சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டது. அன்றைய தினம் இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதும் பீன்ஸ் பரிமாறப்பட்டது. மன்னர் தெனாலிராமனை நோக்கி உலகத்திலேயே மிகவும் மோசமான காய் பீன்ஸ் என்று தான் நினைக்கிறேன். நீர் என்ன நினைக்கிறீர்? என்று கேட்டார். ஆமாம் மன்னர் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நான் அறிந்ததில் இவ்வளவு மோசமான சுவையே இல்லாத பீன்ஸைப் போன்ற காயைக் கண்டதே இல்லை என்றார் தெனாலிராமன்.
என்ன தெனாலிராமன்? பத்து நாட்களுக்கு முன்னால் நான் கேட்டபோது உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்றீர்கள். இப்பொழுது தலை கீழாக மாற்றிப் பேசுகிறீரே என்று மன்னர் கேட்டார். தெனாலிராமன் சிரித்துக் கொண்டே மன்னர் அவர்களே! என்ன செய்வது? நான் தங்களிடம் அல்லவா வேலை பார்க்கிறேன்.
தளபதியின் சமரசம்
மன்னர் முல்லாவுக்கு ஒரு வீடு ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்தார். ஆனால் மன்னர் அந்த வீட்டின் மாடிப்பகுதியை ஒரு படைத்தளபதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். மாடியில் வசிக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பாள். அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருந்தது. முல்லா இரண்டு மூன்று தடவை படைத்தளபதியைச் சந்தித்து அவர் மனைவியிடம் கொஞ்சம் மெதுவாக மாவு இடிக்குமாறு சொல்லும்படி கேட்டுக் கொண்டார்.
அதற்கு படைத்தளபதியோ முல்லாவிடம், எனக்காக மன்னர் அளித்த வீடு. என் வீட்டில் என் மனைவி எப்படி வேண்டுமானாலும் மாவு இடிப்பாள். அதைக் கேட்பதற்கு நீ யார்? என்று அதட்டி அனுப்பி விட்டார். மறுநாள் முல்லா கீழே உள்ள தன் வீட்டுப் பகுதியைக் கடப்பாறையைக் கொண்டு இடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த படைத் தளபதி மாடியில் இருந்து கீழே என்ன செய்கிறாய் என்று கேட்டார். கீழ்ப்பக்கம் இருக்கும் என் வீட்டை முற்றிலுமாக இடித்துத் தள்ளி விட்டுப் புதிதாக கட்டத் தீர்மானித்திருக்கிறேன் என்றார் முல்லா.
அதற்கு படைத்தளபதி, முல்லாவிடம் கீழ்வீடு முழுவதையும் இடித்தால் மேல் வீடு என்ன ஆகும் என்று யோசித்தீரா? என்று கோபத்தோடு கேட்டார். மேல் வீட்டைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். எனக்குச் சொந்தமான வீட்டை நான் இடிக்கிறேன். பதறிப்போன படைத்தளபதி முல்லாவிடம் சமரசம் பேச முற்பட்டார். நாம் இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம் என்றார் தளபதி. நான் எப்போதுமே யாருக்கும் நண்பன் தான்! என்று கூறிவிட்டு முல்லா சிரித்தார்.
கருப்புத்துணி
ஒரு தடவை ரஞ்சித் வியாபர நிமித்தமாகப் பெரிய நகரம் ஒன்றுக்குச் சென்றிருந்தார். அங்கே அவருக்குத் துணையாக ஒருவன் வந்து சேர்ந்தான். அவனுக்கு எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படுவதையே தன்னுடைய நோக்கமாகக் கொண்டிருந்தான். அந்தப் பெரிய நகரத்தைப் பார்த்ததும் அவனுக்குப் பிரமிப்பாக இருந்தது. சந்துப் பொந்தெல்லாம் மக்கள் இவ்வாறு நிரம்பி வழிகிறார்களே, தாங்கள் தங்கியுள்ள விடுதியை எவ்வாறு கண்டு பிடிப்பார்கள்? அவ்வளவு ஏன், மக்கள் தங்களைத் தாங்களே கூட அடையாளம் கண்டு கொள்வது சிரமந்தான். இவ்வாறெல்லாம் அந்த சந்தேகப் பிராணி பேசிக் கொண்டேயிருந்தான்.
அந்த சந்தேகப் பிராணியும் ரஞ்சித்தும் அன்று இரவைக் கழிப்பதற்காக ஒரு விடுதியில் சென்று தங்கினார். ரஞ்சித் அவர்களே எனக்கு ஒரு யோசனை சொல்லுங்கள். நான் காலையில் கண் விழிக்கும் போது என்னையே மறந்து விட்டால் அடையாளம் கண்டு கொள்ள ஏதேனும் வழி உண்டா? என்று கேட்டான். அதற்கு ரஞ்சித் ஒரு கருப்புத் துணியை எடுத்து உமது ஒரு காலில் சுற்றிக் கட்டி விடும். காலையில் உறங்கி எழுந்ததும் உமது காலைப் பாரும். கருப்புத் துணி காலில் இருந்தால் நீர்தான் அது என்ற அடையாளம் கண்டு கொள்ளலாம் என்றார்.
சந்தேகப் பிராணி ரஞ்சித் கூறியதைப் போலவே, தன் காலில் ஒரு கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு படுத்து விட்டான். அவன் நன்றாக உறங்கிய பிறகு அவன் கட்டியிருந்த கருப்புத் துணியை அவிழ்த்துத் ரஞ்சித் தம்முடைய காலில் கட்டிக் கொண்டார். அவன் காலையில் எழுந்தவுடன், ஐயோ நான் காணாமல் போய் விட்டேன். என் காலில் இருந்த துணியைக் காணவில்லை என்று கூச்சலிட்டுக் கொண்டே அருகில் படுத்திருந்த ரஞ்சித்தின் காலைப் பார்த்து விட்டு நான் அகப்பட்டுவிட்டேன் நீர்தான் நான் என்று சத்தம் போட்டான். ரஞ்சித் சிரித்துக்கொண்டே எழுந்து அந்தச் சந்தேகப் பிராணிக்கு ஏற்பட்டிருந்த சந்தேகப் பிரமையை அகற்றி அவனுக்குத் தெளிவை உண்டாக்கினார்.
பெரிய மரத்தில் இருக்கும் சிறிய பழம்
ஒரு நாள் ராமன் மல்பெரி மரத்தின் நிழலில் அமர்ந்து களைப்பாறிக் கொண்டிருக்கையில், அந்த வழி வந்த ஒரு இளைஞன் அதே மரத்தின் அடியில் களைப்பாருவதற்காக வந்தான். மரத்தின் வேர்களின் மீது தலைவைத்துப் படுத்துச் சற்று நேரம் களைப்பாறினான். அவன் பார்வை ராமனின் மீது விழுந்தது. பிறகு அண்ணாந்து பார்த்தவன் மரத்தில் இருந்த சின்னஞ்சிறு பழங்களைப் பார்த்தவுடன் சத்தமாகச் சிரித்தான். ராமன் அவனிடம் ஏன் சிரிக்கிறீர்? என்று கேட்டார்.
கடவுளின் முட்டாள் தனத்தை எண்ணிச் சிரிக்கிறேன் என்றான். கடவுள் அப்படி என்ன முட்டாள் தனம் செய்தார் என்றார். இந்த மரம் எவ்வளவு பெரிதாக படைத்தவன் இந்த மரத்தின் பழங்களை மட்டும் மிகச் சிறியதாக படைத்த கடவுளின் முட்டாள் தனத்தை நினைத்தேன் சிரித்தேன் என்றான். ராமன் பதில் ஒன்றும் பேசாமல் வாயை மூடிக் கொண்டார்.
சிறிது நேரம் கழித்து காற்று பலமாக அடிக்க மரக்கிளைகளில் இருந்த சின்னஞ்சிறு பழங்கள் உதிர்ந்து கொட்டத் தொடங்கின. சில பழங்கள் அந்த இளைஞனின் தலையின் மேலும் விழுந்தது. ராமன் அவனைப் பார்த்து நண்பரே உமது தலைமீது ஏராளமான பழங்கள் விழுந்திருக்கும் போலிருக்கிறதே? என்று கேட்டார். ஆமாம் காற்றில் அவை உதிர்ந்து விட்டன என்றான் வழிப்போக்கன். கடவுள் புத்திசாலித்தனமாக இந்த மரத்தில் பெரிய பழங்களை உற்பத்தி செய்திருந்தாரானால், உமது தலை என்ன ஆகியிருக்கும் என்று நினைத்துப்பாருங்கள் என்றார் ராமன். வழிப்போக்கனான அந்த இளைஞன் யோசித்தான்.
நண்பரே, எதையும் ஒரு காரணத்தோடுதான் இறைவன் உருவாக்கியிருப்பார். இவ்வளவு பெரிய மரத்தினுடைய கிளைகளின் நிழலில் மனிதர்களும் விலங்குகளும் களைப்பாருவதற்கு வந்து தங்குவார்கள் என்பதை முன் கூட்டியே அறிந்த கடவுள் நிழல்தரும் பெரிய மரத்தின் பழங்களை மிகவும் சிறியனவாகப் படைத்திருக்கிறார் என்றார் ராமன். இந்த மரத்தின் பழங்களை மட்டும் பெரிதாக படைத்திருந்தால் தன் நிலைமை என்னவாகியிருக்கும் என்பதை எண்ணி, மறுகணம் மனதிற்குள் கடவுளிடம் மன்னிப்புக் கேட்டான். தனக்கு புரிய வைத்த ராமனைப் பார்த்து, தங்களை பார்க்க ஒரு மகான் போல் காட்சியளிக்கிறீரே? தாங்கள் யார் என்று கேட்டான். நானும் உம்மைப்போல ஒரு மனிதன் தான் என்றார் ராமன்.
Thanks and regards
A s Govinda rajan
17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai
7358228278